முல்லைப்பெரியாறு... தமிழகம் என்ன செய்ய வேண்டும்?



விரக்தியின் விளிம்பில் இருந்த தென்மாவட்ட விவசாயிகளை சற்றே ஆசுவாசப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 35 ஆண்டுகளாக நீடித்த முல்லைப்பெரியாறு அணைச் சிக்கல் முடிவுக்கு வந்திருக்கிறது.

 அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்ததோடு, கேரள அரசு கொண்டு வந்த ‘பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்புச் சட்ட’த்தையும் செல்லாது என்று அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். வழக்கம் போலவே இங்கு கொண்டாட்டம் களை கட்டுகிறது. கேரள அரசோ அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதோடு, மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்திருக்கிறது. போராட்டங்களும் கிளைத்து நிற்கின்றன.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதாலேயே எல்லாப் பிரச்னையும் தீர்ந்து விட்டது என்று நம்புவதற்கு நம் பட்டனுபவம் இடம் தரவில்லை. காவிரி பிரச்னையில் இறுதி தீர்ப்பளித்து, அது அரசிதழில் இடம்பெற்ற பிறகும்கூட எதுவும் நடந்து விடவில்லை. உண்மையில் இந்த தீர்ப்பால் விளையப் போவது என்ன? நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

‘‘இது மகிழத்தக்க தீர்ப்புதான் என்றாலும் பெரிய அளவில் கொண்டாட எதுவுமில்லை. ஒரு வழக்கில் வழங்கப்படும் 2வது தீர்ப்பு இது. ஏற்கனவே 2006 பிப்ரவரியில் ‘142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம்’ என்றும், ‘சில பராமரிப்பு பணிகள் செய்தபிறகு 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம்’ என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்த தீர்ப்பில் உள்ள மகிழத்தக்க விஷயம், அந்த சட்டம் செல்லாது என்ற அறிவிப்புதான்’’ என்கிற ‘முல்லைப் பெரியாறு, வைகை ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்க’த் தலைவர் கே.எம்.அப்பாஸ் அதுபற்றி விரிவாகப் பேசுகிறார்...

‘‘கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவிருக்கிறது. அதனால் மேலும் சில வருடங்களுக்கு பழைய நிலையே நீடிக்க நேரலாம். அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், தீர்ப்பு நகல் கைக்குக் கிடைத்ததும், உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, தற்போது 136 அடியில் உள்ள அணையின் ஷட்டரை 142 அடிக்கு உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 கேரள அதிகாரிகளோ, வனத்துறையோ இடையூறு செய்தால் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். பாதுகாப்புக்காக தமிழக போலீசாரையும் அங்கே குவிக்க வேண்டும். கேரளத்தின் மறுசீராய்வு மனுவை விசாரிக்கும்போது நம்மையும் விசாரிக்கும் வகையில் மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இது சட்டரீதியான நடவடிக்கை.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், அணை தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. தமிழக அரசு இந்தப் பிரச்னைகளை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதா என்றும் தெரியவில்லை. 1890 முதல் 1961 வரை தமிழக போலீஸ்தான் அணையை பாதுகாத்தது.

1961ல் தமிழகத்தில் ஐ.ஜியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ‘கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது’ என்று கூறி தமிழக போலீசாரை திரும்ப அழைத்து க் கொண்டார். அன்று முதல் கேரள காவல்துறையே பாதுகாப்பில் ஈடுபடுகிறது. சுமார் 55 ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு பணி செய்யும் கேரள போலீசாருக்கு தமிழக அரசுதான் சம்பளம் கொடுக்கிறது. தமிழக அரசிடம் சம்பளம் வாங்கும் கேரள போலீஸ், கேரளாவுக்கே விசுவாசமாக நடந்து கொள்கிறது.

அணையில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், மராமத்து பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுக்கும், லஸ்கர்களுக்கும் கேரள வனத்துறை கொடுக்கும் துன்பங்களுக்கு குறைவேயில்லை. யானைகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி 2001 முதல் அணைப் பகுதியில் உள்ள தமிழக அதிகாரிகள், ஊழியர்களின் குடியிருப்புக்கு மின்சாரத்தையும் துண்டித்து விட்டார்கள்.

பூமிக்கு அடியில் மின்பாதை உருவாக்குவதற்காக தமிழக அரசு கொடுத்த 1 கோடியே 1 லட்சம் ரூபாயையும் ‘சாப்பிட்டு’ விட்டார்கள். அவ்வப்போது இந்த குடியிருப்புக்குள் புகுந்து ‘மான் தோல் இருக்கிறது, புலித்தோல் இருக்கிறது...’ என்று வழக்கு போட்டு தமிழக அதிகாரிகளையும் ஊழியர்களையும் துயரப்படுத்துகிறது கேரள வனத்துறை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்’’ என்கிறார் அப்பாஸ்.

முல்லைப் பெரியாறு அணையில் கிடப்பு நீர் (Dead storage)  104 அடி. இதற்கு மேல் இருக்கும் தண்ணீரை மட்டுமே தமிழக விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியும். அணையில் 136 அடி தண்ணீர் இருந்தால் நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு வெறும் 32 அடிதான். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி நமக்குக் கூடுதலாக கிடைத்திருப்பது வெறும் 6 அடி தண்ணீர்தான். இந்த 6 அடி தண்ணீருக்காகத்தான் 35 ஆண்டுகள் போராடியிருக்கிறோம்.

1997 முதல் வழக்குக்கு மேல் வழக்கு. தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு... கடந்த 10 ஆண்டுகளில் ஓரிரு முறைதான் 136 அடி கொள்ளளவை அணை எட்டியது. கிடைத்த கொஞ்சம் தண்ணீரைக் கொண்டுதான் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விளைந்தன. 18 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான கிணறுகள் ஊற்றெடுத்தன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1 கோடி பேர் தாகம் தீர்ந்தது. 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தினால் மட்டுமே தமிழகத்துக்கு முழுப்பயன் கிடைக்கும் என்பதையும் மறக்கக்கூடாது. ஆனால், ‘‘அது அவ்வளவு எளிதல்ல’’ என்கிறார் அப்பாஸ்.

‘‘அணை பராமரிப்பு, மராமத்துப் பணிகளைக் கண்காணிக்க மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள், தமிழக, கேரள அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மீண்டும் பழைய நிலைக்கே இட்டுச் செல்லும். அணையில் பெயின்ட் அடிக்க வேண்டும் என்றால்கூட கேரள அதிகாரிகளை அழைத்துப் பேச வேண்டும். அவர்கள் திட்டமிட்டு பிரச்னைகளை எழுப்புவார்கள். மேலும் இந்தக் குழுவுக்கான அலுவலகத்தை கேரளாவில் அமைக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை அவ்வளவு எளிதில் கேரளா அமைக்கப் போவதில்லை. எனவே நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது’’ என்கிறார் அப்பாஸ்.

கடந்த 35 ஆண்டுகளில் தமிழகம் இழந்தது ஏராளம்... சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் இழப்பு; 18,000 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இழப்பு; 5,000 மெட்ரிக் டன் கால்நடைத் தீவனம் இழப்பு; சுமார் 300 கோடி ரூபாய் மனித உழைப்பு இழப்பு;

 பால் உற்பத்தி, கால்நடை உற்பத்தி என கிராமிய வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளுக்கு அளவில்லை. இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை!
152 அடிக்கு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் மட்டுமே தமிழகத்துக்கு முழுப்பயன் கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!

வெ.நீலகண்டன்