சூப்பர் ஸ்டாருன்னா என்ன? சன் குடும்பம் விருதுகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
     
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம். பிரமாண்ட செட்.

பிரமிக்க வைத்த மின்னொளியில் மினி சொர்க்கமாக மின்னியது சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா மேடை. அவ்வப்போது காமெடி, நடிகைகளின் அழகு நடனம் என கொண்டாட்டமும் குதூகலமுமாக அரங்கேறிய விழாவின் சில துளிகள் உங்களுக்காக...

 பெண்களை கௌரவிக்கும் விழாவாக இது நடத்தப்பட்டது. சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 17 தொடர்களின் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.

 விழாவின் துவக்கமாக ‘அச்சம் அச்சம் இல்லை...’ பாடலுக்கு வெள்ளுடை தேவதையாக நூறு குழந்தைகளுடன் ஆன்ட்ரியா நடனமாடியது ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் ஓபனிங்!

 சீரியல்களின் பிரதான பாத்திரங்களே, மாமியாரும் மருமகளும்தான் என்பதால் முதலில் தரப்பட்ட விருதே, ‘சிறந்த மாமியார் விருது’தான். ‘திருமதி செல்வம்’ தொடரில் நடிக்கும் வடிவுக்
கரசி சிறந்த மாமியார் விருதை தட்டிச்சென்றார். வெள்ளித்திரையில் வில்லனாகவே பார்த்துப் பழக்கப்பட்ட ‘மகாநதி’ சங்கர் ‘நாதஸ்வரம்’ தொடருக்காக சிறந்த மாமனார் விருதைப் பெற்றார். ‘‘நான் வாங்குற முதல் அவார்டு இது’’ என அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

 பெண்மையை உயர்த்தும் கௌரவ விருது பெற்றார் ‘முத்தாரம்’ தேவயானி. வாழ்நாள் சாதனையாளர் விருதை டெல்லிகுமாரும், சிறந்த தாய்க்கான விருதை ‘அழகி’ விஜி சந்திரசேகரும், சிறந்த தந்தைக்கான விருதை ‘நாதஸ்வரம்’ மௌலியும் பெற்றுக்கொள்ள, அடுத்ததாக அரங்கேறியது மதுரை முத்து, தீபக் - தேவதர்ஷினியின் காமெடி கலாட்டா.

 ‘பூ பூக்கும் ஓசை...’, ‘அலேகா அலேகா...’ என கதம்பப் பாடல்களுக்கு நடனமாடி கவர்ந்திழுத்தார் பிரணீதா. பார்வையாளர்களுக்கு இடையே கட்டழகு வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி வர, அவரது முதுகில் கவர்ச்சிக் கிளியாய் தொற்றிக்கொண்டு வந்து மேடை ஏறினார் ஓவியா. ‘டாடி மம்மி வீட்டில் இல்ல...’ பாடலுக்கு அவர்  போட்ட ஆட்டம் டாப் கியர்.

 ‘‘ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டின் அடுப்பு நெருப்புதான் சன் நெட்வொர்க். அது கலை பொருளாதார சந்தையாகத் திகழ்கிறது’’ என வாழ்த்திய வைரமுத்து, ‘‘தொலைக்காட்சிகளின் அழைப்பு மணியாகத் திகழ்வது பாடல்கள்தான். எனவே சிறந்த பாடலுக்கான விருதையும் தர வேண்டும்’’ என வேண்டுகோள் வைத்தார்.

 விழாவுக்கு தனது மகனையும் அழைத்து வந்தார் ‘தங்கம்’ ரம்யா கிருஷ்ணன். தனக்கு கொடுக்கப்பட்ட ‘சிறந்த நடிகை’ சிறப்பு விருதை, மேடைக்கு மகனை அழைத்துச்சென்று பெற வைத்தார்.

 நடிகர்கள் ஜெயம் ரவி, அருண்விஜய், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராஜேஷ்.எம், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட வெள்ளித்திரை கலைஞர்கள் கலந்துகொண்டு விருது கொடுத்தனர்.

 சிறந்த ஹீரோவுக்கான விருதை ‘நாதஸ்வரம்’ தொடருக்காக திருமுருகன், சிறந்த கதாநாயகி விருதை ‘திருமதி செல்வம்’ அபிதா, பொருத்தமான ஜோடி விருதை ‘தென்றல்’ தீபக் - ஸ்ருதி பெற்றனர். சிறந்த தொடருக்கான விருதை ‘திருமதி செல்வம்’ தட்டிச்சென்றது. சிறந்த இயக்குனருக்கான விருது ‘தென்றல்’ எஸ்.குமரனுக்கு கிடைத்தது.

 நீண்ட நாட்களாக சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருதை ராதிகா,
விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன் உள்ளிட்ட 11 பேர் பெற்றனர்.

 அல்டிமேட் ஸ்டார், கிளாப் போர்டு, கேரவன்... இதற்கெல்லாம் நடிகர், நடிகைகளிடம் அர்த்தம் கேட்டு அரங்கை அதிர வைத்தார் இமான் அண்ணாச்சி. மாளவிகாவிடம் சூப்பர்ஸ்டா ருக்கு தமிழ் அர்த்தம் கேட்க, ‘‘எந்த மொழியானாலும் அதுக்கு அர்த்தம் ரஜினிதான்’’ என்றபோது பலத்த கைதட்டல்.

 ‘வசீகரா...’ பாடலுக்கு மதுஷாலினியும், ‘மக்கயாலா...’ பாடலுக்கு லக்ஷ்மி ராயும் நடனமாடியபோது தேன் குடித்த வண்டாக மயங்கியது கூட்டம்.
- அமலன்
படங்கள்: ஞானவேல், கிஷோர், கணேஷ்