திருப்பு முனை அடையார் ஆனந்தபவன் ஸ்ரீனிவாசராஜா



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

              நிரம்பி வழிகிற கூட்டத்திற்கு நடுவில் வாடிக்கையாளர்கள் காத்திருந்து பொருள் வாங்கினால், தரமான வணிகம் நடப்பதாக அர்த்தம். அடையார் ஆனந்த பவனில் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள் மக்கள். வெற்றிக்கு ஆணிவேராக இருந்த பெற்றோருக்கு சிலை வைத்து பூஜிக்கிற பணிவும், வர்த்தகத்தில் நல்ல நிலையை அடைந்த பிறகும் ஒரு நாளில் 15 மணி நேர உழைப்பும் அடையார் ஆனந்தபவனின் வெற்றி சூத்திரங்கள். வெங்கடேசராஜா  ஸ்ரீனிவாசராஜா சகோதரர்களின் ஒற்றுமை, அடையார் ஆனந்தபவனின் கிளைகளைத் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விரிவடையச் செய்திருக்கிறது.

 ஊரை விட்டு வந்து, ஓட்டலில் பாத்திரம் கழுவி வாழ்வைத் தொடங்கிய திருப்பதிராஜாவின் பிள்ளைகள், இன்று ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறார்கள். அப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஸ்ரீனிவாசராஜாவிடம் பலவித உணர்வலைகள்...

‘‘முன்னொரு காலத்தில் படைவீரர்களாக தமிழகம் வந்த ராஜுக்கள் தங்கியிருந்த பாளையம், ராஜபாளையம் ஆச்சு. க்ஷத்திரியர்களா இருந்தவங்க, வேற வேலை இல்லாம போனதால விவசாயம் பார்க்க ஆரம்பிச்சாங்க. எங்க தாத்தா சிங்கராஜாவிற்கு விவசாயம்தான் எல்லாமே. மக்களுக்கு உணவளிக்கிற விவசாயம்தான் பொய்கள் இல்லாத நேர்மையான தொழில் என்பது தாத்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக வியாபாரம் செய்தால் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பதைத் தவிர்க்க முடியாதுன்னு உறுதியா நம்பினார். எங்கள் சொந்த பந்தத்தில் பலருக்கும் இந்த எண்ணம் இருந்தது. விவசாயம் செய்யாமல் வேறு வேலைக்குப் போகிறவர்களை, உருப்படாதவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். தாத்தாவின் பார்வையில் என் அப்பாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்தார்.

தலைமுறை தலைமுறையாக விவசாயம் பார்த்தவர்கள், மற்ற எந்தத் தொழிலையும் விரும்பமாட்டார்கள். நாங்க நல்ல நிலைக்கு வந்த பிறகு, தாத்தாவைப் பார்க்கப் போனேன். வெறுங்கையோடு பார்க்கக் கூடாதுங்கிறதால, வேட்டி சட்டை வாங்கிட்டுப் போனேன். ‘வியாபாரம் செய்யும்போது எத்தனைப் பேரை ஏமாத்தினியோ... எனக்கு வேண்டாம்’ என நிராகரித்தார். சொந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை அந்த அளவுக்கு வெறுப்பார்கள். இப்படி ஒரு குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அப்பாவுக்கு தொழில் செய்கிற ஆர்வம் வந்ததே சாதனைதான். ஆனால் அப்பாவை வீட்டிலிருந்து மட்டுமின்றி மனதிலிருந்தும் ஒதுக்கி வைத்தார் தாத்தா.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineவீட்டுப் பெரியவர்களால் வெறுக்கப்படும் யாருக்கும் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை சென்னை மாநகரமே அடைக்கல நகரம். சின்ன வயதில், ஜெயிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு அப்பா திருப்பதிராஜா சென்னைக்கு கிளம்பினார். ‘எங்க போயிடுவான்? வயிறு காஞ்சா, தன்னால வந்து சேருவான்’ என்கிற தாத்தாவின் எண்ணத்தை, தன்னுடைய உறுதியால் உடைத்தார் அப்பா. இப்படி வேலை தேடிப் போகிறவர்கள் ஓட்டலில் ஏதோ ஒரு வேலையைத்தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். பசியில அலையற அவஸ்தை இல்லாம, சாப்பாடு இலவசமாகக் கிடைக்கிற இடம் ஓட்டல். ஆனா வேலை கடினமா இருக்கும். வேற வழி இல்லாதவங்க டேபிள் துடைக்க, பாத்திரம் கழுவ, சப்ளை செய்ய என ஏதாவது ஒரு வேலைக்குச் சேருவாங்க. ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாம திடீர்னு கிளம்பிடுவாங்க. அதனால, எப்பவுமே வேலைவாய்ப்பு இருக்கிற தொழில் அது.   

சென்னை பாரிமுனையில் ஒரு உணவகத்தில், அப்பாவுக்கு பாத்திரம் கழுவும் வேலை. ஊரில் கௌரவமாக விவசாயம் பார்க்காமல், சென்னையில் பாத்திரம் கழுவும் நிலைக்கு வந்ததில் அவர் வருத்தப்படவே இல்லை. பிடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ணாம இருந்த நிறைவுதான் இருந்துச்சு. தொடர்ந்து 12 மணி நேரம் பாத்திரம் கழுவுகிற வேலையில் எப்பவும் ஈரத்திலேயே அவர் இருக்கணும். சின்ன அறையில் 10 பேர் தூங்குவாங்க. அத்தனைப் பேருக்கும் ஒரே ஒரு பாத்ரூம் இருக்கும். மொத்த பேரும் குளிச்சி அதிகாலையில் ஒரே நேரத்தில் ரெடியாகணும். பாத்ரூம் பிஸியா இருக்கும். தாமதமாகப் போனால் திட்டு விழும். அதனால் கடற்கரையில் உள்ள பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்து முடிச்சு நேரத்திற்கு வேலைக்கு வருகிற அப்பாவை எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சது.

ஓட்டலில் சமையல் மாஸ்டரா இருந்தவர் அச்சுதன் நாயர். வேலை முடிஞ்சதும் மத்தவங்க ஊர் சுத்தக் கிளம்பிடுவாங்க. அச்சுதன் நாயருக்கு உதவியா அப்பா இருப்பாரு. அவருக்கு எப்பவும் வேலை செஞ்சுக்கிட்டே இருக்கணும். மிகச்சிறந்த சமையல் கலைஞரான நாயரிடம், அப்பா சமையல் பாலபாடங்களைப் படிச்சார். பாத்திரம் கழுவுகிற சிறுவன், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை தரப்போகிறான் என்பது தெரியாமலேயே சமையல் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் அச்சுதன் நாயர். சமையல் கலைமீது அப்பாவுக்கு நல்ல ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஆனா தொடர்ந்து ஈரத்திலேயே வேலை செஞ்சதால கை, கால்களில் சேற்றுப்புண்.
மருத்துவரிடம் போனால், ‘ஈரத்தில் கை வைக்காதே’ என்று கண்டிஷன் போட்டார். வேலை செய்யாமல் போனால் சாப்பாடு கிடைக்காது. ராத்திரி தங்க இடமும் இருக்காது. வலியோடு வேறு வழியே இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ததில் ரணம் இன்னும் அதிகமானது. வேலையை நிறுத்தியே தீர வேண்டிய சூழலில், ஊருக்குத் திரும்பும்படி வீட்டிலிருந்து கடிதம் வந்தது.  

மும்பையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த உறவினர் ஒருத்தர் ஊருக்கு வந்திருந்தார். மும்பை போனால் ஏதோ ஒரு வேலை கிடைக்கும் என அவருடன் மும்பைக்கு ரயில் ஏறினார் அப்பா. ஒரு பஞ்சாலையில் வேலை கிடைத்தது. உறவினருடன் அறையில் தங்கி, சின்ன ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டனர். அதிக காசும் கொடுத்து, ருசி இல்லாத உணவை சாப்பிட மனமின்றி சமையல் செய்ய முடிவு செய்தார் அப்பா. ருசியான அவரது சமையலுக்குப் பக்கத்து அறைகளிலும் நல்ல வரவேற்பு. வட இந்திய உணவகத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் பக்கத்து அறையில் இருந்தார். அவரிடம் இனிப்பு வகை ரெசிபிகளைக் கேட்டு, செய்து கொடுப்பார் அப்பா. ஒரு ரெசிபி அறிமுகமானால், அதை அப்படியே செய்யாமல், அப்பாவின் கைவண்ணம் அதில் ஏதாவது ஒரு கோணத்தில் சேர்ந்திருக்கும். இன்றும் நாங்கள் கடைப்பிடிக்கிற ஃபார்முலா இது. புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற சிந்தனை எங்களுக்கு அப்பாவிடமிருந்துதான் வந்தது. புதுப்புது அயிட்டங்கள் செய்து, மற்றவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை அழகு பார்க்கிற தாய்மை குணம் இயல்பிலேயே அவரிடம் இருந்தது.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineநஷ்டத்தில் இயங்கிய பஞ்சாலையில் ஆட்குறைப்பு செய்தபோது, அப்பாவுக்கு வேலை பறிபோனது. மும்பையில் மளிகைக் கடை நடத்தி வந்த ஆதிமுத்து நாடாரிடம் வேலைக்குச் சேர்ந்தார். ஏற்கனவே பார்த்த வேலையோடு தொடர்பில்லாமல், இப்படி எல்லாமே புதுப்புது அனுபவங்களாக அவருக்கு அமைஞ்சது. நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்ததால் மளிகைக்கடையிலும் படிப்படியாக வளர்ச்சி வரத் தொடங்கியது. தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியாமல் போனதும், சொந்தமாகத் தொழில் செய்யும் முடிவுக்கு வந்தார். மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வார, மாதப் பத்திரிகைகளை விற்பனை செய்யும் வேலையில் கொஞ்சம் வருமானம் கிடைச்சது. இட்லி, குழிப்பணியாரம், இடியாப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளைச் சமைக்கிற பாத்திரங்கள் மும்பையில் கிடைக்கவில்லை. கும்பகோணத்தில் இருந்து மொத்த விலையில் வாங்கி அங்கே விற்க முடிவு எடுத்தார்.

அப்போது அவருக்குத் திருமணம் செய்கிற முடிவை எடுத்து வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். எங்க அம்மா முத்துலட்சுமி கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவங்க. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்பதால் அப்பாவுக்கு பெண் கொடுக்க சம்மதித்திருக்கார் தாத்தா. திருமணம் முடிந்து மணமக்களை மும்பைக்கு அனுப்பும்போது, ரயில் எஞ்சின் டிரைவரிடம் ரெண்டு ரூபாய் தந்து, ‘மகளையும் மருமகனையும் பத்திரமாக இறக்கி விட்டுருங்க’ என சொன்ன அப்பாவி தாத்தா. அவருடைய வளர்ப்பில் எந்தக் கஷ்டமும் படாமல் வளர்ந்த அம்மாவுக்கு, கல்யாணத்திற்குப் பிறகு எல்லா சோதனைகளும் காத்திருந்தன.

துணைக்கு யாரும் இல்லாமல், குழந்தையையும் சுமந்துக்கிட்டு கஷ்டப்படும்போதெல்லாம் கணவர் உடன் இருந்தார் என்பது அம்மாவுக்கு ஆறுதல். வியாபார நிமித்தமாக அப்பா வெளியூர் போய்விட்டால் தவித்துப்போவார். மொழி தெரியாத ஊரில், அறிமுகம் இல்லாத மனிதர்களிடம் பழகும் விவரம் அவருக்கு இல்லை. ஒருமுறை குழந்தை உயிருக்குப் போராடும் சூழ்நிலையில், கணவரும் இல்லாமல் போனபோது அம்மாவுக்கு பயம் வந்தது. ‘உதவிக்கு ஆள் இல்லாமல் வெளியூரில் கஷ்டப்படுவதற்கு, சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்’ என்ற மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பு அளித்தார் அப்பா. மும்பையிலிருந்து ராஜபாளையம் திரும்பினாங்க. வந்த இடத்தில் வரிசையாக சரிவுகளைச் சந்திக்க ஆரம்பித்தார் அப்பா. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரை அவரை இழுத்துச் சென்றன தொடர்ச்சியான தோல்விகள்...
(திருப்பங்கள் தொடரும்...)
 த.செ.ஞானவேல்
படங்கள்:புதூர் சரவணன்