நடைவெளிப் பயணம்



சைக்கிள் பந்தயம்

இன்று பணியிடத்திற்கோ, பள்ளி, கல்லூரிக்கோ சைக்கிளில் போகவே முடியாது என்றாகி விட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நடப்பவர்கள் கூட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. சென்னை என்று மட்டுமில்லை... இதர நகரங்களிலும் இந்த நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. பணிபுரிகிறவர்கள் என்று பார்த்தால், வீடுகளுக்குப் பத்திரிகை போடுகிறவர்கள், தபால்காரர்கள், சில மளிகைக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வீட்டு டெலிவரி என்று அனுப்பும் இளைஞர்கள்...

இவர்கள்தான் சைக்கிளைச் சில மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் சிறிய எல்லைக்குள்! தூரத்தில் பெரிய சாலையைத் தாண்டிச் செல்ல வேண்டிய வீடுகள் என்றால் முதலிலேயே முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களைக் குற்றம் கூறமுடியாது. இந்த ‘சைக்கிள்’ என்ற சொல்லையே இன்று யோசித்துப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான் படிக்கும் காலத்தில் - அதாவது சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு - சைக்கிள் என்றால் காலால் மிதித்துப் போகும் வண்டி தான். ஆனால் அப்போதே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மோட்டார் சைக்கிளைத்தான் ‘சைக்கிள்’ என்று அழைத்தார்கள், இப்போதும் அழைத்து வருகிறார்கள். நாம் ‘சைக்கிள்’ என்று சொல்வது அங்கே ‘பைசைக்கிள்’.

சற்று முதிய வாசகர்களுக்கு ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ என்ற புகழ்பெற்ற இத்தாலியப் படம் நினைவிருக்கலாம். அது இரண்டாம் உலக யுத்தம் முடிந்த கையோடு, 1948ல் எடுக்கப்பட்டது. இன்றும் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கு அதையே சிறந்த உதாரணமாகச் சொல்கிறார்கள். கதாநாயகனுக்குச் சொந்தமாக மிதிவண்டி இல்லாது போனால் அவனுக்கு வேலையில்லை. அதென்ன கலெக்டர் வேலை? சுவர்களில் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டும் வேலை!

அப்போது பிரான்ஸிலும் பல புது சினிமா டைரக்டர்கள் தோன்றினார்கள். அவர்களின் படங்களிலும் மிதிவண்டிகள் முக்கிய இடம் வகித்தன. இந்தியப் படங்களிலும் சைக்கிள்கள். ‘நாம்
இருவர்’ படத்தின் துவக்கக் காட்சியிலேயே கதாநாயகன் - கதாநாயகி பாடியபடி சைக்கிள் ஓட்டி வருவார்கள். பெண்கள் சைக்கிள் ஓட்டுவது துணிச்சல், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அடையாளமாகக் கருதப்பட்டது.

இந்தியாவில் யுத்தம் முடியும் வரை மிதிவண்டிகள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பிலிப்ஸ், அப்போலோ, ராலே. அந்தக் காலத்தில் ராலே மிதிவண்டி வைத்திருப்பவர்கள் சட்டையின் காலரைத் தூக்கியபடிதான் சைக்கிள் ஓட்டுவார்கள். ராலே அவ்வளவு ஒஸ்தி! என் அப்பா 1944வாக்கில் எங்கள் ஊரில் சைக்கிள் இறக்குமதி செய்ய லைசென்ஸ் பெற்ற கடையில், ஒரு ராலே சைக்கிளுக்குப் பதிவு செய்தார். அதே நேரத்தில் நிஜாம் ரயில்வேயின் ஜெனரல் மானேஜரும் அவருடைய மகளுக்கு ராலே சைக்கிள் பதிவு செய்திருந்தார்.

இரு ஆண்டுகள் கழித்து, அதாவது 1948ல் அந்தக் கடைக்கு பன்னிரண்டு சைக்கிள்கள் வந்து சேர்ந்தன. இரண்டு ராலே... ஒன்று எனக்கு, இன்னொன்று ஜி.எம். மகளுக்கு. அந்தப் பெண்ணுக்கு அபார முந்நோக்கு இருந்திருக்க வேண்டும். அவளுக்கு சாதா ராலே போதும் என்று சொல்லிவிட்டாள். எனக்கு கியர் வைத்த சைக்கிள். விலை, கியருடன் ரூ.260!

ஒரு துக்க காலத்தை அடைந்துவிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த கியரை சைக்கிளை மிதிக்காதபோதுதான் மாற்ற வேண்டும். நான் எவ்வளவோ கவனமாக இருக்கலாம். ஆனால் சைக்கிளைக் கடன் வாங்குகிறவர்கள்? உலகத்தில் அன்று மிக அதிகமாகக் கடன் வாங்கப்பட்ட பொருள், சைக்கிளாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் ஓட்ட ஆரம்பித்து பத்து அடிக்குள் சைக்கிள் நின்று விடும். ‘‘வண்டி ஓடலையே?’’ என்று அந்த இடத்திலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். நான் பையன். கையில் காசு கிடையாது. சைக்கிளைத் தூக்கிக்கொண்டு சுமார் இரண்டு மைல் தூரத்தில் உள்ள பெரிய கடைக்குப் போக வேண்டும். ஒரு மாதம் திண்டாடினேன்.

அப்புறம் அப்பா கியரை எடுத்துவிடலாம் என முடிவு செய்து, ஒரு டாங்கா வைத்து, சைக்கிளை பெரிய கடைக்குக் கொண்டு போனார். அந்தக் கடைக்காரருக்கு கியரை ஒரேயடியாக எடுத்து விட மனதில்லை. அதை நிரந்தரமாக மூன்றாவது கியரில் ஓட வைத்து விட்டார். மூன்றாவது கியர் உயரத்தில் ஏறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் காலை மிக வேகமாகச் சுற்றுவீர்கள். வண்டி மிக மெதுவாகப் போகும். கிட்டத்தட்ட நடக்கும் வேகத்தில் போகும். தெருவில் எல்லாருக்கும் காணக் கிடைக்காத கோமாளி ஆட்டம். ஆறு மாதங்கள் கழித்து கியரையே எடுத்துவிட்டோம். ஏதோ மத்திய காலச் சித்திரவதையிலிருந்து மீண்ட உணர்வு கிடைத்தது.

இன்று சாலையில் சைக்கிளே விடமுடியாத நிலையில் எவ்வளவு விதவிதமான சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன! ஐந்தாயிரம், ஏழாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமில்லை... பத்து லட்ச ரூபாயில்கூட சைக்கிள் வந்துவிட்டது. எல்லாம் கியர் வைத்தவை!

சிறு சிறு பையன்கள் குட்டிக்குட்டித் தெருக்களில் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். ஒரு சில மாதங்கள்தான். அப்புறம் அவர்கள் மோட்டார் சைக்கிள் பழக ஆரம்பித்து விடுகிறார்கள்! எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்புதான் படித்துக் கொண்டிருப்பார்கள். அதற்குள் மோட்டார் சைக்கிள்! இவர்களை நம்பி இவர்கள் பெற்றோர்கள், அண்ணன்மார்களின் வண்டியைக் கொடுத்து விடலாம். ஆனால் தெருவைப் பயன்படுத்தும் இதர மனிதர்கள் கதி என்னாவது? என் நண்பரின் மனைவியை இப்படித்தான் ஒரு பையன் மோட்டார் சைக்கிள் கொண்டு இடித்து விட்டுப் போய்விட்டான். அந்த அம்மாள் கீழே விழுந்து நினைவிழந்த நிலையில் கிடந்திருக்கிறாள். வீட்டில் கொண்டு வந்து போடுவதற்கே ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. ஓரளவு உடல் தேற ஒரு மாதம் ஆயிற்று. ஆனால் அந்த அதிர்ச்சி ஆயுள் உள்ளவரை போகாது. வெளியில் காலை வைக்கவே தயக்கமாக இருக்கும்.

நான் 1948ல் வாங்கின ராலே சைக்கிள் 2008 வரை எங்கள் வீட்டில் இருந்தது. ஒரு சமயத்தில் எங்கள் வீட்டில் மூன்று சைக்கிள்கள் இருந்தன. தினமும் ஓட்டுவதால் அடிக்கடி ரிப்பேர் பார்க்க வேண்டிவரும். பலவித ஸ்பானர்கள், பங்க்சர் ஒட்டும் பசை, வால்வ் டியூப்... மிக முக்கியமாகக் காற்றடிக்கும் பம்ப். இதெல்லாம் ஒவ்வொன்றாக வாங்கி பல ஆண்டுகளாகச் சேகரித்தவை. எல்லாம் பழைய பேப்பர்காரர்களிடம் போட்டாயிற்று. நாம் மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்த பொருளை அவர்கள் அநாயாசமாக ஒதுக்கி விடுவார்கள்... ‘‘இது போகாதுங்க!’’

பஸ்மாசுரனுக்கு பரமசிவன் வரம் கொடுத்து விடுகிறார். யார் தலை மீது அவன் கையை வைத்தாலும், அந்த நபர் பஸ்பம். எரிந்து சாம்பலாகிவிடுவார். மோகினி உருவத்தில் மகாவிஷ்ணு அவனைத் தந்திரமாக, அவன் தலை மீதே அவன் கையை வைக்க வைத்து விடுகிறார். அவன் சாம்பலாகி விடுகிறான். அதே போல யாருக்கோ தீர்மானித்த சைக்கிளை அடைந்த நான், அதே சைக்கிளிலிருந்து கீழே விழுந்து இடுப்பை உடைத்துக் கொண்டு விட்டேன். இன்று நடப்பதே கடினமாக இருக்கிறது. இந்த நாளில் சைக்கிள்கள் எல்லாம் குட்டையானவை. காலை எளிதில் தரையில் ஊன்றிக்கொண்டு விடலாம். என் ராலே சைக்கிளில் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்!

படிக்க...

எந்தக் கலாசாரத்தில் இதிகாசங்கள், புராணங்கள் உள்ளதோ... அக் கலாசாரம் ஏராளமான பரிமாணங்கள் கொண்டிருக்கும். இலக்கியமும் விரிந்து பரந்து இருக்கும். ராமாயணம் எப்போது முதலில் படைக்கப்பட்டது என்று தீர்மானமாகக் கூறமுடியவில்லை. ஆனால் அந்த ஒரு படைப்பு கோடானு கோடி மக்களுக்குப் பொதுவாக உள்ளது. எவ்வளவு நூற்றாண்டுகளாக இதைத் தகர்க்கப் பார்த்திருக்கிறார்கள்! ஆனால் ராமனும் சீதையும் பரதனும் கும்பகர்ணனும் வாழும் கருத்துருவங்கள்.

ராமாயணத்தை முதலில் படைத்தவர் என்று நம்பப்படுபவர் வால்மீகி. கொலை, வழிப்பறிக் கொள்ளையை வாழ்க்கைச் சாதனமாகக் கொண்டவர். அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அவர் ஆதிகவியாகி விட்டார்.சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒருவர் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். குட்டிக்குட்டி எழுத்துகள்... ஒரு அச்சுப் பிழை இருக்காது. ராஜாஜி எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ திரும்பத் திரும்ப வெளிவந்தவண்ணம் இருக்கிறது.

இன்று அழகர் நம்பி என்பவரின் முயற்சியில் இன்னொரு வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பு. (விலை: ரூ.200/- கவிதா பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு: 044-24322177) மிக எளிய தமிழில் வந்திருக்கிறது இது.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்