படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?



கல்வி ஸ்பெஷல்


இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் எஞ்சினியர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பிற துறைகளையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் சில கோடிகளைத் தொடும். இன்னொரு பக்கம் பெரும்பாலான எஞ்சினியர்கள், தங்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத ஒரு துறையில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் படிக்கும் 70% மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்துதான் வருகிறார்கள். சொத்துகளை விற்றும், கல்விக்கடன் பெற்றுமே படிக்கிறார்கள். படிப்பு முடியும்போது அவர்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கின்றன. ஆனால் நல்ல சம்பளத்தில் படித்த துறையிலேயே கௌரவமான வேலை சில மாணவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. கலை அறிவியலிலும் இதே நிலைதான். பிஹெச்.டி முடித்தவர்களே கூட வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

‘‘படிப்பு என்பது அறிவுக்கானதா, வேலைக்கானதா என்ற தெளிவில்லாமல் படிப்பதுதான் இதற்குக் காரணம்’’ என்கிறார் மனிதவள நிபுணர் பாலாஜி. ‘‘படிப்பை அறிவுக்கானது என்று கருதி கற்கிற மாணவர்களே நல்ல எதிர்காலத்தை எட்டுகிறார்கள். வேலைக்கானது என்று நினைப்பவர்கள் தேங்கி விடுகிறார்கள். பொறியியல், கலை, அறிவியல்... எதுவாக இருந்தாலும் மற்றவர்களை விட எவ்வளவு மதிப்பெண் அதிகமாக எடுத்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. மற்றவர்களை விட கூடுதலாக என்ன தெரிந்து வைத்திருக்கிறான் என்றே பார்க்கிறார்கள்.

முன்பெல்லாம் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு. கேம்பஸ் இன்டர்வியூக்களில் மாணவர்கள் நல்ல நிறுவனங்களில் வேலை பெற்றார்கள். இப்போது டாப்-10 கல்லூரிகளில் மட்டுமே முறையாக இது நடக்கிறது. அதிலும் கூட பல நிறுவனங்கள், ‘இப்போது ஆட்களைத் தேர்வு செய்துவிட்டு இன்னும் இரண்டாண்டுகள் கழித்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி ஆர்டரை மட்டும் கொடுத்துவிட்டுப் போகின்றன.

வளாகத் தேர்வுக்கு வாய்ப்பில்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல லட்சம் போட்டியாளர்கள் கொண்ட பொதுக்களத்தில் நிற்க வேண்டியிருக்கிறது. வெறும் படிப்பு மட்டும் அந்த களத்தில் எடுபடாது. படிப்பைத் தாண்டிய அறிவையும் திறனையுமே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. 85%, 90% மார்க் இருந்தால் கூட அது வேலைக்கான தகுதியாகாது. சப்ஜெக்ட்டில் தேர்ச்சி இருக்கிறதா என்பதுதான் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு. எனவே பாடப் புத்தகங்களைத் தாண்டி அவர்கள் தயாராக வேண்டும்’’ என்கிறார் பாலாஜி.

‘‘கடந்த ஆண்டு 1.25 லட்சம் பொறியாளர்கள் படிப்பை முடித்து வெளியே வந்தார்கள். ஆனால் சுமார் 50 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்தது. மற்றவர்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத துறையில் கிடைத்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். இதற்குக் காரணம், நம் பாடத்திட்டத்தில் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ என்ற, வாழ்க்கைக்கு மிக முக்கியமான பகுதிக்கு இடமில்லை என்பதுதான். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவருக்கு, தன் பைக்கில் செயின் கழன்றால் கூட மாட்டத் தெரிவதில்லை.

எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படிப்பவர், தன் வீட்டில் கரன்ட் ஃபியூஸ் போனால் செய்வதறியாமல் விழிக்கிறார். பிறகென்ன கற்றுக் கொடுக்கிறது கல்வி? யதார்த்தத்துக்கும் பாடப்புத்தகத்துக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில், அதை மட்டுமே மாணவர்கள் நம்பியிருப்பது எவ்வளவு பெரிய விபரீதம்? பெரிய நிறுவனங்கள் தொடங்கி, சிறு, குறு நிறுவனங்கள் வரை ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், தகுதி வாய்ந்த பொறியாளர்களையும், கலை, அறிவியல் பட்டதாரிகளையும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுள்ளவர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.

குறிப்பாக டயர்-1 பொறியியல் கல்வி நிறுவனங்கள் தவிர பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இண்டஸ்ட்ரிகளோடு தொடர்பே இல்லை. வெறும் ஏட்டுக்கல்வியை முடித்துவிட்டு வெளியில் வருகிற மாணவர்களுக்கு இயந்திரங்களே புதிதாக இருக்கின்றன. ‘ஆன் ஜாப் டிரெயினிங்’ என்ற கான்செப்ட் இன்னும் தமிழக பொறியியல் கல்லூரிகளுக்குள் வரவில்லை. கல்வி நிறுவனங்களை மட்டுமே நம்பியிராமல் மாணவர்கள் பொதுவெளியில் தங்களின் அறிவை விசாலப்படுத்திக் கொள்வது நல்லது’’ என்கிறார் கல்வி ஆலோசகர் ரங்கப்பிரியா.

படித்தவுடன் வேலைவாய்ப்பைப் பெற, மாணவர்கள் படிக்கும்போதே தயாராவது எப்படி? கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டோம். ‘‘டிகிரியும் மார்க்கும் இருந்தாலே வேலை கிடைத்துவிடும் என்ற நிலை மாறிவிட்டது. முதலில் இந்த யதார்த்தத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக வேலையே கிடைக்காது என்று அவநம்பிக்கை கொள்ளவும் தேவையில்லை. ஆர்வமும் உழைப்பும் தேடலும் இருந்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் வாய்க்கும். பாடப்புத்தகங்களைத் தாண்டி நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். டெக்னாலஜியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இன்டர்நெட்டை முழுமையாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும். புகழ்பெற்ற பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வகுப்பறைகளில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. நேரம் கிடைக்கும்போது அதையெல்லாம் பார்க்கலாம்.

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவதே இல்லை. நாங்கள் நடத்திய ஆய்வில் வெறும் 4% மாணவர்கள்தான் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். மாணவர்களின் தேக்கத்துக்கு இதுதான் முக்கியமான காரணம். வாரத்துக்கு 2 நாட்களாவது நூலகத்துக்குச் செல்ல வேண்டும். நூலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு ரிசர்ச் பேப்பர்கள், சர்வதேச தொழில்நுட்ப இதழ்கள், புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறையே வகுத்துள்ளது.

கிடைக்கும் நேரத்தில், துறை சார்ந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கு மொழியறிவு மிகவும் முக்கியம். ஆங்கிலம் தவிர வெளிநாட்டு மொழிகள் சிலவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் 50% மாணவர்கள் ஆங்கிலத்திலேயே போதிய தேர்ச்சியில்லாமல் வருகிறார்கள். வேலைத்திறனில் மொழியறிவு மிகவும் பிரதானமானது. கம்யூனிகேஷன் ஸ்கில்லும் முக்கியமானது. இதெல்லாம் கல்லூரிக் காலத்திலேயே மாணவனுக்கு வரவேண்டும். அணுகுமுறை, பேசும் முறை, செயல்படும் முறையில் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

அடுத்து பொது அறிவு. கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஒரு நிறுவனத்தில் இன்டர்வியூ நடந்தது. அந்த இன்டர்வியூவில் 168 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டார்கள். அவர்களிடம் ‘நாளை (ஜனவரி 26) என்ன நாள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. 157 பேருக்கு விடை தெரியவில்லை. 3 பேர் ‘சுதந்திர தினம்’ என்றார்கள். 8 பேர் மட்டுமே ‘குடியரசு தினம்’ என்று சரியான பதிலைச் சொன்னார்கள். இதுதான் இன்றைய மாணவர்களின் நிலை.

இன்றிருக்கிற போட்டி நிறைந்த உலகில் ஏனோ தானோ என்று படித்து பட்டம் வாங்கினால் மட்டும் போதாது. தேட வேண்டும். உழைக்க வேண்டும். படிக்க வேண்டும். கற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்கான வாய்ப்பை உங்களைத் தவிர வேறு யாராலும் உருவாக்கித் தர முடியாது’’ என்கிறார் அவர்.
புரிகிறதா மாணவர்களே!

அப்டேட் செய்யுங்கள்

* நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
* துறை சார்ந்த செய்திகள், தொழில்நுட்பங்கள், வளர்ச்சிகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
* இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்.
* ப்ராஜெக்ட்களை ஓசி வாங்காதீர்கள். உங்கள் சுயத்தை நிரூபியுங்கள்.
* பகுதி நேரமாகவோ, வார இறுதி நாட்களிலோ துறை சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்து பயிற்சி பெறுங்கள்.
* மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவர்கள் டிசைனிங் சாஃப்ட்வேர்களை கற்றுத் தேர்வது நல்லது.
* எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பவர்கள் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி தொடர்பான செய்திகளையும் அப்டேட் செய்து கொள்வது
நல்லது.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவருக்கு, தன் பைக்கில் செயின்
கழன்றால் கூட மாட்டத் தெரிவதில்லை. எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்
படிப்பவர், தன் வீட்டில் கரன்ட் ஃபியூஸ் போனால் செய்வதறியாமல்
விழிக்கிறார். பிறகென்ன கற்றுக் கொடுக்கிறது கல்வி?

- வெ.நீலகண்டன்