அவன் அவள் unlimited



பொம்பள சிரிச்சா போச்சா?

கோகுலவாச நவநீதன்

ஆண்களும் பெண்களும் ஒரே விளையாட்டைத்தான் விளையாடுகிறார்கள். ஆனால், தனித்தனி விதிமுறைகளோடு!

- ஹபீப் அகாண்டே

அஞ்சலி: என் தங்கச்சி உன்னை யாருன்னு கேட்டா?
மகேஷ்: நீ என்ன சொன்னே?
அஞ்சலி: சிரிச்சேன்!

- ‘அங்காடித் தெரு’ படத்தில் இந்த சீனை சிலாகித்திருப்போம். இப்போது இதன் உள்ளார்ந்த உளவியலை அகழ்ந்தெடுக்கும் நேரம்.
ஒரு சிரிப்பு, பதிலாக முடியுமா? முடியும். ‘சிரிப்பென்பது வெறும் கேளிக்கை அல்ல... அது மனிதனின் ஆதி மொழி’ என்கிறது மானுடவியல். ‘‘அந்த சிரிப்பு மொழியில் ஸ்பெஷலிஸ்ட் பெண்கள்தான்’’ என அடித்துச் சொல்கிறது உளவியல். குறிப்பாக, காதல் சேப்டரில் பெண்களின் சிரிப்புக்கு தனித்த அர்த்தமும் அந்தஸ்தும் உண்டு! ‘‘ஆண்களுக்கு சிரிக்க வைப்பது இனக்கவர்ச்சி... பெண்களுக்கு சிரித்துக் காட்டுவதுதான் இனக்கவர்ச்சி!’’ என்கிறார் மனவியல் விஞ்ஞானியான ராபர்ட் ப்ரொவின். சிரிப்பின் அறிவியலை விளக்கும் ‘லாஃபர்’ எனும் புத்தகத்தின்
ஆசிரியர் இவர்.

ஆக, ‘நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ... நீ நகைச்சுவை மன்னனல்லவோ!’ என ஃபீல் பண்ணிக் கொண்டிருப்பது ஆணின் ஹீரோயிசம் என்றால், ‘நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ’ என சிரித்து ஃபீல் பண்ணுவது பெண்ணின் ஹீரோயினிசம். சிரிப்பைப் பற்றி பல வருடங்களாக ஆராய்ந்து வரும் டாக்டர் நான்சி ஹென்லே என்ற பெண்மணி, இது பற்றி இன்னும் அதி தீவிர கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.

♥ பொதுவான உரையாடலில் ஆண்கள் 67 சதவீதம்தான் சிரிக்கிறார்கள். ஆனால், பெண்கள் 87 சதவீதம் சிரிக்கிறார்கள். ஆக, ஆண்களை விட பெண்களே சிரிப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
♥ அடுத்தவரால் தாங்கள்
கவனிக்கப்படும்போது பெண்கள் அதிகம் சிரிக்கிறார்கள்
♥ அப்படி கவனிப்பவர்கள் எதிர்பாலினராக இருந்தால் இன்னும் அதிகம் சிரிக்கிறார்கள்
♥ நேரடியாக எதிர்பாலினரிடமே உரையாடும்போது அதை விட
அதிகம் சிரிக்கிறார்கள்
♥ எதிர்பாலினரிலும் தங்கள் காதலனிடம் பேசுகிறபோது பெண்கள் வார்த்தைக்கு வார்த்தை சிரிக்கிறார்கள்
♥ சிரிக்காத பெண்களை விட சிரிக்கும் பெண்கள் ஆண்களை அதிகம் கவர்கிறார்கள்
இப்படி அவர் அடுக்கும் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் பெண்களின் காதல் வாழ்க்கைக்கும் சிரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையே காட்டுகின்றன.
‘இதெல்லாம் சரியா?’ நம் ஊர் உளவியல் நிபுணர் சந்திரசேகரன் விஜயகுமாரிடம் கேட்டோம்...

‘‘பெண்களின் காதல் மொழி சிரிப்பு என்பதை ஓரளவு நம்மாலும் ஏற்க முடியும். இப்போதும் ஆண்கள் மத்தியில் ‘அவ என்னைப் பார்த்து சிரிச்சா’ என்பதற்கு ஒரே அர்த்தம்தான்... அதாவது, ‘அவளுக்கு என் மீது ஆர்வம் இருக்கிறது’! இதனால்தானோ என்னவோ அந்தக் காலங்களில் இங்கே பெண்களின் சிரிப்பை மிகவும் கிடைத்தற்கரியதாக்கி வைத்திருந்தார்கள். தங்கள் சிரிப்பை அவ்வளவு சீக்கிரம் ஆண்களுக்குத் தர மாட்டார்கள் அந்தக் காலப் பெண்கள்.

பெண்களின் சிரிப்பு சுலபமாகிப் போனால், ‘பெண்ணைக் கவர்வதில் ஆணுக்கு இருக்கும் கிக் குறையும், ஆண் பெண் ஈர்ப்பின் வீரியமே குறையும்’ என்று நம் முன்னோர்கள் நினைத்திருக்கலாம். எனவேதான் ‘பொம்பள சிரிச்சா போச்சு... புகையிலை விரிச்சா போச்சு’ என்றெல்லாம் பழமொழி இங்கு நிலவுகிறது. பிற்காலத்தில் அது பெண்களை அடக்குமுறை செய்யப் பயன்பட்டது வேறு கதை!’’ என்றார் அவர்.

ஆனால், பெண்களின் எல்லா சிரிப்பும் காதல் மொழியல்ல. இதை நிரூபிக்க ஒரு சின்ன டெஸ்ட்... போலி இன்டர்வியூ ஒன்று செட்டப் செய்யப்பட்டது. ‘பெரும் நிறுவனம் ஒன்றின் உயரதிகாரிக்கு பர்சனல் செக்ரட்டரி தேவை’ என விளம்பரம் தரப்பட்டது. 50 இளம் பெண்கள் அதற்காக வந்திருந்தார்கள். அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, ரகசிய கேமரா ஒன்று அவர்களின் முகபாவங்களை இம்மி பிசகாமல் பதிவு செய்து கொண்டிருந்தது. ‘என்ன படித்திருக்கிறீர்கள்? எங்கே வேலை பார்த்தீர்கள்?’ என அலுவல்ரீதியான கேள்விகளுக்கு இடையே பட்டென ஒரு பர்சனல் கேள்வி, ‘உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்காரா?’

சொல்லி வைத்தது போல இந்தக் கேள்விக்கு எல்லா பெண்களுமே சிரித்து வைத்தார்கள். ‘சிரிச்சேன்’ என அஞ்சலி சொன்னது போல, அனைத்துமே சமாளிபிகேஷன் சிரிப்பு. அட, ஆய்வு இத்தோடு முடியவில்லை. அந்தச் சிரிப்புகளை இரண்டு வகையாகப் பிரித்தார்கள் நிபுணர்கள். ஒன்று இயல்பான புன்னகை... அதாவது முகம் முழுக்க அஷ்ட கோணலாய்ச் சுருங்க, பாதிக் கண்கள் மூடிச் சிரிக்கும் பிரகாசச் சிரிப்பு. இன்னொன்று, வெறும் உதட்டை மட்டும் விரித்து சும்மானாச்சும் சிரித்து வைக்கும் பொய்ப் புன்னகை.

பெரும்பாலும் அங்கே பொய்ப் புன்னகை பூத்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் பின்னணியில் ஒரு சோகக்கதை இருந்தது. யாருமற்ற தனிமை, ஏமாற்றப்பட்ட ஃப்ளாஷ்பேக், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது என அந்த சோகக் கதையில் வெரைட்டி உண்டு. அதை மறைக்கத்தான் பொய்ப் புன்னகை. ஓகே... எதெல்லாம் பொய்ப் புன்னகை எனக் குறித்து வைத்தாகிவிட்டது. இப்போது எல்லா புன்னகைகளையும் கலந்து கட்டி, நூற்றுக்கணக்கான ஆண்களிடம் காட்டினார்கள். அதில் தங்களைக் கவர்ந்திழுக்கும் புன்னகையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலி வுட்சிகா மற்றும் மரியானா லா ஃப்ரான்ஸ் எனும் உளவியல் நிபுணர்கள்தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். இதன் முடிவு, அவர்களுக்கே ஆச்சரியம் தந்தது. பெரும்பாலும் ஆண்கள் கண்களுக்கு கவர்ச்சியாகத் தெரிந்தது, பெண்களின் பொய்ப் புன்னகைதான்.

‘ஒரு பெண், முகம் சுருங்க இயல்பாகச் சிரித்தால் அதற்கு நகைச்சுவை உள்ளிட்ட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், முகத்தை அழகாக வைத்துக்கொண்டு இதழ் மட்டும் விரித்து செயற்கைப் புன்னகை பூத்தால், எதிரில் இருப்பவர்களைக் கவர்வதுதான் நோக்கம் என நினைக்கிறது ஆண்களின் உள்ளுணர்வு. மேலும், பாலியல் ரீதியான கவலை/ காயம் உள்ள பெண்கள் தங்கள் பாலியல் வேட்கைக்கு சுலபமான இரை என்றும் கணக்குப் போடுகிறது ஆண் மனம்’ - இந்த முடிவுக்குத்தான் கடைசியாக வருகிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், பொதுவாக நாம் விளம்பரங்களில், போஸ்டர்களில், பத்திரிகை அட்டைப் படங்களில் பார்ப்பதெல்லாம் இந்த செயற்கைப் புன்னகைதான். ஏன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களில் நாம் காட்டுவது கூட பொய்ப் புன்னகைதான். முகத்தை அசிங்கமாக்கும் இயல்பான சிரிப்பு வந்தால், அதை அடுத்தவருக்குக் காட்டவோ, போட்டோவில் பதிவு செய்யவோ, பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. உண்மையான புன்னகைதான் பாதுகாப்பானதென ஆய்வுகள் சொல்லி என்ன பலன்? ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கவர்வதை நிறுத்தினால் எல்லாமே நின்றுவிடுமே! ‘‘இதெல்லாம் என்னங்க வேலையற்ற வேலை? சிரிப்பு என்பதே நம்மை அழகாக் காட்டத்தானே? அப்புறம் ஏன் அசிங்கமாச் சிரிக்கச் சொல்றீங்க?’’ என வாதம் செய்பவர்களுக்கு ஒரு கேள்வி...

அழகு என்பது என்ன?

நீங்கள் யார்?

கீழிருக்கும் வார்த்தைகளை நீங்கள் படிக்க வேண்டாம். அந்த வார்த்தை எந்த நிறத்தில் உள்ளது என்பதை மட்டும் உரக்க - வேகமாக - தவறு, தடுமாற்றமின்றி சொல்லிக்கொண்டு போங்கள் பார்க்கலாம்.

பொதுவாக இடது மூளை ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் இந்த டெஸ்ட்டில் ரொம்பத் திணறுவார்கள். நமது மொழி, மற்றும் வாசித்தலுக்கு அத்தாரிட்டியான இடது மூளை, வார்த்தைகளைப் படிக்காமல் அதன் நிறத்தை மட்டும் கிரகிக்க விடாது. ஸோ... திணறுகிறவர்கள், கணிதம், லாஜிக், பேச்சுத்திறன் கொண்ட இடது மூளைக்காரர்கள். அதிகம் கஷ்டப்படாமல் இந்த டெஸ்ட்டைக் கடக்கிறவர்கள், கற்பனை, படைப்பாற்றல் கொண்ட உணர்ச்சிகரமான வலது மூளைக்காரர்கள்!

    மஞ்சள்    நீலம்    ஆரஞ்சு
    கறுப்பு    சிவப்பு    பச்சை
    ஊதா    மஞ்சள்     சிவப்பு
    ஆரஞ்சு    பச்சை     கறுப்பு
    நீலம்    சிவப்பு     ஊதா
    பச்சை     நீலம்     ஆரஞ்சு

(தேடுவோம்...)