விக்ரம்தான் என் ரோல் மாடல்! பரவச பரத்



‘‘‘பாய்ஸ்’ படத்தில் தொடங்கிய பயணம், ஏற்ற இறக்கங்களை சந்தித்து, இப்ப இருபத்தைந்தாவது படத்தைத் தொட்டிருக்கு. 25வது படம் ஸ்பெஷலான ஸ்கிரிப்ட்டா அமையணும்னு காத்திருந்த நேரத்தில் கேட்ட கதைதான் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி.’ ஒரு படத்தில் ஆடியன்ஸ் எதையெல்லாம் எதிர்பார்க்கிறாங்களோ அது எல்லாமே இருக்கும் படமா இது இருக்கும்’’ - கண்களில் நம்பிக்கை தேக்கிப் பேசுகிறார் பரத்.

‘‘சித்த வைத்தியத்தின் மகத்துவம் பேசும் கதையா?’’

‘‘இல்லை. படத்தில் அது ஒரு அங்கம்தானே தவிர, முழுக்கவே அது இல்லை. நமது பாரம்பரிய வைத்தியம் என்றாலே, இப்போ தவறான மதிப்பு இருக்கு. அதைப் போக்குற மாதிரியான சில விஷயங்கள் படத்தில் இருக்கு. மொத்தக் கதையும் அதை பேஸ் பண்ணி இருந்தாலோ, கருத்து சொல்றேன் என்கிற பேரில் காட்சிகள் வைத்தாலோ போரடிச்சிடும். அதனால் காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் எல்லாம் கலந்த கமர்ஷியல் மசாலாவா ‘சிகாமணி’ ரசிக்க வைப்பான்.’’

‘‘உங்க கேரக்டரில் என்ன சுவாரஸ்யம் இருக்கு?’’

‘‘ஐந்து தலைமுறையா படிப்பறிவு இல்லாமல், சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நான். படிக்காதவன் என்பதால் எனக்கு யாரும் பெண் தர மாட்டாங்க. அதனால் காலேஜ் படித்த நந்திதாவுக்கு ரூட்டு விட்டு என் வழிக்கு எப்படி கொண்டு வர்றேன் என்பதை காமெடியா சொல்லியிருக்கார் இயக்குனர். ஒரு பொய் சொல்லி, அதை மறைக்க இன்னொரு பொய், அதுக்காக ஒரு டிராமா என்று படத்தில் நிறைய கலகலப்பான கேரக்டர்கள் இருக்கு.

தம்பிராமையா சார்தான் நந்திதாவோட அப்பாவா வர்றார். ‘அப்பா கேரக்டர் என்றாலே  யோசிப்பேன். ஆனா இந்த கேரக்டர் என் நடிப்புக்கு நல்ல தீனி போடுற மாதிரி இருக்கு. கண்டிப்பா பண்ணியே ஆகணும்’ என்று அவர் ஆசை ஆசையா நடிச்சுக் கொடுத்திருக்கார். சாம்பிராணி புகை போடும் பாயாக மயில்சாமி இரண்டே காட்சிகளில் வந்தாலும், மனிதர் கலக்கி எடுத்திருக்கார். அப்புறம் ‘பீட்சா’ கருணா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்னு படத்தில் வரும் பல கேரக்டர்கள் சிரிப்பு விருந்து படைக்கிறார்கள். காதல் காட்சிகளில் நந்திதாவுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி செமயா ஜெல் ஆகியிருக்கு. இதில் அவரோட கேரக்டர் அப்ளாஸ் அள்ளும்.’’

‘‘இத்தனை வருஷமா இங்க இருந்தும், இன்னும் பெரிய இடத்தைப் பிடிக்க முடியலை என்கிற ஃபீலீங் இருக்கா?’’

‘‘எனக்கு ஓவர் நைட்ல எதுவும் நடந்ததில்லை. வெற்றி, தோல்வியைக் கலந்தே பார்த்திருக்கேன். இந்த காலகட்டத்தில் இத்தனை படம் நடித்ததே பெரிய விஷயம். சில நேரங்களில் உழைப்புக்கேற்ற வெற்றி கிடைக்காத வருத்தம் இருக்கும். ‘நமக்குப் பின்னாடி வந்தவங்களெல்லாம் பெரிய இடத்தில இருக்காங்களே...

நாம பின்தங்கிட்டோமே’ன்னு ஒருநாளும் நினைச்சதில்லை. அப்படி நினைச்சா, இருக்குற இடத்தையும் தக்க வச்சிக்க முடியாது. எப்போதும் எதிர் மறையான எண்ணத்தை வச்சிக்க மாட்டேன். விக்ரம் சாரெல் லாம் போராட்டங்களை சந்தித்துத்தான் வெற்றியை ருசித்தார். இப்பவும் கடுமையா உழைக்கிறார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். மானசீகமா எனக்குள் அவர் இருப்பது மாதிரி நினைச்சுக்குவேன்!’’‘‘அடுத்து..?’’

‘‘ ‘ஏழு கடல் தாண்டி’ என்கிற படம். சத்யராஜ் சாருடன் நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸோட அசிஸ்டென்ட் செந்தில்குமார்தான் இயக்குனர். முப்பது நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இதுவும் நல்ல ஸ்கிரிப்ட். இது தவிர ரெண்டு கதைகள் கேட்டு வச்சிருக்கேன். இத்தனை வருஷத்தில் நிறைய அனுபவங்களையும் பக்குவத்தையும் இந்த சினிமா எனக்குக் கொடுத்திருக்கு. அதே சினிமா என்னை பெரிய இடத்தில் கொண்டு போய் வைக்கும்னு நம்புறேன்.’’

‘‘குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?’’

‘‘9 மணிக்குப் போயிட்டு 6 மணிக்கு வீட்டுக்குத் திரும்புற வேலை இல்லை சினிமா. இதைப் புரிஞ்சிக்கிற மனைவி அமைந்தால்தான் சந்தோஷமா வாழ்க்கை நடக்கும். எனக்கு அப்படியொரு மனைவி அமைஞ்சிருக்காங்க. லைஃப் சூப்பரா போகுது சார்!’’

- அமலன்