பாட்டில்!



தூங்கி எழும்போதே காலில் இடித்தது. எல்லாமே காலி பாட்டில்கள். பொதுவாக, மாதம் 25 அல்லது 30 பாட்டில்கள்தான் சேரும். இந்த மாதம் எங்கள் பேச்சுலர் ரூமில் புதிதாய் ஒரு விருந்தினன். வந்தான்... தங்கினான்... செலவுகளை ஏற்றினான்... பாட்டில் எண்ணிக்கையைக் கூட்டினான்... சென்றுவிட்டான். இப்போது மாதக்கடைசியில் பர்ஸ் பல்லைக் காட்டுகிறது.
பர்ஸில் மூன்று ஐந்து ரூபாய் காயின்கள்தான் இருந்தன. ஒரு வேளை டீ, தம்முக்குத்தான் சரியாய் இருக்கும். மதியத்துக்கு?

மூணு தம் வாங்குவோம்... ஆபீஸ் கேன்டீனிலேயே டீயைக் குடிப்போம் (உவ்வே). முடிவெடுத்து பேன்ட்டை மாட்டினேன். ‘‘தம்பி’’ என்ற குரல் மேன்ஷனுக்குக் கீழே கேட்டது. பாட்டில் வியாபாரி. இப்போதைக்கு கடவுள்!

அவருக்கு நானும் எனக்கு அவரும் ரெகுலர் கஸ்டமர்ஸ். வழக்கம் போல பாட்டில்களை வாரி சாக்குப் பையில் போட்டவர், பத்து ரூபாயை நீட்டினார். ‘‘இன்னொரு பத்து ரூபா குடுங்க. பாட்டில் அதிகமா இருக்கு’’ என்றேன். சிரித்துக்கொண்டே இருபது ரூபாய் தாளை நீட்டினார். ‘‘ஏன் சிரிக்கிறீங்க?’’‘‘ஒண்ணுமில்லங்க தம்பி... உங்க வயசுல நான் கூட அதிக பாட்டில் விலைக்குப்போட்டிருக்கேன். அதான் இந்த நிலைமை!’’

டேனியல் வி.ராஜா