ரோடு, தண்ணீர், விளக்கு மட்டுமல்ல... உள்ளாட்சி என்பது உயர்ந்த சக்தி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                    பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்கிற நேரம் இது. வரப்போகும் ஐந்தாண்டுகளில் பல நூறு கோடி ரூபாய்களை இவர்கள் கையாளப் போகிறார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு உள்ளாட்சியை திறம்பட நடத்தும் சக்தி இருக்கிறது? தெருவிளக்கு, குடிநீர் வசதி தவிர இவர்கள் செய்வதற்கு வேறொன்றும் இல்லையா? இந்திய அரசியல் சட்டம் உள்ளாட்சிக்குக் கொடுத்திருக்கும் அளப்பரிய சுதந்திரத்தை இவர்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டு செயலாற்றுவார்கள்?

‘‘உண்மையில் பொறுப்புக்கு வருகிற 80 சதவீதம் பேருக்கு உள்ளாட்சி அமைப்பின் அதிகாரம் பற்றித் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டுவதில்லை. கல்லையும் கலவையையும் தாரையும் கையாளும் பொறுப்பாகவே தங்கள் பதவியைப் பயன்படுத்துகிறார்கள்’’ என்கிறார், தனது கிராமத்தை மேம்படுத்துவதற்காக விஞ்ஞானி பொறுப்பையே உதறிவிட்டு வந்த குத்தம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோ.

‘‘ஒரு தலைவர் என்பவர் பஞ்சாயத்துக்கு முதலமைச்சர்தான். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என்ன உறுதிமொழி எடுக்கிறார்களோ, அதே உறுதிமொழியைத்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் எடுக்கிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் இவர்கள், பஞ்சாயத்து சட்டம் தங்களுக்கு என்னென்ன உரிமைகளையும் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு நிறுவனத்துக்கு ஆட்களை எடுத்தால் கூட குறிப்பிட்ட நாட்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். அரசியல் சட்டப்படி ஒரு அமைப்பை நிர்வகிக்க இருக்கும் இவர்களுக்கு அப்படி எந்தப் பயிற்சியும் வழங்கப்படாதது ஒரு குறை. 

கிராம சபையும் பஞ்சாயத்தின் முக்கிய அங்கம்தான். பஞ்சாயத்து நிர்வாகம் என்பது ஒரு கூட்டமைப்பு. அதாவது, ‘மக்கள் பார்லிமென்ட்’. 18 வயது நிரம்பிய அனைவரும் கிராம சபை உறுப்பினர்கள். கிராம சபை நேரடியாக பஞ்சாயத்து நிர்வாகிகளை கண்காணிக்கலாம், செயல்பாடுகளை தணிக்கை செய்யலாம்.

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாலே எல்லாம் முடிந்தது என்று பலர் நினைக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் என்பது சாதாரணம் அல்ல. பொறுப்பேற்றதும் செய்யவேண்டிய முதல் வேலை தங்கள் ஊராட்சியைப் பற்றி ஒரு திட்ட அறிக்கை தயாரிப்பது. இந்திய அரசியல் சட்டம் இதைக் கட்டாயம் ஆக்குகிறது. பெரும்பாலான பிரதிநிதிகளுக்கு இதுபற்றி தெரியாது. இத்திட்ட அறிக்கை சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை மேம்பாட்டுக்காக மட்டுமே இருக்கக்கூடாது. இந்திய அரசியல் சட்டம் 243ஜி, Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘29 துறைகளின் வளர்ச்சியை உள்ளடக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களோடு அந்த அறிக்கை அமைய வேண்டும்’ என்கிறது. மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுகாதார மேம்பாடு, பெண்கள் மேம்பாடு என ஒட்டுமொத்தமாக கிராமத்து மக்களை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதாக அறிக்கையை தயாரிக்க வேண்டும். ஊரிலுள்ள கல்வியாளர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்களை வைத்தும் தயாரிக்கலாம். இதை கிராமசபையில் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க வேண்டும். 

திட்ட அறிக்கை இருந்தால் அரசாங்க நிதி மிக எளிதில் கிடைக்கும். அனைத்துக்கும் அரசை எதிர்பார்த்துக் காத்திராமல் மக்கள் பங்களிப்பையும் பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டுப் பணியாற்றினால், 2 ஆண்டுகளில் உள்ளாட்சியில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்’’ என்கிறார் இளங்கோ. தான் பொறுப்பு வகித்த கடந்த 10 ஆண்டுகாலத்தில் குத்தம்பாக்கம் ஊராட்சியில் இத்தகைய மறுமலர்ச்சியை உருவாக்கியும் காட்டியிருக்கிறார் இளங்கோ.

‘‘எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு வழங்குவதைப் போல உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வழங்கினால் பொறுப்புணர்வோடு வேலை செய்வார்கள்’’ என்கிறார் கிராமப் பொருளியல் அறிஞர் முனைவர் மா.பா.குருசாமி.

‘‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நேர்மையாக, மனசாட்சியோடு கடமைகளை செய்ய வேண்டும். உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு சிலர் 25 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகச் சொல்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து பொறுப்புக்கு வருபவர், எந்தத் திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும் என்றுதானே பார்ப்பார்? உள்ளாட்சி நிர்வாகம் வணிகமாகிவிடும். ஊழல் செய்யவும் லஞ்சம் வாங்கவும் உள்ளாட்சியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பஞ்சாயத்து சட்டத்தின் 124, 125வது பிரிவுகள், ‘கிராமத்தின் மேம்பாட்டுக்காக பஞ்சாயத்து எந்த வகை திட்டங்களை வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்கிறது. விவசாயத்தை மேம்படுத்த, நீர்நிலைகளை ஆழப்படுத்த, கிராமிய தொழில்களை வளர்த்தெடுக்க, பள்ளிக்கூடத்தை மேம்படுத்த என உள்ளாட்சி பிரதிநிதிகள் பல திட்டங்களை வகுக்கமுடியும். தேவை இருப்போருக்கு கடன், மானியம், நலத்திட்டங்களைப் பெற்றுத்தரலாம். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட முடியும். லட்சங்கள் அல்ல... லட்சியங்கள்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குத் தேவை’’ என்கிறார் குருசாமி.

மக்களும் அதை எதிர்பார்த்துத்தான் அவர்களை தேர்வு செய்துள்ளார்கள்!
 வெ.நீலகண்டன்