ஒரு காதல் ஜோடியின் ஒருநாள் வாழ்க்கை!



‘‘இப்போது ரிலேஷன்ஷிப் மங்கி சிச்சுவேஷன்ஷிப், வெக்கேஷன்ஷிப், மைக்ரோஷிப், மேக்ரோஷிப் என்று புதுப்புது பேர் கண்டுபிடிச்சிருக்காங்க. ரொம்ப குறுகிய காலத்துக்கு அல்லது வெக்கேஷனுக்கு மட்டும் சேர்ந்து இருப்போம் என்ற மனநிலையில் இன்றைய காதலர்கள் இருக்கிறார்கள். ‘என்ன மாதிரி பிரச்னை வந்தாலும் நான் உன்னையும், நீ என்னையும் விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்ற மனநிலை இருந்தால் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை.

எந்தப் பிரச்னையையும் நேரம் ஒதுக்கிப் பேச ஆரம்பிச்சால் தீர்க்க முடியும்...’’ என தத்துவம் பேசுகிறார் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை இயக்கியுள்ள ஸ்வினீத் எஸ்.சுகுமார். இதில் ரியோராஜ் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ளார். ரிலீஸ் பரபரப்புக்கு மத்தியில் இயக்குநரிடம் பேசினோம்.

காதல் கதையில் புதுசா என்ன சொல்லப்போறீங்க?

இது ரொமான்டிக் டிராமா. நியூ ஏஜ் லவ் பற்றிய ஸ்டோரி. காதல், காமெடி, எமோஷன், சென்டிமென்ட் என  எல்லாம் கலந்த கதை. காதல் கதையில் புதுசா என்ன சொல்ல முடியும் என்று கேட்கலாம். பொதுவாக காதல் கதையில் பையனும் பொண்ணும் எப்படி மீட் பண்ணினாங்க, எப்படி காதலிச்சாங்க, அவர்கள் சந்திச்ச பிரச்னை என்ன? ஹேப்பியா இருந்தார்களா என்பதுதான் படமாக இருக்கும்.

இதில் ஒரு காதல் ஜோடியின் ஒரு நாள் வாழ்க்கையைச் சொல்லியுள்ளேன். முதல் நாள் காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் கதை மறுநாள் காலை 6  மணிக்கு முடியற மாதிரி திரைக்கதை எழுதியுள்ளேன்.

அந்த 24 மணிநேரத்தில் என்னவெல்லாம் நடந்தது... அதில் அவர்களின் சண்டை, பிரிவு என எல்லாம் இருக்கும். த்ரில்லர் படங்களில் சம்பவம் நடந்தபிறகு அது எப்படி நடந்தது என்ற பரபரப்பு இருக்கும். அது மாதிரி காதலர் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் த்ரில்லிங் சம்பவத்தை வெச்சு இந்தப் படம் பண்ணியிருக்கிறேன்.

ரியோராஜ் லுக் மாறியிருக்கே?

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தில் நான் உதவி இயக்குநர். அதிலிருந்து ரியோ ப்ரோவுடன் பழக்கம். எனக்கு அண்ணன் மாதிரின்னு சொல்லலாம். இந்தக் கதையை எழுதியதும் ஆரம்பத்திலேயே அவரிடம் சொன்னேன்.ரியோ அண்ணன் நிஜத்தில் ஜாலியா பழகுபவர். இதுல அவர் வாசு என்ற கேரக்டர்ல வர்றார். 

வாசு எப்படின்னா ரொம்ப ரிசர்வ்டு டைப். அதிகமா பேசாத கேரக்டர். இந்த மாதிரி கேரக்டரை ரியோ அண்ணன் பண்ணினால் ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு அவரிடம் கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. பண்ணலாம்னு சொன்னார்.

ரியோ அண்ணாவை ஃப்ரெஷ்ஷா காட்டணும்னு நினைச்சு காஸ்டியூம், லுக் என எல்லாத்தையும் மாத்தினேன். போஸ்டர் பார்த்துட்டு பலர் லுக் நல்லாயிருந்ததா சொன்னாங்க. நீங்களும் அதையே சொல்லியிருப்பது மகிழ்ச்சி.

ஸ்கிரிப்ட் முடிச்சதும் இரண்டு வாரத்துக்கு எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் ஒர்க் ஷாப் நடத்தினோம். அதுல ஒவ்வொரு கேரக்டர் எப்படி நடக்கணும், எப்படி பேசணும், எப்படி சிரிக்கணும்னு ரிகர்சல் பார்த்தோம். ரெண்டு நாள் ரிகர்சலில் வாசு கேரக்டராகவே மாறினார் ரியோ அண்ணன்.அவர் மட்டுமல்ல, எல்லோரும் புரிஞ்சு பண்ணாங்க. 

அதனால செட்ல டீடைல் பண்ணணும் என்ற தேவை இல்லாமல் இருந்துச்சு. டேக்ல ‘இதப் பண்ணுங்க. இத கொஞ்சம் ஜாஸ்தியா பண்ணுங்க’ என்று சின்னச் சின்ன கரெக்‌ஷன் சொல்ற வேலை மட்டும்தான் எனக்கு இருந்துச்சு.

ஹீரோயின் பார்த்த முகம் மாதிரி தெரியுதே?

கோபிகா ரமேஷ். மலையாளத்துல ஹீரோயினா நடித்துள்ளார். இந்தக் கதைக்கு தமிழ் பேசும் நாயகிதான் வேணும் என்பதில் தெளிவா இருந்தேன். நிறைய பேரிடம் ஆடிஷன் பண்ணினேன். இவருடையப்ரொஃபைலும் வந்துச்சு.கேரளாவிலிருந்து வந்து ஆடிஷன்ல கலந்துகிட்டாங்க. பெர்ஃபாமன்ஸுக்காக இரண்டு பக்கம் சீன் பேப்பர் கொடுத்து பேசி நடிக்கச்  சொன்னேன். அழகா பண்ணினார். மலையாளக் கலப்புடன்தான் பேசினாங்க.

என்னோட தயக்கத்தைப் பார்த்துட்டு அரை மணி நேரம் கேட்டு உச்சரிப்பை சரி செய்து பண்ணினார். அது கன்வின்சிங்கா இருந்துசு.அவருடைய தோற்றமும் நடிச்ச விதமும் கரெக்ட்டா இருந்ததால் செலக்ட் பண்ணினேன். அவருடைய பலமே பெர்ஃபாமன்ஸ். எவ்வளவு பெரிய எமோஷனல் சீன் கொடுத்தாலும் பண்ணுவாங்க. பிச்சு உதறியிருக்கிறார்.

இனிமே பெர்ஃபாமன்ஸ் ரோல் என்றால் அவரைக் கூப்பிட்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இவர்களுடன் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி இருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி சிறப்புத் தோற்றம் பண்ணியிருக்கிறார்.

பாடல் டிரெண்டிங்கில இருக்கு..?

யுவன் ஷங்கர் ராஜா சாருக்குதான் நன்றி சொல்லணும். பாடல் சூப்பரா வந்திருக்கு. பாடலும் சரி, பின்னணி இசையும் சரி... வேற லெவலில் கொடுத்தார்.  இரண்டு சிங்கிள் ரிலீஸ் பண்ணிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ். அந்தப் பாடல்கள் டெக்னோ இசையா இருந்தாலும் எமோஷனல் பாடலும் இருக்கு. 

அதை இன்னும் வெளியே விடல.யுவன் சாருடன் வேலை செய்ததை மறக்க முடியாது. நான் யுவன் சாரின் ரசிகன். ஆரம்பத்துல யுவன் சாரிடம் வேலை வாங்க தயக்கமா இருந்துச்சு. நான் புதுசு. அவர் லெஜண்ட். சஜஷன் சொல்லலாமா, வேண்டாமான்னு தயங்கினேன்.

முதல் முறை சந்திச்சபோதும் சரி, கம்போஸிங் டைமிலும் சரி அவ்வளவு கம்ஃபோர்ட்டா இருந்தார். எந்த இடத்திலும் என்னை முதல் பட இயக்குநர் போல் ட்ரீட் பண்ணவில்லை. நான் எதாவது சொன்னாலும் அதைத் தாராளமா கேட்பார். 

ரீரிக்கார்டிங் டைம்ல பக்கத்துல கூப்பிட்டு வெச்சு இது ஓகே வான்னு கேட்டுத் தெரிஞ்சுக்குவார்.
ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம். ‘சித்தா’ பண்ணியவர். பிரமாதமான விஷுவல் கொடுத்தார். ‘சித்தா’ ரியலிஸ்டிக் படம். இது கலர்ஃபுல் படம். அதனால போட்டோகிராஃபியில் நிறைய வித்தியாசம் பார்க்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜா புரொடக்‌ஷன்ல படம் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு விளையாட்டா கேட்பாங்க. அதுமாதிரிதான் எனக்கு இந்தப் படம். அறிமுக இயக்குநருக்கு யுவன் சார் மியூசிக் என்பதே பெரிய விஷயம். அவரே தயாரிப்பாளரா கிடைப்பது அதைவிட பெரிய விஷயம். 

இந்தக் கதைக்காக மியூசிக் பண்ணத்தான் சாரிடம் போனேன். சார் கதை கேட்டுட்டு ‘நான் பண்றேன்’னு சொல்லிட்டார். ரியோ அண்ணாவுக்கும் யுவன் சாருக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு. அந்தச் சமயத்தில் ரியோ அண்ணன் அவரிடம் என்னைப் பற்றியும், நான் அவரை மியூசிக்குக்காக சந்திச்சதைப் பற்றியும் சொல்லியுள்ளார்.

மறுபடியும் யுவன் சார் வரச் சொல்லி ‘அந்தக் கதைதானே...’ என்று நான் சொன்ன கதையை ஞாபகம் வெச்சு கேட்டதோடு, தானே படம் தயாரிப்பதாக சிக்னல் கொடுத்தார்.
தயாரிப்பாளராக அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். 

படத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுத்தார். அப்பார்ட்மென்ட் வீடு பார்த்தோம். செட்டாகவில்லை. உடனே செட் போட்டுக் கொடுத்தார். பால்கனி ஷாட் ஏழாவது மாடியில் எடுக்கணும். ரிஸ்க் அதிகம் என்பதால் அதுக்கும் செட் போட்டுக் கொடுத்தார். படம் நல்லா வந்திருப்பதால் யுவன் சார் ஹேப்பி.

எஸ்.ராஜா