லாபம்



‘‘தம்பி! முன் டயருக்கு காத்துப் புடிக்கணும்’’ - சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தவரைப் பார்த்ததும் கடைப்பையன் மதி, ஓடிப்போய் காற்றடித்து அனுப்பிவிட்டு அவர் கொடுத்து இரண்டு ரூபாயை வாங்கி வந்தான்.

கடை முதலாளி முருகேசனுக்குக் கோபம் வந்தது. ‘‘டேய் மதி! சைக்கிளா இருந்தா புது டயர் மாத்திக் கொடுக்கலாம். பைக்கா இருந்தா பஞ்சர் ஒட்டிக் கொடுக்கலாம். அதுல எப்படியும் நாற்பது ரூபாய்க்கு மேல கிடைக்கும். வெறும் ரெண்டு ரூபாய்க்காக காத்து அடிச்சுக் கொடுக்காதேன்னு சொன்னேன்ல! இனி, இப்படி யாராச்சும் வந்தா கம்ப்ரசர் ஓடலைன்னு சொல்லி அனுப்பு!’’  அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ஒருவர் மொபட்டை தள்ளிக் கொண்டு வந்தார்...

‘‘சார்! ரெண்டு டயரையும் புதுசா மாத்திடுங்க. மற்ற கடையில எல்லாம் வெறுமனே காத்தடிக்கப் போனா கம்ப்ரஸர் ஓடலைன்னு பொய் சொல்றாங்க. ஆனா, உங்க கடைப்பையன் சிரமம் பாக்காம காத்து அடிச்சுக் கொடுக்கிறான். அதனாலதான் பக்கத்துல இருக்கிற கடைகளை நம்பாம, உங்க கடையைத் தேடி வந்தேன்’’ என்றார் அவர் புன்னகையோடு.மதியின் நேர்மையும் அன்பும்தான் தன் தொழிலுக்கு லாபம் சேர்க்கிறது என்பது, முதலாளி பார்த்த பார்வையில் தெரிந்தது.

கீர்த்தி