மக்களே கட்டிய நூலகம்



'லைப்ரரி பத்தி இப்ப என்ன சார் எழுதப் போறீங்க? அவனவன் ஆப்பிள், ஆண்ட்ராய்டுனு சுத்திக்கிட்டிருக்கான். இந்தக் காலத்துல யார் நூலகத்துக்கெல்லாம் போறது’ என்றுதானே கேட்க வந்தீர்கள்? கொஞ்சம் பொறுங்க! இருக்கும் நூலகங்களே கவனிக்க ஆளில்லாமல் கிடக்கும் இந்தக் காலத்தில், வாசகர்களே ஆர்வத்தால் ஒன்றிணைந்து ஒரு நூலகம் கட்டியிருப்பது ஆச்சரியம்தானே! ‘அய்யே’ என நாம் முகம் சுளிக்கும் வட சென்னையின் அசத்தல் மறுபக்கம் இது!

‘‘அரசு கிளை நூலகம்தான் சார் இதுவும். சரியான பராமரிப்பும் நிதியுதவியும் இல்லாம அந்தக் காலத்துல இருந்தே திண்டாடியிருக்கு. 2002 வரைக்கும் கூட ரொம்ப சின்ன இடத்துல மோசமான நிலைமையிலதான் இருந்துச்சு. அதுக்கப்புறம் திருவொற்றியூர் நகராட்சி, 4 லட்ச ரூபாய் செலவுல புதுப்பிச்சிக் குடுத்துது. அதுவும் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுதான். இட வசதி இல்லை, வாசிப்புக்கு இடைஞ்சல்னு பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வாசகர் எண்ணிக்கை எப்பவும் இந்த லைப்ரரியில ஏறுமுகம்தான்.

இப்ப வரைக்கும் 12858 உறுப்பினர்கள் இருக்கோம். உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு வாசகர் வட்டமா உருவெடுத்ததுக்குக் காரணமே தொடர்கதையா போன பராமரிப்புக் குறைபாடும், அசௌகரியமும்தான்!’’ - என்கிறார் இந்த நூலகத்தின் வாசகர் வட்டத் துணைத் தலைவர் சுப்ரமணியம். இவர்கள் குறிப்பிடும் நூலகம் இதுதானா என வியக்கும் அளவுக்கு தற்போது பளபள தோற்றம் பூண்டிருக்கிறது இந்த நூலகம். தனியார் நூலகங்களே வியக்கும் அளவுக்கு டிஜிட்டல் மயமாகவும் மாறியிருக்கிறது. எல்லாம் இந்த வாசகர் வட்டத்தின் கைங்கரியம்தான்.

‘‘இதை மூணு மாடி பில்டிங்கா கட்டணும்... நவீன வசதிகளோட டிஜிட்டல் நூலகமாவும் மாத்தணும்னு எங்க வாசகர் வட்டம் முடிவு பண்ணிச்சு. அதுல ஒரு குறிப்பிட்ட தொகையை தன்னோட தொகுதி மேம்பாட்டு நிதியில இருந்து எம்.எல்.ஏ கொடுத்து உதவினார். மிச்சத் தொகை முழுக்க மக்கள்கிட்ட வசூல் செய்ததுதான். அரசானது நூலகங்களுக்கு அடிப்படையான தேவைகளை மட்டுமே நூலகச் சட்டப்படி செய்யலாம். ஆனா, நாங்க செய்ய நினைக்கிற மாதிரியான நவீன டிஜிட்டல் திட்டங்களுக்கெல்லாம் அவர்களால உதவி செய்ய முடியாத சூழ்நிலை.

ஆனா, ஒரு தொகையை அவங்ககிட்ட கொடுத்தா, அதை வைப்புத் தொகையா வச்சிக்கிட்டு, வருஷா வருஷம் அதிலிருந்து வர்ற வட்டியை வச்சி இந்த வசதிகளை செய்து கொடுப்பாங்க. இந்த திட்டத்தின்படி திருவொற்றியூரைச் சேர்ந்த வாசகர்களிடமும், சாதாரண மக்களிடமிருந்தும் 15 லட்சத்து இரண்டாயிரம் ரூபாயை வசூல் பண்ணினோம். அதில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்த கொடையாளர்கள் மட்டும் 107 பேர். ஐயாயிரம் ரூபாய் கொடுத்தவங்க 58 பேர். இப்பவும் நூலகத்துக்காக இவ்வளவு உதவி செய்யிற புரவலர்கள் இருக்காங்களேன்னு நினைச்சு நாங்களே அசந்துட்டோம். ஒருவேளை ஒரு நூலகத்துக்காக மக்கள் இவ்வளவு நிதி தர்றது தமிழ்நாட்லயே இதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்’’ என்கிற சுப்ரமணி யம், இந்தப் பணியில் இன்னும் கூட கொஞ்சம் பாக்கி இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘இங்க ஒவ்வொரு தளமும் விசேஷமா அமைக்கப்பட்டிருக்கு. கீழ் தளத்துல தினசரி, பருவ இதழ்களும், ஈ பேப்பர்களும், மாற்று திறனாளிகளுக்கு ஒரு செக்ஷனும் இருக்கும். இரவலுக்கான புத்தகங்களும் சிறுவர்களுக்கான செக்ஷன், பழைய பத்திரிகைகள், பருவ இதழ்கள் காப்பகம்னு மத்ததெல்லாம் அடுத்தடுத்த செக்ஷன்ல இருக்கும். இன்னும் பிரின்ட் எடுக்க, ஜெராக்ஸ் எடுக்க, குறிப்பெழுத வசதி, மாற்றுத் திறனாளிகள் வீல் சேரிலேயே வந்து போகக் கூடிய வசதி, குறைந்த விலையில் ப்ரவுசிங் செய்துக்குற வசதி, இ பேப்பர்கள், இ ஜர்னல்கள், இ மேகசின்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் வசதின்னு எல்லாமே செய்து கொடுக்குற திட்டம் இருக்கு. இந்தப் பகுதி மக்கள் படிப்பார்வம் உள்ளவங்க. அவங்க மூலமா இதெல்லாமே நிறைவேறும்னு நம்பிக்கை இருக்கு!’’ என்கிறார் அவர் உறுதியாக!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்