
கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் & ரம்யா திருமண நிகழ்ச்சியில். தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பிரபலங்கள் சுற்றம்சூழ தமிழ் முறைப்படி நடந்த திருமணம், அறிஞர் பெருமக்களின் ஆசிகளோடும், வாழ்த்துரைகளோடும் நடந்தேறியது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், கே.பாலசந்தர், பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், பரத்வாஜ், கவிஞர் அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துக்குமார் உள்ளிட்ட சினிமாவுலகின் முன்னவர்களுடன் கவிஞரின் சொந்த ஊரான வடுகபட்டி சொந்தங்களும், சுற்றங்களும் ஆர்ப்பரித்திருந்த அரங்கம், அனைவரிடத்தும் கவிஞர் கொண்ட அன்பைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
‘தன் ரகசியங்களைப் பாதுகாப்பவர்...’ என்று வைரமுத்துவை ரஜினி பாராட்ட, ‘ரஜினியின் சொல்லக்கூடிய ரகசியங்களைத் தன்னிடம் கவிஞர் சொல்லிவிட்டார்...’ என்று கலைஞர் போட்டுடைக்க, இன்னொரு பக்கம் ‘பிழைக்கத்தெரிந்தவர் கவிஞர்’ என்று பாரதிராஜா நட்புடன் வைரமுத்துவை சீண்ட, ‘பாரதிராஜா கட்டும் வரி அளவுக்குக்கூட தான் சம்பாதித்ததில்லை’ என்று கவிஞர் பதிலுரைக்க, ஒரு கலைக்குடும்பத்தின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தின் பிரதிபலிப்பாக அமைந்தன நிகழ்ச்சிகள்.
தன் தந்தை, மகன் மதன் கார்க்கி, பேரன் என தன் குடும்பத்து நான்கு தலைமுறையுடன் மேடையேறி, வந்திருந்தவர்களை கவிஞர் வைரமுத்து வரவேற்றது நிகழ்ச்சியின் நெகிழ்வான தருணம்.
- ஜி