ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கப போறேன்! மிரட்டும் பவர் ஸ்டார்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
      பவர் ஸ்டார்...
‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...’ ரேஞ்சுக்கு பாப்புலராகிவிட்டார் டாக்டர் சீனிவாசன். தப்பு தப்பு... ஆக்டர் சீனிவாசன்! சந்தானத்தோடு காமெடி கூட்டணி, ஷங்கர் பட வாய்ப்பு என நிஜமாகவே நடிகராக மனிதர் இப்போ செம பிஸி. ‘‘எப்படி சார் இதை சாதிச்சீங்க?’’ - நாமும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு விசாரித்தோம். தலைக்கனம் (‘விக்’ கூட) இன்றி அவர் பேசிய திலிருந்து...

‘‘ரஜினிதான் என் மானசீக குரு. ‘பாட்ஷா’ படத்தை திரும்பத் திரும்ப பார்த்தப்போதான் ‘டேய் சீனிவாசா... நீயும் நடிகனாகுடா’ங்கிற ஆசை வந்துச்சு. ‘லத்திகா’ படத்தைத் தயாரிச்சு இயக்கினேன்.

எங்கிட்ட காசு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு நிறைய பேர் கதை சொல்றோம்னு வந்தாங்க. என்னைப் புகழ்ற மாதிரி பேசிட்டா மயங்கிடுவேன். இந்த வீக்னஸை யூஸ் பண்ணி
‘சாப்பிட’ ஆரம்பிச்சுட்டாங்க. போச்சு... நிறைய போச்சு. என்னாடா இப்படி ஏமாத்துறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் தம்பி சந்தானம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ன்னு கூப்பிட்டாரு. அதுல நான் ஒரு பொண்ணுகிட்ட போயி, ‘எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன நடிகர் சிம்புகிட்ட இருக்கு?’ன்னு கேட்பேன் பாருங்க... தியேட்டரே குலுங்கப் போகுது அந்த சீனுக்கு.’’

சரி, பவர் ஸ்டார்ங்கற பட்டப் பேரை ரூம் போட்டு யோசிச்சீங்களா?

‘‘இல்லைங்க. தொல்.திருமாவளவன் கொடுத்த பட்டம் இது. ஆரம்பத்துல எல்லாரும் அதை கிண்டலாதான் பார்த்தாங்க. இப்ப அதுவே பெரிய பப்ளிசிட்டி ஆகிப்போச்சு. சினிமாவை ஊறுகாய் அளவுக்குத் தொட்டுக்க வந்தேன். ஆனா அதுவே இப்ப ஃபுல் மீல்ஸா ஆயிடுச்சு. அதனால இப்ப பேஷன்ட்டெல்லாம் பாக்குறதில்ல. நடிக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு. சொன்னா நம்புவீங்களான்னு தெரியல. இந்தியில கூட ரெண்டு படத்துல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. அதுபத்தி அப்புறம் சொல்றேன். ரொம்ப நாளாவே ஐஸ்வர்யா ராய்கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு(!). இந்திக்குப் போயிட்டா அதுவும் நிறைவேறிடும்னு நினைக்கிறேன்...’’

அப்போ தாய் மண்ணை மறந்துடுவீங்க போல?

‘‘சேச்சே... எந்த நாட்டுல கிளை பரப்பினாலும் என் வேர் தமிழ் சினிமாதான். இப்போ ஷங்கர் சாரோட ‘ஐ’ படத்துல கூட எனக்கு நல்ல ரோல். ஷூட்டிங் டைம்ல அவர்கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டேன். அவர் ஃப்ரீயா இருக்கும்போது கேட்போம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் ஷங்கர் சாரே என்னைக் கூப்பிட்டு ‘அண்ணே... உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கணும்’னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன். சிம்பு தம்பியும் என் மேல ரொம்ப பாசமா இருக்காப்ல. கூடிய சீக்கிரம் அவர் படத்திலும் நடிப்பேன்னு நினைக்கிறேன்...’’

ஆனா பாலா படத்தை மட்டும் மிஸ் பண்ணிட்டீங்க போல...

‘‘ஆமாங்க. நானா போய் கேட்காம தானா வந்த வாய்ப்புதான் ‘பரதேசி’. ஆசை ஆசையா ஓகே சொன்னேன். மூணாறுக்கு ஷூட்டிங் கூப்பிட்டாங்க. போனேன். ‘உங்க மீசையை எடுக்கணுமே’ன்னார் பாலா. எடுத்தேன். ஃபாரீன் பொண்னு ஒண்ணு எனக்கு ஜோடின்னு சொன்னாங்க. ‘ஹய்யா...’ன்னு சந்தோஷப்பட்டேன். ஈவ்னிங் ஆச்சு... ஒரு அக்ரிமென்டை கொடுத்தாங்க. படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் வேற படத்துக்குப் போகக்கூடாது, செல்போன்ல பேசக் கூடாது, கூட யாருமே இருக்கக்கூடாதுன்னு அதுல ஏகப்பட்ட கண்டிஷன்ஸ். அப்பதான் நான் ரெண்டு படத்துல நடிக்க ஆரம்பிச்சிருந்தேன். ரெண்டு, மூணு பிஸினஸ் வேற இருக்கு. போன்ல பேசாம பிசினஸை ஓட்ட முடியுமா? அதான் ஓடி வந்துட்டேன்.’’
ஷங்கர் சரி... ரஜினியோட நின்னு போட்டோ கீட்டோ...

‘‘ஒரு ஃபங்ஷன்ல ரஜினி சாருக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்தேன். என்னை அவருக்குத் தெரியுமான்னு தெரியல. பேசலாம்னு பார்த்தா நிறைய பேர் வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. அதனால விட்டுட்டேன். கண்டிப்பா ஒரு நாள் அவரை நான் மீட் பண்ணுவேன்.’’

ஜெயிலுக்குப் போனீங்களே... ‘கண்ணா களி தின்ன ஆசையா’ன்னு அங்க யாரும் லந்து கொடுக்கல..?

‘‘ச்சே... அப்படியெல்லாம் இல்ல. ‘டேய் பவர் ஸ்டாருடா... ஷூட்டிங்குக்கு வந்திருப்பாரோ!’ன்னுதான் கைதிகள் எல்லாம் ஆர்வமா விசாரிச்சாங்க. விஷயம் தெரிஞ்சு, ‘உங்களுக்கா இந்த நிலைமை’ன்னு வருத்தப்பட்டாங்க. உள்ளேயும் நமக்கு ரசிகர்கள் இருக்காங்கன்னு நினைச்சி சந்தோஷப்படக்கூட முடியாம போச்சு.’’

அப்போ பிற்கால சந்ததிகள் புரிஞ்சு நடந்துக்க ‘சிறை அனுபவங்களை’ புத்தகமா போடலாமே?

‘‘ப்ச்... வேணாங்க. அத கெட்ட கனவா நினைச்சு மறக்கத்தான் பார்க்கிறேன். பவர் ஸ்டார்னா மத்தவங்களுக்கு சந்தோஷம் தர்ற ஆளா இருக்கணும். என்னோட சோகத்தை எனக்குள்ளயே பூட்டி வச்சுக்கறேன்.’’

அதே ‘பகீர்’ சிரிப்போடு விடை தருகிறார் பவர்!
- அமலன்