சிறுகதை - நேர்மையே... உந்தன் பேர் பெண்மையோ?
குழந்தைகள் விளையாடும் டோமினோ கட்டைகளை நேர்க்கோட்டில் அடுத்தடுத்து அடுக்கி வைத்ததைப் போன்று வரிசையாக குடியிருப்புகள். இங்கு வசிப்பவர்களுக்கு நுழைவுவாயில், கழிவறை, குளியலறையுடன் வறுமையும், விரக்தியும் கூட பொது.அதில் இரண்டாவது குடியிருப்பில், 250 சதுர அடியில், குறுஞ்செய்தியாக பெண் பார்க்கும் படலம். ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்பது போன்ற தோரணையில் துவங்கினார் தரகர்.“பையனுக்கு ஏற்கனவே இந்தப் பொண்ணை நல்லாத் தெரியும். அதனால பொண்ணுக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேச வேண்டியதை பேசிடலாம்...” வெற்றிலை பாக்கை குதப்பியபடி வார்த்தைகள் விழுந்தன.
 தங்கநகை மாளிகையின் மாடலாக அமர்ந்திருந்த பையனின் அம்மா, “எங்ககிட்ட இல்லாததா புதுசா பொண்ணு கொண்டு வந்துடப் போறா? உங்க ஆசைக்கேத்தபடி செய்ங்க...” என்றார். “அம்மாவுக்கு நல்ல மனசு. வெளிப்படையா பேசறாங்க...” ஜிங்சாக் வாசித்தார் தரகர்.“அபி பேர்ல பேங்க்ல மூணு லட்சம் எஃப்.டி இருக்கு. அவ கல்யாணத்துக்குன்னு சேர்த்து வெச்ச நகை மொத்தம் அஞ்சு சவரன் இருக்கு. அப்பறம் மாப்பிள்ளைக்கு ரெண்டு சவரன்ல காத்திரமா செயின் போடறோம். அவருக்கு பிடிச்ச மாதிரி புது மாடல் பைக் வாங்கி தந்துடறோம்...” என்றாள் அபியின் அம்மா மரகதம்.
“இப்ப என் பையன் போட்ருக்கானே இந்த மோதிரம், செயின், பிரேசுலெட்டு... இதெல்லாம் சேர்த்து மூணு சவரன். நான் பொதுவா சொன்னேன்...” என்றாள் தங்கநகை மாளிகை. கைகளைக் கட்டிக் கொண்டு இதுவரை பொறுமையாக இருந்த அபிநயா, “உங்க பையனுக்கு கை, கால், மூளை எல்லாம் நல்லாத்தானேம்மா இருக்கு? அப்பறம் ஏன் இப்படி பிச்சை எடுக்கறீங்க? நான் பொதுவா சொன்னேன்...” என்றதும் ஆவேசமாக எழுந்தாள் பையனின் அம்மா.
“எழுந்துர்றா. ஏதோ நீ ஆசைப்பட்டேன்னுதான் இந்தக் குடிசைக்குள்ள வந்தேன்... ஊரெல்லாம் கடன் வெச்சிருக்கிற இவளுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது...” “அம்மா... அம்மா... கொஞ்சம் நில்லுங்க... மரகதம்... கவலைப்படாதே.. நான் அவங்களை சமாதானப்படுத்தறேன்...” என்ற தரகரை கண்களால் எரித்தாள் அபி. கலங்கி நின்றாள் மரகதம்.“நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசையெல்லாம் நீ இவனுக்கு அழு...” நொந்து கொண்டாள் அபி.
சுவரில் மாலையோடு மாட்டப்பட்டிருந்த தன் அப்பாவின் புகைப்படத்தின் முன் கூனியிருந்த தீபத்திரியை நிமிர்த்தினாள். விளக்கேற்றி வணங்கிவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
அபியை தினமும் பின் தொடர்பவர்களுக்குத் தெரிந்த தகவல்கள்... ஆதம்பாக்கத்திலிருந்து காலை 8 மணிக்கு பேருந்து பிடித்து தி.நகர் பேருந்து நிலையத்தில் இறங்கி பத்து நிமிடங்கள் நடப்பாள்.
அவளிடம் இருக்கும் ஒரே கைப்பையின் ஜிப்பை நான்கு முறை மாற்றிவிட்டாள். அவளின் கைப்பையை திருடும் எண்ணம் உள்ளவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. கைப்பை திறந்ததும் முதலில் தும்முவீர்கள். பிறகு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். கைப்பேசியைக்கூட சில சமயம் மறந்துவிடுவாள். ஆனால், அவளின் கைப்பையின் நிரந்தர குடிமக்கள் மிளகு ஸ்ப்ரே மற்றும் சுயமுன்னேற்ற புத்தகங்கள்.
சரியாக 9 மணிக்கு செல்வந்தர் தேவேந்திரனுக்கு சொந்தமான கறுப்பு பென்ஸ் காரை துணி வைத்து துடைத்துக் கொண்டிருப்பாள். அவர் வண்டியில் ஏறியதும், காரை அவரின் ‘சரஸ்வதி புத்தக அச்சக’த்திற்கு ஓட்டிச் செல்வாள்.தேவேந்திரன் பெரும்பாலும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் கலைமகளின் ஆண் உருவமாகத்தான் காட்சி தருவார்.
மோதிரங்களின் நெரிசலால் விரல்கள் சற்று வீங்கியிருக்கும். தொழிலிலும் தண்ணீர் கலக்காத தரமான பசும்பால். இவர் அச்சிட்டு வெளியிட்ட, வழிமுறைகள் மற்றும் விடையுடன் கூடிய பல போட்டித் தேர்வுத் தாள்களின் தொகுப்பு புத்தகங்களினால், இவருக்கு தெரிந்தும், தெரியாமலும் பல அரசு அதிகாரிகளும், பொறியாளர்களும் இவரால் உருவாகி இருக்கின்றனர். அச்சகத்தின் முன் வீற்றிருந்த சரஸ்வதி சிலையை வணங்கிவிட்டு வேகமாக அச்சக அலுவலகத்தினுள் நுழைந்தார் தேவேந்திரன். பின் தொடர்ந்தாள் அபி. “மணியைக் கூப்பிடும்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல முக்கியமான க்ளையண்ட்ஸ் வருவாங்க. அவங்களுக்கு ஸ்வீட், காரம் வாங்கி வரணும்...” “சார்... இன்னிக்கு மணி லீவு...” “ஓ... ஆமா. மறந்துட்டேன்...”
“நான் வாங்கிட்டு வர்றேன் சார். வழக்கமா வாங்கற கடைதானே?”
“ஆமாம்மா. வாங்கிட்டு வந்து என் பி.ஏ.கிட்ட கொடுத்துடு. அப்பறமா வண்டி எடுத்துட்டு வீட்டுக்குப் போ. மேடம் கோயிலுக்குப் போகணும்னு சொன்னாங்க...” கோயில் வாசலில் அமர்ந்திருந்த அனைத்து பிச்சைக்காரர்களுக்கும் பாரபட்சமில்லாமல் ஆளுக்கு பத்து ரூபாய் என தானம் செய்தாள் தேவேந்திரனின் மனைவி ஸ்ரீவள்ளி. தன் காலணிகளை அணியும் முன் மற்றொரு முறை மூலவரை வணங்கிவிட்டு, பார்க்கிங் பகுதியில் காத்திருந்த காருக்கு வந்தவளின் முகத்தில் கலவரம் இருந்தது.“வீட்டுக்குத்தானேம்மா...” என ஓட்டுனர் சீட்டிலிருந்த அபி கேட்டதற்கு மிக சன்னமாக “ம்...” என்றாள்.
“அம்மா... என்னாச்சு..? இன்னிக்கு சாமி உங்ககிட்ட சரியா பேசலையா?”
“ம்... பேசினாரு. ஆனா, நான் சொல்றதை கேக்காம என் பொண்ணு சொல்றதைத்தான் கேக்கறாரு. அதான் எனக்கு கவலை...”“ஓ... இப்பல்லாம் சாமியும் வாட்ஸ் அப்ல பேச ஆரம்பிச்சிட்டாரா? உங்க புஜ்ஜி என்ன சொன்னாங்களாம்?”“ஆமா... நான்தான் அவளை கண்ணு, புஜ்ஜின்னு கொஞ்சிக்கிட்டிருக்கேன்.
அவளுக்கு இந்தியாவுக்கு வர்ற நினைப்பே இல்லை அபி. ஆஸ்திரேலியால ஹையர் ஸ்டடீஸ் முடிச்சிட்டு வர்றேன்னா. அப்பறம் ப்ரொஜெக்ட்ன்னா. இப்ப வேலை கிடைச்சிடுச்சாம். அடுத்து கல்யாணம் ஆகிடிச்சின்னு சொல்லப் போறா. நம்ம அரியலூர் ஜோசியர் எப்பவோ சொன்னார். உங்க பொண்ணும் நீங்களும் பிரிஞ்சி இருக்கற காலம் குறையணும்னா தம்பதியா குலதெய்வம் கோயிலுக்குப் போய் நெய் விளக்கு போடணும்னு. உங்க சாருக்குத்தான் இந்த பரிகாரத்துல எல்லாம் இஷ்டம் இல்லையே. பரிகாரத்தை செய்யாத பெரிய கடன்காரியா நிக்கறேன்...”அபி சட்டென்று சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிறே?”
“இல்லை. நீங்க கடன்காரின்னா எனக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு யோசிச்சேன். என் ஃபுல் ஸ்டோரி உங்களுக்குத் தெரியாதுல்ல?”
“ஏன் தெரியாது? அப்பா இறந்ததுக்கப்பறம் வீட்டை காப்பாத்தற பெரிய பொறுப்பு உனக்கு. வாரத்துல அஞ்சி நாள் டிரைவர். சனிக்கிழமை அல்லையன்ஸ் ஃப்ரான்சேஸ்ல ஃப்ரெஞ்ச் டீச்சர். சண்டே நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃபோட பசங்களுக்கு ஆன்லைன் மேத்ஸ் டீச்சர். இப்ப கொஞ்ச நாளா ரெண்டு ஃப்ரெண்ட்சோட புது யூ-டியூப் சேனலுக்கு எடிட்டர். அடுத்து கரெஸ்ல எம்பிஏ படிக்கப் போறே...”
“இதெல்லாம் வீட்டைக் காப்பாத்த மட்டுமில்ல மா. என் அப்பா ஊரெல்லாம் வாங்கின கடனை அடைக்க. அப்பா ஒரு டிராவல்ஸ்ல கார் டிரைவர். ஒரு ட்ரிப் முடிச்சு திரும்பி வரும்போது ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு. என் படிப்புக்காகவும், கல்யாணத்துக்காகவும்தான் நிறைய கடன் வாங்கினாரு. இப்ப சொல்லுங்கம்மா... யாரு பெரிய கடன்காரி?” மாலையில் வீட்டில் ஓய்வாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார் தேவேந்திரன். அவர் பருகிய மோர் குவளையை கையில் வைத்திருந்தாள் வள்ளி.
“சேர்ந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் இந்த அபி பொண்ணு ஒரு தடவைகூட நம்மகிட்ட கடன் பிரச்னை பத்தி சொன்னதே இல்லையே வள்ளி...”“ஆமாங்க. சொல்லியிருந்தா எப்பவோ நம்மளால முடிஞ்ச அளவு ஒரு தொகையை கடனா இல்லாம சும்மாவே குடுத்திருக்கலாம்...”“இல்லை வள்ளி. அவ நம்மகிட்டேர்ந்து பணத்தை வாங்கிக்க மாட்டா. எனக்கு வேறு ஒரு யோசனை இருக்கு...”அன்றைய வேலைகளை முடித்துவிட்டு கார் சாவியை தேவேந்திரனிடம் நீட்டினாள் அபி.
“ஃபுல் டேங்க் ஃபில்அப் பண்ணிட்டேன் சார். நான் நாளைக்கு வந்துடறேன்...”“அபி. இரும்மா...” ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார் தேவேந்திரன். “நாளைக்கு இந்த அட்ரஸ்ல இருக்கற ஆஃபீசுக்கு போ. இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணு. அப்பறம் உன் ப்ரொஃபைல்ல பி.எஸ்சிக்கு பக்கத்துல எம்பிஏ போட்ரு. உன்னைப் பத்தி இந்த கம்பெனி ஓனர், அதான் என் ஃப்ரெண்ட்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.
இண்டர்வியூ சும்மா ஃபார்மாலிட்டிதான்...”“சார்... நான் எம்பிஏ இல்லையே...”“இந்த வேலைக்கு போஸ்ட் கிராஜுவேஷன் கேண்டிடேட்ஸ் தேடிட்டு இருந்தாங்களாம். அது பரவால்லைம்மா. அவங்க கம்பெனி ரெக்கார்ட்சுக்குத்தான். வேற ஒண்ணுமில்லை. நீ திறமைசாலி. பயப்படாதே...” விசிட்டிங் கார்டை மேஜை மீது வைத்தாள் அபி.
“இல்லை சார். ஏற்கனவே ஒரு பட்டப்பேர் இருக்கு. ஃப்ராடுன்ற இன்னொரு பட்டப்பேர் வேணாம்...”“என்னம்மா... பொழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கியே. வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கணும்...”“சார்... தப்பா எடுத்துக்காதிங்க. உங்க வாழ்க்கைல நீங்க இதுவரைக்கும் கொலை பண்ணலை. அதுக்கான வாய்ப்பு வந்தா... செய்வீங்களா? என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவும் ஒரு கொலைதான் சார்.
மனசாட்சியை கொல்றது...”“இதுக்குத்தான் நிறைய படிக்கக்கூடாதுன்றது. ஏதாவது ஒரு விதத்துல உனக்கு உதவணும்னு நினைச்சேன்...”“உதவி வேணும்னா நானே உங்களைக் கேக்கறேன் சார்...”அடுத்த நாள்.
“வள்ளி... அபி இன்னிக்கு லீவு ஏதாவது சொன்னாளா? மணி பத்தாகப் போகுது. இன்னும் வரலையே...” “ஒண்ணும் சொல்லலையேங்க. போன் பண்ணிப் பாருங்க...”கைப்பேசியை கையில் எடுத்த தேவேந்திரன், ‘‘இதோ... அபியே போன் பண்றாளே... ‘அபி... என்னாச்சும்மா... ஏன் அழறே’” பரபரத்தார்.“வீட்டுக்கு போலீஸ் வந்திருக்காங்க சார். என்னை நம்ப மாட்டேங்கறாங்க. என் வாழ்க்கையே முடியப் போகுது...” அழுதபடி கூறினாள் அபி.
“உடனே கிளம்பி வர்றேன். பதறாதே...” அந்த குடியிருப்புகளின் முன் ஒரு விலையுயர்ந்த கார் வந்து மூச்சிரைத்து நிற்கும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். தேவேந்திரன் வந்தபோது, மரகதமும், அபியும் அழுதுகொண்டு... ஒரு இன்ஸ்பெக்டர் விறைப்புடன்... ஒரு லேடி கான்ஸ்டபிள் எந்தவித பாவமும் காட்டாமல் நின்று கொண்டிருந்தனர். மற்ற குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அபி வீட்டின் முன் ஆஜர்.
“இன்ஸ்பெக்டர்... ஐ ஆம் தேவேந்திரன்...” என தன் விசிட்டிங் கார்டை தேவேந்திரன் நீட்டினார்.கையில் வாங்கி அதைப் படித்த இன்ஸ்பெக்டர், “இந்த பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்?” என்றார்.“என் கம்பெனிலதான் இந்தப் பொண்ணு மேனேஜரா வேலை பாக்கறா. என்ன பிரச்னை சார்?”“மேனேஜரா?” என அபியை மேலும் கீழும் சந்தேகப் பார்வையுடன் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.அபி ஏதோ சொல்ல வர... ‘வேண்டாம்’ என ஜாடை காட்டினார் தேவேந்திரன்.“கம்பெனில வேலைக்கு சேக்கறதுக்கு முன்னாடி கரெக்ட்டா விசாரிக்க மாட்டிங்களா சார்? கரெஸ்ல எம்பிஏ படிக்க அப்ளை பண்ணிருக்கா.
இவ சப்மிட் பண்ண ஸ்கூல், காலேஜ் எல்லா சர்டிபிகேட்சும் டூப்ளிகேட். ஃபோர்ஜரி சார். என்கொயரிக்கு கூட்டிட்டு போணும்...”“இந்தப் பொண்ணைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். ரொம்ப நேர்மையான பொண்ணு. இது யாரோ வேணும்னே செஞ்ச வேலை. எனக்கு ஒன் அவர் டைம் குடுங்க சார். யார் செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கிறேன்...” என தேவேந்திரன் கெஞ்சினார். “நீங்க பெரிய மனுஷன். உங்க வார்த்தையை நம்பறேன். ஜஸ்ட் ஒன் அவர்தான்...”“அழாம பொறுமையா யோசி அபி. யார் இப்படி செஞ்சிருப்பாங்க?”“தெரியலை சார். எத்தனையோ பேருக்கு கடன் பாக்கி வெச்சிருக்கேன். யாரா வேணும்னாலும் இருக்கலாம்...”“இல்லை அபி.
உனக்கு கடன் குடுத்த யாரும் நீ ஜெயிலுக்கு போகணும்னு நினைக்க மாட்டாங்க. நிதானமா யோசி. சமீபத்துல யாரோடவாவது எதுக்காகவாவது சண்டை போட்டியா?”“எனக்கு ஒருத்தன் மேல சந்தேகமா இருக்கு சார். என்னை லவ் பண்றேன்னு பின்னாடி சுத்திட்டு இருந்தான். வினீத்...”சரியாக ஐம்பது நிமிடங்களில்... போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்பில் வீங்கிய முகத்துடன் அபியை பெண் பார்க்க வந்த வினீத். “அபி கிடைக்கலைங்கிற கோபத்துல அவளை அவமானப்படுத்தணும்னே இப்படி செஞ்சிருக்கான். அபி எம்பிஏக்கு அப்ளை பண்ணப் போறாங்கறதை தரகர் மூலமா தெரிஞ்சி ப்ளானை போட்ருக்கான். டூப்ளிகேட் சாவியை ரெடி பண்ணி, வீட்ல யாரும் இல்லாத நேரத்துல ஒரிஜினல் சர்டிஃபிகேட்சை மாத்தி, போலி சர்டிஃபிகேட்சை வெச்சிருக்கான்...” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் வரலைன்னா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே தெரியலை. வண்டி சாவி குடுங்க சார். ஆபீசுக்குத்தானே?” என்றாள் அபி. “இனி உனக்கு டிரைவர் வேலை இல்லை அபி... உன் மேல இன்ஸ்பெக்டருக்கு நம்பிக்கை வரணுங்கறதுக்காக மட்டும் நீ எங்க மேனேஜர்னு சொல்லலை. உனக்கு நான் ப்ரொமோஷன் தந்துட்டேன். என் கம்பெனில மேனேஜர் ஆகணும்னா பெரிய பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. நேர்மை, நாணயம், கொஞ்சம் படிப்பு இருந்தா போதும்.
உன் டேபிளுக்கு வர்ற ஃபைல்சை சரி பார்த்து சைன் பண்ணு. வருங்காலத்தைப் பத்தி இனி கவலைப்படாம, ஏ.சி ரூம்ல ஜம்முனு உக்காந்து எம்பிஏ படி...” புன்னகைத்தார் தேவேந்திரன்.நம்பிக்கையின் துளிகள் அபியின் கண்களை நனைத்தன.
-ஸ்வர்ண ரம்யா
|