அம்பாசிடர் எனும் அரசனின் அஸ்தமனம்!



இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார் அது. ‘இந்திய சாலைகளின் ராஜா’ எனப் பலராலும் வர்ணிக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கார்’ என்றாலே அம்பாசிடர் மட்டுமே எல்லோர் நினைவிலும் வந்துபோகும். ஆனால், அதன் முடிவு இப்படியாகும் என போன தலைமுறையில் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாசிடர் கார் தயாரிப்பதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஒருகாலத்தில் இந்தியாவின் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை எல்லா சாலைகளையும் அலங்கரித்தவை அம்பாசிடர் கார்கள் மட்டுமே! அறுபது ஆண்டு காலம் அதன் கம்பீரம் துளியும் குறைந்ததில்லை.

நம்மவர்கள் இதை ‘பிளஷர்’ என்றே அழைத்தார்கள். அதாவது, மகிழ்வுந்து. பயணித்தவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அதற்கு போட்டியாக இத்தாலியைச் சேர்ந்த ஃபியட் கார்கள் வந்தபோதிலும் ‘குடும்பங்களுக்குப் பிடித்த கார்’ என்ற இமேஜை அம்பாசிடர் இழக்கவில்லை. இந்தியாவின் பிரதமரில் தொடங்கி மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள் வரை அனைவரும் அம்பாசிடர் கார்களையே சமீப காலம் வரை பயன்படுத்தி வந்தனர். வாடகை டாக்சிகள் அனைத்தும் அம்பாசிடராகவே இருந்தன. ஆனால் இப்போது நிலைமை வேறு.

1948ல் கொல்கத்தாவின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்பாராவில் இந்துஸ்தான் நிறுவனம் தொடங்கப்பட்டபோது, முதலில் உருவாகி வந்தவை அம்பாசிடர் கார்களே! பிரிட்டனின் மோரீஸ் ஆக்ஸ்போர்டு கார்களை மாடலாக வைத்து இவை தயாரிக்கப்பட்டன. மார்க் மி, மிமி, மிமிமி, மிக்ஷி, கிளாசிக், அவிகோ, கிராண்ட் என அவ்வப்போது பல வெரைட்டிகளில் புது மாடல்கள் வெளிவந்தன. ஆனால் எப்போதும் வெளித்தோற்றம் மாறியதில்லை.

‘‘இந்தியாவோட முதல் காருக்கு மூடுவிழான்னு செய்தி வந்ததுமே மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு சார்...’’ என வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த அம்பாசிடர் பிரியரான நவீன். இந்துஸ்தான் மோட்டர்ஸ் தயாரிப்பான கார்கள் அனைத்தும் இவரிடம் இருக்கிறது. ‘‘அம்பாசிடர் மாதிரி வேற எந்த காரையும் பார்க்க முடியாதுங்க. அதோட பாடி ஃபிட்டிங்ல இருக்கிற பருமன் இப்ப வர்ற சொகுசுக் கார்கள் எதுலயும் இல்ல. 1960கள்ல மார்க் ஒன் கார் வந்தது.

அப்பதான் அதை எங்க தாத்தா வாங்கினார். பிறகு அதன் முந்தைய மாடல் கார்களையும் வாங்கினார். அப்பறம் என் அப்பா புதுசா வர்ற அம்பாசிடர் மாடல்களை வாங்கினாரு. இப்பவும் அதையெல்லாம் பராமரிச்சிட்டு வர்றேன். எவ்வளவு தூரம் போயிட்டு வந்தாலும் அலுப்பே தட்டாது. உடல் வலியும் இருக்காது. விபத்து ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. 1984ல் மாருதி 800 கார்வர ஆரம்பிச்சதும்தான் அம்பாசிடருக்கான மவுசு குறைஞ்சது. அப்ப இந்துஸ்தான் மோட்டார்ஸ் ‘கன்டஸா’ கார்களை புதுசா கொண்டு வந்தாங்க. அதுவும் 2000த்தோட நிறுத்திட்டாங்க. இப்ப அம்பாசிடரும் இதோட சேர்ந்துருச்சு. பழைய கன்டஸா கார் வைச்சிருக்கிற என்னை மாதிரி ஆட்கள், உதிரி பாகங்கள் கிடைக்காமல் சிரமப்படுறோம். இனி, அம்பாசிடருக்கும் அலைய வேண்டியிருக்கும்’’ என்கிறார் வேதனையாக. 

தற்போது அம்பாசிடருக்கான கிரேஸ் கூடியிருப்பதாகச் சொல்கிறார், ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ செயலாளரும் கார் பிரியருமான கைலாஷ் சுவாமிநாதன். ‘‘எங்க அப்பா 1962ல் மார்க் ஒன் காரை வாங்கினார். அதை நாற்பது வருஷத்துக்கும் மேலா வச்சிருந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னாடிதான் வித்தேன்’’ என வருத்தப்படும் அவர், ‘‘இரண்டு வருஷமாவே அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்தப் போறாங்கன்னு செய்தி வந்திட்டு இருந்துச்சு.

இதனால, கார் பிரியர்கள் நிறைய பேர் பழைய அம்பாசிடர் கார்களைத் தேடிப் போய் வாங்க ஆரம்பிச்சாங்க. எனக்கு தெரிஞ்சு, பிரிட்டனைச் சேர்ந்த கார் பிரியர்கள் சிலர் சென்னையில மட்டும் ஆறு கார்களை வாங்கிட்டுப் போனாங்க. அவ்வளவு கிரேஸ் ஆகிருச்சு. அம்பாசிடர்ல எஞ்சின் குவாலிட்டி சூப்பரா இருக்கும். அதேமாதிரி ஷீட் மெட்டலும் அருமையானது. ரொம்ப தூர பயணத்துக்கு அம்பாசிடரை அடிச்சிக்கவே முடியாது’’ என நெகிழ்கிறார் அவர். 

கடந்த ஓராண்டில் இந்தியாவில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை, சுமார் 18 லட்சம். இதில் அம்பாசிடரின் பங்கு வெறும் 2,200 மட்டுமே! இவ்வளவு குறைந்த விற்பனைதான் நிர்வாகத்தை முடக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், 2 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதால், மேற்கு வங்க அரசு அந்நிறுவனத்துடன் பேசத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  எனினும், அந்த அம்பாசிடர் ‘கார்’காலம் மீண்டு வருமா?

- பேராச்சி கண்ணன்