நடைவெளிப் பயணம்தற்கொலைக் கலைஞன்

ஒவ்வொருவருக்கும் துக்கங்கள் உண்டு. ஏழ்மை, இயல்பான வாழ்க்கை நடத்த முடியாத வெற்றிடம், இழப்புகள், நோய், அபவாதம், ஆதரவுக்குத் துணை கிடைக்காது போதல் என நூற்றுக்கணக்கில் உள்ளன. காலப்போக்கில் இவற்றின் வலி குறைந்து விடுகிறது. சிலவற்றை நாம் முழுக்கவே மறந்து விடுகிறோம். ஆனால் நமக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத ஏதோ நபரின் துயரமும் சிதைவும் நம் மனதின் ஒரு மூலையில் தொடர்கிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போனாலும், ‘ஐயோ... பாவம்’ என்றாவது பெருமூச்சு விடுவோம்.

அப்படி ஒரு சிதைவு, நடிகர் சந்திரபாபு. நான் சில ஆண்டுகள் பணி புரிந்த ஜெமினி ஸ்டூடியோவில் எப்பாடுபட்டாலும் மாதத்தின் கடைசி தேதியன்று சம்பளம் கொடுத்து விடுவார்கள். வேறு சில சலுகைகள் உண்டு. ஒன்று, கடன். இதைப் பத்து மாதத் தவணைகளில் பிடித்துக் கொள்வார்கள். அன்று எங்கள் ஸ்டூடியோவில் கடன் வாங்காத பணியாளர்களே இருக்க மாட்டார்கள். இப்படி வட்டியில்லாக் கடன் வாங்கி, அதைச் சிலர் வட்டிக்கு விடுவார்கள் என்றும் சொல்வார்கள். மிகவும் சிக்கல் பிடித்த வேலை. இன்னொரு சலுகை, சம்பள அட்வான்ஸ். இது சிறிய தொகை. அந்த மாதத்துச் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும்.

ஒரு நண்பர் ஒரு கடன் முடிந்த அந்த மாதத்திலேயே இன்னொரு கடனுக்கு விண்ணப்பம் போடுவார். பல தடவை கொடுத்து விட்டார்கள். ஒரு முறை முடியாது என்று கூறப்பட்டது கடன் தராவிட்டால் தற்கொலைதான் என்று முதலாளிக்கு அவர் எழுதினார். முதலாளி அந்த நபரைக் கூப்பிட்டார். ‘‘இதோ பார். நான் இந்தக் கடிதத்தை போலீசுக்கு அனுப்பப் போகிறேன். நீ அவர்களிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார். அவ்வளவுதான், அந்தப் பணியாளருக்கு ‘உடும்பு வேண்டாம்... கையை விட்டால் போதும்’ என்றாகி விட்டது.

ஆதலால், ‘விஷம் குடிப்பேன்’ என்று பயமுறுத்திச் சந்திரபாபு ஜெமினியில் வேஷம் பெற்றார் என்பதை நம்ப முடியவில்லை. இது அவருடைய பல வாழ்க்கை வரலாற்று நூல்களில் இருக்கிறது. ஜெமினி முதலாளி முன்பே சந்திரபாபுவுக்கு ஒரு வேஷம் தீர்மானித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து சந்திரபாபு ஒரே ஒரு ஜெமினி படத்தில்தான் நடித்திருக்கிறார். அது ‘மூன்று பிள்ளைகள்’.
‘மூன்று பிள்ளைகள்’ நல்ல படம். அதன் தோல்வியை விளக்க முடியாது. ஆனால் அதற்காக அதை முதலாளி ஒரேயடியாகப் பெட்டியில் போட்டிருக்க வேண்டியதில்லை. அதே போல ‘ஞானசௌந்தரி’ என்ற படம். அதையும் ஒரேயடியாகப் புதைத்திருக்க வேண்டியதில்லை.

‘மூன்று பிள்ளைக’ளில் தகப்பனார் புரிந்த திருட்டுக் குற்றத்தைத் தான் ஏற்று மூன்றாவது மகன் சிறைக்குச் செல்கிறான். தகப்பனார் தூக்கில் தொங்குகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் அம்மாவை நடுத்தெருவில் விடுகிறார்கள். தண்டனைக் காலம் முடிந்து மூன்றாவது மகன் வெளியில் வந்து அம்மாவையும், கூடவே ஒரு வேலையையும் தேடுகிறான்.

ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கதாநாயகனாக! படம், ‘ராமாயணம்’. படத்திற்கு இசை அமைக்க இசை அமைப்பாளர் வருகிறார். யார்? சந்திரபாபு! மேற்கத்திய பாணியில் ஒரு சோக டியூன் பாடுகிறார். அங்கே கூடியுள்ளவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். ‘‘இவ்வளவு சோகம் கூடாது. நான் பாடுகிறேன்’’ என்று படத் தயாரிப்பாளர் பாடுகிறார். அது நாராயண ராவ் என்கிற அற்புதக் கலைஞன். ‘அப்பா மாண்டாயோ, ஓ பாலகா’ என்று சங்கதி போட்டுப் பாடுவார்.

ஹார்மோனியக்காரர் நாடகக் கம்பெனிக்காரர். இரண்டு பேரும் சேர்ந்து ஒரே ரகளை. சந்திரபாபு மயக்கம் போட்டு விழுந்து விடுவார்! இந்த ஒரு காட்சியே மிகவும் நன்றாக இருக்கும். இப்போது படத்தின் ஒரு பிரதியாவது இருக்குமா என்பது சந்தேகமே.

சந்திரபாபு ‘மூன்று பிள்ளைகள்’ நாட்களில் மிகவும் ஒல்லியாக இருப்பார். நடந்து போய்க்கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒருமுறை வண்டியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார். வண்டி, வாடகை வண்டி. ஜெமினி படத்திற்குப் பின்தான் ‘மாமன் மகள்’, ‘குலேபகாவலி’, ‘புதையல்’ முதலிய படங்கள் அவருக்குப் புகழ் கொணர்ந்தன. ‘சபாஷ் மீனா’ அவரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.

எனக்கு அவரோடு அதிகம் தொடர்பு இல்லை. திடீரென்று ஒரு நாள் நான் அவரை மீண்டும் சந்திக்க வேண்டி வந்தது. அது ஒரு சாமியார் வீடு. அந்த இடத்தின் பயிற்சி முறையில் முதல் படி... யாருக்கும் எதையும் அந்தரங்கமாக இருக்க விடாமல் செய்து விடுவது. எப்போதும் கூட்டம். சந்திரபாபுவை நாகபூஷணம் என்பவர் அழைத்து வந்தார். அந்தக் கூட்டத்தின் நடுவில் சாமியார் - சந்திரபாபு சந்திப்பு! அந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோருக்கு சந்திரபாபுவை ஒரு பெரிய சினிமா நட்சத்திரம் என்று தெரியாது. சாமியாரிடம் வரும் நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என்றுதான் நினைத்தார்கள். இது சந்திரபாபுவுக்கு பெரும் ஆறுதல்.

‘‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் பிறந்ததிலிருந்து எல்லாரும் என்னைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்’’ என்று அவர் சொன் னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது ஓர் அடிப்படைத் தத்துவக் கேள்வி. தெய்வ நம்பிக்கை உடையோர் அனைவரும் கடவுளை வேண்டுவது அபயத்துக்குத்தான். எல்லா விக்கிரகங்களும் வலது கையை ‘பயப்படாதே’ என்று காட்டுவதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். சாயிபாபாவின் புகழ்பெற்ற செய்தி - ஒரே செய்தி... ‘யாமிருக்க பயமேன்’. சந்திரபாபுவின் பிரச்னை ஒரு பதிலில், ஒரு சந்திப்பில் முடியக் கூடியது அல்ல. ஆனால் அவர் அதன் பிறகு அந்த சாமியார் வீட்டுக்கு வரவில்லை.

அவருடைய சொந்த வாழ்க்கையில் என்ன விசேஷப் பிரச்னை என்றும் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. என்னுடைய ஒரே யூகம், அவருக்கு நண்பர் என்று யாரும் இல்லாது போயிருக்கலாம். நடிக்க வந்து அவர் போல நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் இன்று யாரும் வயதான காலத்தில் வறுமையில் வாடுவதில்லை. அவர் வீடு கட்டத் தொடங்கினார். எப்படி? காரிலிருந்து நேராக முதல் மாடிக்குப் போகிற மாதிரி! அதில் என்ன பெரிய சௌகரியம்? வீடு பாதியிலேயே நின்றது. அவரும் இறந்து விட்டார்.

எனக்கு நிஜமாகவே பெரிய வியப்பு. நாம் எல்லா நேரத்திலும் பயத்தில்தான் இயங்குகிறோம். இதை ஒரு தனிப் பயிற்சியும் இல்லாமல் சந்திரபாபு கூறிவிட்டார்! சந்திரபாபுவுக்கு எங்கோ ஓரிடத்தில், ஒரு கணம் ஒளி கிடைத்திருக்கிறது. இன்று யோசித்துப் பார்த்தால் அவர் விஷமே உண்ண வேண்டியதில்லை. அவருடைய பயமே அவரை ஓர் அகால முடிவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
‘‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் பிறந்ததிலிருந்து எல்லாரும் என்னைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்’’ என்று சந்திரபாபு சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

படிக்க

நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா.கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் ‘சிறந்த ஓவிய விமர்சகர்’ என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம்... மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்துக்காக எடுத்த ‘லிபி’ என்ற படத்தைப் பார்த்தேன். எவ்வளவு ஆற்றல், எவ்வளவு உழைப்பு!

அவருடைய நூல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு சமீபத்திய நூல் ‘புதையல் புத்தகம்’. இதை புதையல்கள் புத்தகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டில் வந்த முதல் தமிழ் அச்சு நூலாகிய ‘தம்புரான் வணக்கம்’ தொடங்கி லா.ச.ராவின் ‘சிந்தா நதி’ வரை மொத்தம் 47 நூல்களின் விவரிப்பு. தகவல் களஞ்சியம் தகவல்கள் தரும். ஆனால் கந்தசாமி யின் கட்டுரைகள் அந்த நூல்களின் முக்கியத்துவத்தை விளக்குபவை. இன்று தேடினாலும் எளிதில் கிடைக்காத மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் எழுதிய புதினம் பற்றிய கட்டுரையுடன், ‘புதையல் புத்தக’த்தில் ஒரு பேரகராதி பற்றியும் கட்டுரை இருக்கிறது. (புதையல் புத்தகம் - சா.கந்தசாமி, விலை: ரூ.150/- வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென் னை-600017. தொடர்புக்கு: 044-24322177)

அசோகமித்திரன்

(பாதை நீளும்...)