நிழல்கள் நடந்த பாதை





வீட்டு வேலைக்கு என்ன விலை?

பெண்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு அவர்களது கணவர்கள் சம்பளம் தரவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம். கணவருடைய வருமானத்தில் 10 முதல் 20 சதவீதத்தை மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் என்ற ஒரு ஏற்பாட்டை செய்ய அதற்கான சட்ட மசோதா பரிந்துரைத்திருக்கிறது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவையே நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாத மத்திய அரசு, இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவருவதன் மூலமாக பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்க முயற்சிக்கிறது.

வீடுகளில் பெண்களின் உழைப்பு என்ன என்பதை அறிய ஒருவர் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. பெண்கள் இல்லாமல் ஆண்கள் ஒரு வீட்டை எப்படி வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தாலே போதும். பெரும்பாலும் அது ஒரு லாட்ஜாக மாறிவிடும்; அல்லது குப்பைத்தொட்டியாகக் காட்சியளிக்கும். ஆண்களும் குழந்தைகளும் ஒரு வீட்டை நாள் முழுக்க கலைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பெண் அதை இடையறாமல் அதன் ஒழுங்கிற்குள் கொண்டு வந்துகொண்டே இருக்கிறாள்.

சென்னை போன்ற ஒரு நகரத்தில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் இரண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டுப் போவதற்கு குறைந்தபட்ச சம்பளம் மூவாயிரம் ரூபாய். ஆனால் மனைவி என்ற ஒரு அந்தஸ்துடன் நாள் முழுக்க ஒரு குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் உழைப்பிற்குப் பணத்தால் விலை மதிப்பிட்டால் பெரும்பாலான கணவர்கள் திவாலாக வேண்டியிருக்கும்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் பல இந்தியர்கள், ‘உலகின் மலிவான வேலைக்காரிகள் இந்திய மனைவிகள்தான்’ என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காகத் தவமிருக்கும் பல பைத்தியக்கார இந்தியப் பெற்றோர்களுக்கு இது தெரிவதே இல்லை.

ஒரு வீட்டு வேலைக்காரியை நீங்கள் நான்கு வார்த்தை கோபமாகப் பேசினால் அடுத்த நாளிலிருந்து அவள் நீங்கள் இருக்கும் திசையைக்கூட பார்க்க மாட்டாள். ஆனால் மனைவியை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். சம்பளம் இல்லாத, லீவு கேட்காத, வேலையை விட்டுவிட்டுப் போகாத, ஒரே உழைக்கும் வர்க்கம் உலகிலேயே இந்திய மனைவிகள்தான். இந்தியாவில் பலதார மணமுறை தடை சட்டம் மட்டும் இல்லையென்றால் நிறைய பேருக்கு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமாகிவிடும்.



இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது நடைமுறையில் எப்படி வேலை செய்யும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்... வீட்டில் பெண்கள் செய்யும் வேலை வெறும் கடமை அல்ல, அதற்கு ஒரு சமூக மதிப்பு இருக்கிறது, பொருளாதார மதிப்பு இருக்கிறது என்பதை இதன் வாயிலாக அங்கீகரிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு ஆணின் அத்தனை அன்றாடக் கடமைகளையும் ஒரு பெண் கவனித்துக்கொள்வதன் மூலம், அந்த ஆண் தனது வேலையை முழு ஆற்றலுடனும் கவனத்துடனும் செய்கிறான். ஒரு ஆணை முழுமையாக வேலைக்குத் தயார்படுத்துவதில் ஒரு பெண்ணின் பங்கு பெரும்பான்மையாக இருக்கிறது. வீடுகளில் பெண்களின் உழைப்பு இல்லாவிட்டால் அலுவலகங்களில் ஆண்களின் உற்பத்தித் திறன் கடுமையாக வீழ்ச்சியடையும். அந்த வகையில் அந்த நிறுவனத்திற்காக ஒரு ஆண் ஊழியரின் மனைவி மறைமுகமாகப் பணிபுரிகிறாள்.

இரண்டாவதாக, ஒரு நாட்டிற்குத் தேவையான ஆரோக்கியமான பிரஜைகளை வளர்ப்பதில் பெண்களே பிரதான பங்கு வகிக்கிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் அன்னையர் தினக் கூட்டம் ஒன்றில் பேச அழைத்திருந்தார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை நோக்கி, ‘‘இது உங்கள் வாழ்க்கையில் ஒரு துக்க நாள்’’ என்றேன். அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள். ‘‘உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த ஒரு பருவத்தை உங்கள் குழந்தைகளை ஆளாக்குவதற்கு மட்டுமே செலவிட்டிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள் உங்களுடைய கற்பனையையும் படைப்பாற்றலையும் ஆளுமைத் திறனையும் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் ஒன்றிரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு மட்டுமே செலவிட்டிருக்கிறீர்கள். அன்னையாக இருப்பது ஒன்றே இந்த உலகின் மிகச் சிறந்த புனிதக் கடமை என்று உங்களை நம்ப வைத்ததன் மூலம், இந்த சுய பலியை எந்தத் தயக்கமும் இன்றி மேற்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குழந்தைகள் கல்லூரிக்கோ வேலைக்கோ சென்றுவிட்ட இந்த நாட்களில், உங்கள் வாழ்க்கையை எங்கிருந்து மறுபடி தொடங்குவது என்று யோசித்துக்கொண்டு இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்’’ என்று பேசினேன். அந்தப் பெண்களின் முகம் வாடிவிட்டது. பலரது கண்கள் கண்ணீரில் பளபளத்தன.

குழந்தைகளுக்காக ஒரு பெண் செய்யும் இந்த உழைப்பு, ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு - அதன் வளர்ச்சிக்கு - செய்யும் உழைப்பு இல்லையா?
ஆனால் பெரும்பாலான பெண்களின் குடும்ப உழைப்பு எந்த நிலையிலும் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. அன்பு, பாசம், புனிதம் என்ற போர்வையில் இந்தியக் குடும்ப அமைப்பு ஈவு இரக்கமற்ற ஒரு சுரண்டல் மையமாக இருக்கிறது என்பதே உண்மை. பெண்கள் இந்த நாட்டில் எந்த ஊதியமும் இல்லாமல் - அல்லது மிகக் குறைந்த பலன்களுடன் - பிரமாண்டமான உணவுக்கூடங்களையும் குழந்தைகள் காப்பகங்களையும் நடத்தி வருகிறார்கள். இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் கணிசமான பெண்கள் எந்த மனரீதியான ஈடுபாடும் இன்றி ஆண்களின் பாலியல் தேவைகளையும் தீர்த்து வைக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள்கூட தங்கள் வருமானத்தில் உரிமை கோர முடியாத ஒரு நாட்டில் இந்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்தாக மாறலாம். எங்களுடைய வருமானத்தையெல்லாம் பெண்களிடம்தான் கொடுக்கிறோம் என்று சில ஆண்கள் கிண்டல் செய்யலாம். சம்பளம் கொடுப்பதால் ஒழுங்காக வேலை செய்யாத ஊழியரை தண்டிக்கவோ பணி நீக்கம் செய்யவோ முதலாளிக்கு உரிமை இருப்பதுபோல ஒரு கணவருக்கும் உரிமை உண்டா என்று குதர்க்கமாக வாதிடலாம்.



சட்டங்கள் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. ஆனால் மாற்றங்களுக்கான விவாதங்களை சமூகத்தில் உருவாக்குகின்றன. இல்லத்தரசிகளுக்கு உண்மையிலேயே ஊதியம் வழங்க முடியாமல் போகலாம். ஆனால் எவ்வளவு உழைப்பை அவர்களிடமிருந்து இலவசமாகச் சுரண்டுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவாவது இந்தச் சட்டம் வரட்டும். முகமூடியின் முகம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு நான் என்னதான் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. யாரையாவது ‘இவர்கள்தான் தமிழ் சினிமாவின் அடையாளம், எதிர்காலம்’ என்றெல்லாம் நான் வரிந்து வரிந்து பாராட்டினால் அவர்கள் அடுத்த படத்திலேயே எனக்குப் பயங்கரமாக ஆப்பு வைப்பார்கள். வழக்கமான கமர்ஷியல் படம் எடுக்கும் டைரக்டர்கள் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்று நம்மைக் கதறடித்து விடுவார்கள். இந்த ஆண்டு அப்படிக் கதற வைத்தவர் மிஷ்கின்.

குழந்தைகள் விளையாடும் திருடன் போலீஸ் கதைகூட இதைவிடத் தெளிவாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். படம் முழுக்க ஹீரோவும் வில்லன்களும் முகமூடியை மாட்டிக்கொண்டு இருட்டில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார் யாருடன் மோதுகிறார்கள் என்பதே தெரியவில்லை. கதையில் வரும் ஃபிளாஷ்பேக்குகளைக் கேட்கக் கேட்க, தலையில் யாரோ சுத்தியால் அடிக்கும் ஒரு உணர்வு. ஹீரோ, வில்லன், போலீஸ், கதாநாயகி என்று படத்தில் வரும் அத்தனை பேரையும் காமெடி ரோலுக்கு மாற்றிய மிஷ்கினைப் பாராட்டியே தீரவேண்டும். சிரிப்பே வராத ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை எடுக்க ஒரு தில் வேண்டும். மிஷ்கினுக்கு அது இருக்கிறது.

ஒரு நல்ல சினிமா எடுக்க கால்களைக் காட்டினால் மட்டும் போதாது. கொஞ்சம் மூளையையும் காட்டவேண்டியது மிகவும் அவசியம். ஒரே ஒரு மேதையுள்ள கட்சிஎனக்குப் பிடிக்காத அரசியல்வாதிகள்தான் எனக்குப் பிடித்த வாசகங்களை எப்போதும் கூறுகிறார்கள். சமீபத்தில் பால் தாக்கரே அப்படி ஒரு வாசகத்தைக் கூறினார். ‘‘அடுத்த பிரதமராகும் தகுதியுள்ளவர் சுஷ்மா சுவராஜ்தான். பா.ஜ.க.விலேயே புத்திசாலித்தனமான ஒரே ஒரு தலைவர் அவர் மட்டும்தான்’’ என்றார். காங்கிரஸ்காரர்கள் யாராவது பா.ஜ.கவில் ‘ஒரு ஆளைத் தவிர எல்லோரும் முட்டாள்கள்’ என்று சொல்லியிருந்தால் இந்நேரம் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சொன்னது பால் தாக்கரே. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு கமுக்கமாகச் சிரிக்கிறார்கள். இதில் எனக்குப் புரியாத ஒரே ஒரு விஷயம், ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கும் இந்தியப் பிரதமராவதற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான்!
(இன்னும் நடக்கலாம்...)

உயிர் பிரியும் கணத்தில்


உயிர் பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை
- ஜெ.பிரான்சிஸ் கிருபா

நான் படித்த புத்தகம்

இந்தியக் கலைகளின் வரலாறு ஒரு விதத்தில் இந்திய அரசியல் மற்றும் பண்பாட்டின் வரலாறு. கலைகளின் வாழ்வும் அழிவும் அரசியல் அதிகாரங்களின் வெற்றியோடும் வீழ்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன; பண்பாடுகளுக்கு இடையே நடந்த பரிமாற்றங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த நூலாசிரியர்கள் இந்தியக் கலைகளின் பிரமாண்டமான வரைபடத்தை கடும் உழைப்பின் வழியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். கலை மரபுகளுக்கு இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகள், ஸ்தூபிகள், சிற்பங்கள், குடைவரைக் கட்டுமானங்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களுக்குப் பின்னே இருக்கும் அழகியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் பற்றிய விரிவான பதிவினை இந்த நூல் வழங்குகிறது. இந்தியக் கலைமரபுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மிஞ்சியிருக்கும் நமது கலை அடையாளங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒரு பொது வாசகனுக்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல். (விலை: ரூ.350/-,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600098. தொடர்புக்கு: 044-26359906.)