அச்சத்தின் விலை பதிமூன்றாயிரம் கோடி ரூபாய்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                              ‘‘உலகத்தின் நன்மை குறித்தே அறிவியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. இவ்வுண்மைகள் அழிவு வேலைக்குப் பயனாவதைக் கண்டு அறிவியலைக் குறை கூறலாகாது. மாறாக அழிவு வேலைகளுக்குக் காரணமான மனிதனின் மட்டான புத்தியையே தூற்ற வேண்டும்!’’

& மனிதகுல வரலாற்றில் தோன்றிய மாபெரும் விஞ்ஞானியும் மனிதாபிமானியுமான ஐன்ஸ்டீனின் வலியும் வழிகாட்டுதலுமான வார்த்தைகள் இவை.

உயிரச்சம், வாழ்வியல் ஆதாரம் பறிபோகும் அச்சம், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கும் அச்சம் ஆகியவற்றினால் கூடங்குளத்தில் செயல்பட இருக்கும் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று அங்குள்ள மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பெண்கள், குழந்தைகள் தொடர்ந்து போராடுகிறார்கள். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

போராட்டக் குழுவில் இருக்கும் மீனவப் பிரதிநிதி ஆன்டன் கோமஸிடம் பேசினேன். அணு உலை மின்சார தொழில்நுட்பத்தையும் அதன் பக்கவிளைவான கதிர்வீச்சின் ஆபத்தையும் பற்றிய செய்திகளை உதட்டு நுனியில் வைத்திருக்கிறார்.

‘‘அணு உலை என்பது அடிப்படையில் அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் செயல்படுகிறது. மின்சாரத்துக்கான இதன் செயல்பாடு ஏறத்தாழ 40 வருடங்கள்தான். செயலிழந்த பிறகும் பல்லாயிரம் ஆண்டுகள் அதிலிருந்து கதிர்வீச்சு கசியாமல் காப்பாற்ற வேண்டும். இது ஆயுட்கால ஆபத்து.

அணு உலையிலிருந்து வெளியேறும் வெப்பமும் அணுக்கதிர்வீச்சும் கலந்த நீர், கடலில் கலக்கும்போது மீன்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மீனவர்கள் மட்டுமல்ல... மீனை உணவாகக் கொள்கிற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய்க்கு உள்ளாகிறார்கள்.

குறைந்த விலையில் கிடைக்கும் அதிக புரதச்சத்துள்ள உணவுப்பொருள் மீன்தான். இதயத்தின் நலங்காக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம், நமக்கு மீனிலிருந்துதான் அதிகம் கிடைக்கிறது. அணுக்கதிர்வீச்சில் பாதித்த மீன்களை எந்த நாடும் இறக்குமதி செய்வதில்லை.

மீன்களுக்கு மட்டுமல்ல... மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு, பயிர்களுக்கு என அனைத்துக்குமான விஷக்கொல்லி அணுக் கதிர்வீச்சு. இதை எதிர்த்து அணுசக்தித் துறையைக் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் கிடையாது. அணுசக்திச் சட்டம் அந்த உரிமையை பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மட்டுமே வழங்கியிருக்கிறது.

சுனாமியில் பாதிக்கப்பட்டால் கூட மீண்டும் நாங்கள் கடலோர நிலங்களுக்குத் திரும்பிவந்து வாழ முடியும். ஆனால், அணுக்கதிர்வீச்சில் பாதிக்கப்பட்ட நிலத்துக்கு யாராலும் திரும்ப முடியாது. திரும்பி வந்தாலும் வாழ முடியாது. நிலம் மலடாக்கப்பட்டிருக்கும்; நீர் விஷமாக்கப்பட்டிருக்கும்.

எங்களுடைய இந்தப் போராட்டம் எந்த ஒரு ஜாதிக்கோ, மதத்துக்கோ, இனத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டமல்ல... மனிதகுலத்தின் வாழ்வுக்கான போராட்டம். கூடங்குளத்தில் அல்ல... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அணு உலைகளுக்கும் ஆயுதங்களுக்கும் எதிராகத்தான் நான் இருப்பேன்.’’

& இது ஆன்டன் கோமஸ் என்கிற ஒரு மீனவரின் குரலல்ல... மானுட சமுத்திரத்தின் பெருங்குரல்.

அணு ஆயுதசக்தி கொண்ட இந்தியா, மின்சார உற்பத்திக்காக அணு உலை அமைக்க பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது. ரஷ்யாவின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் மின்நிலையம் 2000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாம். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு இடங்களில் அணு உலைகள் மூலமாக 2030ம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

‘‘அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இரண்டாந்தர அணு தொழில் நுட்பத்தை நம் மீது திணித்து வேடிக்கை பார்க்கின்றன. உத்தரவாதம் இல்லாத தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டங்களை அரசு கைவிட வேண்டும்’’ என்கிறார் சமூக ஆர்வலர் மேதா பட்கர்.

அமெரிக்கா கடந்த 35 ஆண்டுகளாக எந்த அணு உலையையும் அமைக்கவில்லை. ரஷ்யா 22 வருடங்களாக எந்த அணு உலையையும் அமைக்கவில்லை. செயல்பட்டு வரும் அணு உலைகளையும் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே வருகிறது ஜெர்மனி. நிலநடுக்கத்தில் ஃபுகுஷிமா அணுமின் நிலையம் பாதிக்கப்பட்ட பிறகு, ‘இனி அணு உலைகளை அமைக்க மாட்டோம்’ என அறிவித்திருக்கிறது ஜப்பான்.

இந்தியாவுக்கு அணு உலை தொழில்நுட்பத்தில் கைவிட முடியாத நம்பிக்கையை யார் விதைத்தது? இதனால் பயனடைகிறவர்கள் யார்? இது உண்மையிலேயே மக்களுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டம்தான் என்று மக்களை எப்படி நம்ப வைப்பது?

‘‘சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் அணுசக்தி ஊழியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். ரத்தப்புற்று, நிணநீர்க்கட்டியில் ஏற்படும் புற்று, எலும்பு மஜ்ஜை புற்று, நுரையீரல் புற்று, இரைப்பைப் புற்று, தைராய்டு புற்று, உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்று, மார்பகப் புற்று, இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்று, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் புற்று போன்ற பாதிப்புகள் இவர்கள் மத்தியில் பரவலாக இருப்பதை நானே கண்டிருக்கிறேன்’’ என்று கல்பாக்கத்திலேயே பல வருடங்களாக வசிக்கும் மருத்துவர் வீ.புகழேந்தி, 2008ம் ஆண்டிலேயே ‘விழிப்புணர்வு’ பத்திரிகையில் பேட்டியளித்திருந்தார்.

‘‘அணு உலையை அடுத்து வசித்த மக்களை, உடம்பில் வளரக்கூடிய கட்டிகள் அதிகம் பாதித்தன. நெஞ்சிலிருக்கும் கட்டியானது கால்பந்து அளவிற்குப் பெரிதாக இருந்தது.

குறைப்பிரசவமும் சிசு மரணமும் பிறவி ஊனங்களும் அதிகம் இருந்தன. 1994ம் ஆண்டின் இந்த ஆய்வின் முடிவுகளை எதிர்க்கும் ஆணித் தரமான வாதத்தை இன்று வரை அணுசக்தித் துறையால் வைக்க இயலவில்லை...’’

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine& இது ராஜஸ்தான் மாநிலத்தில் ராவல்பட்டாவில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிய மருத்துவர் சங்கமித்ரா கடேகரின் பதிவுகள்.

‘கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லது. அவர் மக்களின் எந்த அச்சத்தை தீர்க்கப் போகிறார்? யாரை வைத்துத் தீர்க்கப் போகிறார்? எதைச் சொல்லித் தீர்க்கப் போகிறார்?

அரசைச் சார்ந்த அதிகாரிகளும் அணு விஞ்ஞானிகளும் சொன்னால் அதை மக்கள் & படுத்த படுக்கையை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் & உட்கார்ந்து கேட்பார்களா?

அரசியல் கட்சித் தலைவர்களும் மதகுருக்களும் சொல்வதை அப்படியே நம்பிய மக்கள் இன்று இல்லை. ஒரு செய்தித் தொலைக்காட்சியில் சோ, ‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை பின்னால் நின்று யாரோ தூண்டி விடுகிறார்கள்’ என்றார். யாரென்று கேட்டபோது அவருக்கும் அது தெரியவில்லை.

1988ம் ஆண்டிலேயே அதற்கான எதிர்ப்பு சிறுபொறியாக விழுந்தது. இன்று கொழுந்துவிட்டுப் பற்றி எரிகிறது. இது அந்த மக்கள் தங்கள் வீட்டு அடுப்புகளையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு பட்டினியோடு கண்களிலும் கைகளிலும் ஏந்தி வந்திருக்கிற நெருப்பு.

ஆனாலும், ‘இது என்னாகும்’ என்று எனக்குத் தெரியவில்லை. ‘பன்னாட்டு நிறுவன முதலைகளுக்கும் பணக்கார கழுகுகளுக்கும் பயன்படும் கனிமச் சுரங்கங்களை அமைத்து எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்காதீர்கள்’ என்று சமூக ஆர்வலர்களோடு லட்சக்கணக்கான மக்கள் கை கோர்த்து நடத்திய பல போராட்டங்களில் ஒன்றுகூட இங்கு வெற்றி பெற்றதில்லை.

மக்களுக்கானதுதான் அரசாங்கம். ஆனால் அரசும் மக்களும் இங்கே தனித்தனியாக நிற்கிறார்கள்.

நீர்வளம், சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்றுவழிகளில் மின் உற்பத்தியைத் துரிதப்படுத்துவதற்கான யோசனையில் மேலைநாடுகள் மூழ்கிவிட்டன. இந்தியாவில் அந்த நாடுகளின் ஒத்துழைப்போடு கட்டப்படுபவை அணு உலைகள் அல்ல... அவர்களது அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத்தொட்டிகள்தான்.

கூடங்குளம் அணுஉலையின் மதிப்பு
13,0000000000
மனிதர்களின் மதிப்பு
000000000000

வேலிகளுக்கு வெளியே
புழுதியாகவேனும்
விளையாடக் கிடைத்த
பூமியின் மடியை
கல்லறையாகக்
காயப்படுத்தியது யார்?

உறக்கத்தின் இடத்தில்
மரணத்தை நிறுத்தி
இரவின் நம்பகத்தை
எவர் பறித்தார்கள்?
 இன்குலாப் ‘கிழக்கும் பின் தொடரும்’ நூலிலிருந்து

(சலசலக்கும்...)
பழநிபாரதி