
மயக்க பிஸ்கெட் கொடுத்து மயங்க வைத்து, பொருட்களை அபேஸ் செய்து, பாதியில் காணாமல் போகின்றன பல ரயில் சினேகங்கள். மயக்கம் தெளிந்த பிறகே ஞானம் வருகிறது. நீண்ட தூர ரயில் பயணங்களில் இதுபோன்ற டிராஜடிகள் அவ்வப்போது பத்திரிகைச் செய்திகளாகின்றன.
சேலத்திலிருந்து காலை 9.50க்கு கிளம்பிய ரயில். அன்றும் வழக்கம்போல பயணிகள் இடையே அரட்டை தொடங்கியது. ரூபியும் அவரது மகன்கள் தர்ஷன், அபிஷேக் ஒரு பக்கம். கணவரும் ராணுவ வீரருமான மூர்த்தி வேறொரு இடத்தில். பேச்சு கொடுத்த சில நிமிடங்களிலேயே சினேகமானார் ரூபி. அவரோடு பேசிய பெண்ணின் உறவினரும் ராணுவத்தில் பணிபுரிவதாக ரீல் விட்டார். ரீலை ரியலென நம்பிவிட்டார் ரூபி. ரயில் சிநேகிதி கொடுத்த பிஸ்கெட், குளிர்பானம் ஆகியவற்றைத் தன்னோடு குழந்தைகளும் சாப்பிட அனுமதித்தார். நிமிடங்கள் நகர்ந்தன. பேச்சு சுவாரஸ்யத்தின் இடையில், அந்த பிஸ்கட், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருப்பதாக குண்டைத் தூக்கிப்போட்டார் அந்தப் பெண். பெட்டியே பரபரப்பானது. குழந்தைகள் பதற்றத்துடன் தந்தை மூர்த்தியிடம் ஓடினர். அவரும் மிரண்டுபோய், மனைவியிடம் கடிந்து கொண்டார். இப்படி, அதே ரயிலில் பல சம்பவங்கள்!
டென்ஷன் எகிறுவதற்குள் விழிப்புணர்வு நாடகம் பற்றி விளக்கினர். வியப்பும் நிம்மதியும் அடைந்த பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்தனர். நம் மக்கள் எவ்வளவு அலர்ட் என்பதை அறிந்துகொள்ள சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் போட்ட திட்டம்தான் இது!
ஏன் இந்த ஷாக் வைத்தியம்?
‘‘இரண்டு நாட்களுக்கும் மேலாக நீளும் நீண்ட தூர ரயில் பயணங்களில்தான் தில்லாலங்கடி திருட்டுகள் அதிகம். முதல் நாள் அறிமுகம். இரண்டாம் நாள் கொஞ்சம் நட்பு. சகபயணியின் நம்பிக்கையைச் சம்பாதித்தபின்னரே இந்த ஆசாமிகள் மயக்க பிஸ்கெட், குளிர்பானம் கொடுத்து கைவரிசை காட்டுகின்றனர். பீகாரிலிருந்து ஒரு ரயில் கொள்ளைக் கும்பலே தமிழகத்தில் முகாமிட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதுதான் இந்த விழிப்புணர்வு நாடகத்துக்குக் காரணம்’’ என்கிறார் ஆணையர் முருகராஜ்.
ரயில் சிநேகங்களிடம் பேச்சு பேச்சாகவே இருக்கட்டும். பிஸ்கெட், கூல்ட்ரிங்க் வேண்டவே வேண்டாம்!
- ஸ்ரீதேவி, எஸ்.ஆறுமுகராஜ்