
‘புகையில்லை... புகையிலை இல்லை... சாம்பல் இல்லை... தார், கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுப் பொருட்கள் இல்லை. வந்துவிட்டது எலெக்ட்ரானிக் சிகரெட்... மிகக்குறைந்த விலை. ஒருமுறை தம் அடிப்பதற்கு ஒரு ரூபாய்தான் செலவாகும். தொடர்பு கொள்ளுங்கள்!’
- கடந்த வாரம் ஏராளமானோருக்கு வந்தது இப்படியொரு எஸ்.எம்.எஸ். எலெக்ட்ரானிக் சிகரெட்டா.. இதென்ன புது விபரீதம் என விசாரித்தால்... வந்த வேகத்திலேயே சென்னையின் பாதியை ஆக்கிரமித்து விட்டதாம் இந்த சாதனம்!
புகை பிடிப்பவர்களில் 75 சத விகிதத்தினர் அதிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள். ஆனால், 5 சதவிகிதத்தினரே வெற்றி பெறுகிறார்கள். ஒரு சிகரெட் பற்ற வைக்கும்போது, 4 ஆயிரம் நச்சுப்பொருட்கள் காற்றில் கலக்கின்றன. இவற்றில் மனிதனை அடிமைப்படுத்துவது ‘நிகோடின்’தான். சிகரெட்டை விட விரும்புகிறவர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடாது நிகோடின். மெல்ல மெல்ல அதன் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அதனால் குறிப்பிட்ட காலத்துக்கு, ‘நிகோடின் சூயிங்கம்’ அல்லது உடலில் ஒட்டிக்கொள்ளும் ‘நிகோடின் பேட்ச்’ ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இவற்றைப்போல, ‘நிகோடின்’ மட்டும் நிரம்பிய ஒரு மின்சாதனம்தான் எலெக்ட்ரானிக் சிகரெட். இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது ‘சாட்சாத்’ சீனாவேதான். 2007லேயே தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்டது.
பார்க்க சிகரெட் போலவே இருக்கிறது. அதைவிட கொஞ்சம் கூடுதல் எடை. எல்.இ.டி. லைட், லிக்யூட் நிகோடின் அடங்கிய கேட்ரிஜ், பேட்டரி... இவை அதற்குள் அடங்கிய பொருட்கள். சுவிட்சைப் போட்டால் நுனியில் உள்ள சிவப்பு எல்இடி (மஞ்சள், பச்சை வண்ணங்களிலும் கிடைக்கிறது) எரிந்து, பற்ற வைத்த சிகரெட் போன்ற எஃபெக்ட்டை ஏற்படுத்துகிறது. மின்சாரம் பாய்ந்தவுடன், ‘லிக்யூட் நிகோடின்’ நுரையீரலைத் தழுவி மூக்கு வழியாகவோ, வாய் வழியாகவோ புகையாக வெளியேறுகிறது. நிஜ சிகரெட் புகைத்த உணர்வு!
இந்த சிகரெட்டின் விலை அதிகமில்லை... 2499 ரூபாய்! 5 ஆண்டுகள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். கேட்ரிஜ் (லிக்யூட் நிகோடின்) மட்டும் அடிக்கடி மாற்ற வேண்டும். 25 ரூபாய்க்கு கேட்ரிஜ் ரீபிள் வாங்கினால் 300 முறை ‘பப்’ செய்யலாமாம். 100 ரூபாய்க்கு வாங்கினால் 1000 முறை. பேட்டரியை வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம். சிகரெட் நாற்றத்துக்கும் குட் பை. கேட்ரிஜ்ஜில் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், மென்தால், ஆப்பிள், வெனிலா, காபி என பல ஃப்ளேவர்கள் உண்டு. போன் செய்தால் சிகரெட், கேட்ரிஜ் இரண்டையும் டோர் டெலிவரி செய்கிறார்கள்!
சரி... இந்த எலெக்ட்ரானிக் சிகரெட்டில் ரிஸ்க்கே இல்லையா..?
‘‘நிறைய இருக்கிறது’’ என்கிறார் இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேல். ‘‘பொதுவா சிகரெட்டை விட்டுட்டு புதுவாழ்க்கை தொடங்க நினைக்கிறவங்களுக்கு இது ஓ.கே. ஏன்னா, இதைவிட ஆயிரம் மடங்கு ரிஸ்க் சிகரெட்ல இருக்கு. எலெக்ட்ரானிக் சிகரெட் பத்தி இதுவரை எந்த ஸ்டடியும் நடத்தப்படல. பாதிப்பில்லைன்னு நிரூபிக்கப்படல. இதில, ‘லிக்யூட் நிகோடின்’ மட்டுமே இருக்கறதா சொல்றாங்க. ஆனா அமெரிக்காவில உள்ள ‘ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பு ஆய்வு செஞ்சப்போ நிகோடினோட ‘டை எத்திலின் கிளைக்கால்’, ‘நைட்ரோசெமன்’னு ரெண்டு வேதிப்பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடிச்சு அங்க தடை பண்ணியிருக்காங்க. இது ரெண்டும் கேன்சரை ஊக்குவிக்கிற கெமிக்கல்ஸ்’’ என்கிறார்.
‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் செயலாளர் இரா.அருளும் சில சந்தேகங்களைக் கிளப்புகிறார்.
‘‘இது புகையிலைப் பொருள் இல்லை. அதனால புகையிலை தடுப்புச் சட்டப்படி இதைத் தடுக்க முடியாது. உளவியல்ரீதியா இது சிகரெட் பிடிக்கிறவங்களை திருப்திப்படுத்தும். ஆனா, நம்பகத்தன்மை ரொம்பக் குறைவு. முழுமையா ஆய்வுக்கு உட்படுத்தின பிறகுதான் இதை அனுமதிக்கணும். இன்னொரு விபரீதமும் இருக்கு. சிகரெட் பிடிக்கிறவங்க இதைப் பயன்படுத்துறதில பிரச்னை இல்லை. அதேநேரம், சிகரெட் பழக்கம் இல்லாதவங்களை இது கவர வாய்ப்பிருக்கு. குறிப்பா குழந்தைகள். ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள்னு பல ஃப்ளேவர்கள்ல கிடைக்கிறதால குழந்தைகள் கைக்குப் போனா ஆபத்து. புதுசா சிகரெட் பிடிக்கிறவங்களை இது உருவாக்கிடும். இதுல பழகிட்டு, கிக் கிடைக்கலைன்னு சிகரெட்டுக்கு பலர் மாறுகிற அபாயம் இருக்கு. அரசு, உடனடியா தலையிட்டு இதை முறைப்படுத்தணும்’’ என்கிறார் அருள். எலெக்ட்ரானிக் சிகரெட்டை இந்தியா முழுதும் மார்க்கெட் செய்யும் சென்னை நிறுவனத்தில் இதுபற்றிப் பேசினோம்.
‘‘இதில் பயன்படுத்தப்படும் நிகோடின் அளவு மிகமிகக் குறைவு. அன்றாடம் நாம் சாப்பிடுகிற உருளைக்கிழங்கு, தக்காளி, காபியில் கூட இதுபோன்ற ரசாயனங்கள் இருக்கின்றன. முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தியே விற்பனை செய்கிறோம். சிகரெட்டை விட்டுவிட நினைப்பவர்களுக்கு பயனுள்ள சாதனம் இது. பல திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள் எங்கள் தயாரிப்பை அங்கீகரித்து சான்றளித்து உள்ளன’’ என்கிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம், இது பாதுகாப்பானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.
- வெ.நீலகண்டன்