இரண்டு முறை பிறந்த குழந்தை!



மருத்துவத்துறையையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது லின்லீயின் பிறப்பு. இரண்டு முறை பிறந்த உலகின் முதல் குழந்தை என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறது இந்தக் குழந்தை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லீவிஸ்வில்லி நகரைச் சேர்ந்தவர், மார்க்கரெட் ஹாக்கின்ஸ் போமர். கர்ப்பமாக இருந்தபோது, அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும், தன்னுடைய உடல் நிலையையும்  பரிசோதித்துக்கொள்வது மார்க்கரெட்டின் வழக்கம்.

அவர் கர்ப்பமடைந்து 16 வாரங்கள் முடிந்த நிலையில், வழக்கம்போல பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிந்தார். கருப்பைக்குள் இருக்கும் குழந்தை லின்லீயின் முதுகுத்தண்டில் அரிதான ஒரு கட்டியிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியில் நிலைகுலைந்துபோனார் மார்க்கரெட். அந்தக் கட்டியை அகற்றவில்லை என்றால் லின்லீயின் இதயம் செயலிழந்து உயிருக்கே ஆபத்தில் முடியும்.

ஆனால், லின்லீ வெறும் 16 வாரக் கரு. எல்லாமே முடிந்துபோனது என்று மார்க்கரெட் நினைத்தபோது, டெக்சாஸில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவனை உயிர்காக்கும் முயற்சியில் இறங்கியது. கருப்பைக்குள் இருக்கும் லின்லீயை தற்காலிகமாக வெளியில் எடுத்து, கட்டியை முடிந்தளவு அகற்றும் சிகிச்சைதான் அந்த முயற்சி. ஆனால், கரு உருவாகி 16 வாரமே ஆனதால், 23வது வாரத்தில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று திட்டமிட்டனர்.

16வது வாரத்திலிருந்து 23வது வாரத்துக்குள் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை. 23வது வாரத்தில் கருப்பைக்குள் இருந்த லின்லீயை வெளியில் எடுத்தனர். இதுதான் லின்லீயின் முதல் பிறப்பு. அப்போது லின்லீயின் எடை வெறும் அரை கிலோதான். ஆபத்தான இந்த அறுவை சிகிச்சையைத் திறமை வாய்ந்த மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சையின்போது லின்லீயின் இதயத்துடிப்பு நின்றுபோனது. சிபிஆர் சிகிச்சைக்குப் பிறகே இதயத்துடிப்பு திரும்பியது. பல மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் கட்டியின் பெரும்பகுதி அகற்றப்பட்டது. சிறிய அளவு கட்டி மிஞ்சியிருந்தது. அதனால் எந்தப் பிரச்னையும் இல்லையென்பதால் மீண்டும் லின்லீயை அம்மாவின் கருப்பைக்குள்ளேயே வைத்தனர்.

அடுத்த 12 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்யப்பட்டு, இரண்டாவது முறையாக பிறந்தாள் லின்லீ. அப்போது லின்லீயின் எடை, 2.5 கிலோ. லின்லீ பிறந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மிஞ்சியிருந்த கட்டியையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இன்று லின்லீ செழிப்பான, ஆரோக்கியமான குழந்தையாக வலம் வந்துகொண்டிருக்கிறாள்.

த.சக்திவேல்