மனக்குறை நீக்கும் மகான்கள்!



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

வா என்பது ஒற்றை வார்த்தையா? வாக்கியமா?
இல்லை... வா என்பது ஓசை எழுப்பாத செயலாகக் கூட இருந்துவிடும்.

அந்தச் செயலின் பின்னால் தொடரும் நிகழ்வில் இருக்கிறது முன்னதின் வலிமை. பின்னால் தொடர்வது என்பது முன்னால் நடப்பவரின் மீதான நம்பிக்கை... தீராக்காதல் நிகழ்த்தும் ரசாயனம்.

‘நம் நான்கு கண்களும் பேசிக்கொண்டன. உன்னை நான் நேசிக்கிறேன். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. வா தோழமையே கை கோர்த்துக்கொள்வோம். நான் வானமாய் இருக்கிறேன். நீதான் நிலம். இந்தப் பிரபஞ்சமெங்கும் நிரம்பி வழியும் கானமாக நானிருந்தால், அதில் இனிய பாடலாய் நீ தொடர்ந்து வா! நீ என் ஆன்மாவிற்கு நெருக்கமாய் இருக்கிறாய். தீபமாய் ஒளிர்கிறாய். என் உயிரை உள்வாங்கி வளர்க்கும் பாத்திரமாய் நான் உன்னை ஆராதிக்கிறேன்.

அச்சமின்றி வா! எண்ணமும் செயலுமாய் நாம் தொடர்வோம். தர்மத்தின் வழியில் நின்று அறம் வளர்ப்போம்’ என்று சொல்லும் நாயகனின் பின்னால் நம்பிக்கையோடு ஏழடி எடுத்துத் தொடரும் இணை போல இருந்தது, குமரகுருதாசர் அந்த இளைஞனின் பின்னால் நடந்தது. நெடு நெடு உயரம். நெற்றி நிறைய நீறு பூசி முன்னால் நடக்கும் இளைஞன் பின்னால் கேள்வி எதுவுமின்றி தொடர்ந்தார். குமரக்கோட்டத்தைப் பார்க்காமல் எப்படித் தவிர்த்தோம். ஏகாம்பர நாதரை தரிசித்தேனே... காமாட்சி சிரித்தாளே...

குமரக்கோட்டம் எப்படி மறந்தது... அலையாய் கேள்வி எழுந்தபோதே ‘ரயிலுக்கு வேறு நேரம் ஆகிறதே’ என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. ஆனாலும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல முன்னால் நடக்கும் இளைஞனைத் தொடர்ந்தார், குமரகுருதாச சுவாமிகள்.இவன் பின்னால் நடப்பது இப்போதைய நிகழ்வாக இல்லாமல், அது எப்போதோ உணர்ந்து திளைத்த ஆதி அனுபவமாக  இருந்தது. ஏழடி இடைவெளிக்குள் தொடரும் எந்த உறவும் பூர்வஜென்ம பந்தம் என வேதம் சொன்னது நினைவு இடுக்கில் நின்று எட்டிப் பார்த்தது.

விளைந்து நிற்கும் கீரைப் பாத்திகளின் மத்தியில் அமைந்திருக்கும் குமரக்கோட்டம் அருகில் வந்ததும் அந்த இளைஞன் நின்றான். ‘‘ஐயா, அதோ கொடிமரம்!’’ என்று கை நீட்டினான். கொடிமரத்தையும் விமானத்தையும் பார்த்தவர், நன்றி சொல்லத் திரும்பிய நொடியில் இளைஞன் மாயமாகி இருந்தான். வந்தது குமரன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ‘பழநிக்கு நான் சொல்லும் வரை வரக்கூடாது’ என்று கட்டளையிட்ட கந்தன், குமரக்கோட்டத்தை தரிசிக்க கையோடு அழைத்து வந்தது எத்தனை விநோதம்.

என்ன விதமான கருணை. சிலிர்த்தார். விழியோரங்களில் நீர் கட்டி நின்றது. உடைந்து அழுதுவிடுவோமோ என அஞ்சினார். வார்த்தையாக்க முடியாத நிறைவால் மனசு மௌனம் பூசிக்கொண்டது. மெல்ல நடந்தார். உள்ளுக்குள் விசும்பிக் கொண்டிருக்கும் இவரை பக்தர்கள் விநோதமாகப் பார்த்தார்கள். ‘என்ன கஷ்டமோ...’ என முணுமுணுத்து நகர்ந்தார்கள்.

மெல்ல நடந்து கோயிலுள் சென்றார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அருகில் இன்னொருவர் நடப்பது போலவே உணர்ந்தார். ‘விளையாடுகிறாயா?’ என நான்கு பக்கமும் காற்றில் கைகளை அலைய விட்டுப் பார்த்தார். ‘மாயனாயிற்றே...’ என சமாதானப்படுத்திக் கொண்டார். கருவறை கண்டார். மெல்லிய இருட்டில் நெய் தீப ஒளியில் சிரிக்கும் குமரனை குளிரக் குளிர தரிசித்தார்.

‘என்னைக் கூடவே அழைத்து வந்துவிட்டு எனக்கு முன்னால் வந்து நீ இங்கு நின்று கொண்டாயா... நாலடி முன்னால் நடந்தாயே... அருகில் நின்று அதோ என்று கை நீட்டினாயே... தொடும் தூரத்தில் நின்ற உன்னைத் தொலைத்து விட்டேனே...

உன் மேனியில் பூசிய விபூதியின் வாசனை இதோ இன்னும் என் நாசிகளை விட்டு நகரவில்லையே... வந்தது நீதான் என்பதை அறிந்துகொண்டுதான், ஏன் என்று கேட்காமல் என் ஆன்மா உன் பின்னால் ஓடி வந்ததோ? ஆனால், என் முன்னால் நடப்பது நீதான் என ஏன் அறிவுக்குத் தெரியாமல் போனது? தெரிந்திருந்தால் விட்டிருப்பேனா உன்னை...’

- தவித்தார் குமரகுருதாசர். இதைத்தான் அருள்மாயை என்பார்களோ... சோமாஸ்கந்தர் போல ஏகாம்பர நாதர் ஆலயத்துக்கும் காமாட்சி அன்னை ஆலயத்துக்கும் நடுவில் இருக்கும் குமரக் கோட்டம் தன் கண்ணுக்குத் தெரியாமல் போனது இதனால்தானோ என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

தரிசனம் முடித்து ரயில்வே ஸ்டேஷன் வந்தார். கால அட்டவணைப்படி, அந்த ரயில் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும். ரயிலைத் தவற விட்டுவிட்டோம் என்ற நினைப்புடன்தான் அவர் வந்தார். ஆனால், ரயில் எஞ்சினில் ஏதோ கோளாறு என தாமதமாகப் புறப்பட இருந்தது. ரயிலில் ஏறி அமர்ந்தார். இதுவும் உன் லீலையா?

என் மீதுள்ள கருணையா என மனம் கனிந்தார். வண்டி, கரியைக் கனலாக்கி விழுங்கிக்கொண்டு நகர்ந்தது. ஜன்னல் வெளியே நகரும் மரங்களின் மீது அவர் மனம் கொஞ்சமும் ஒட்டவில்லை. குமரக்கோட்டத்து அழகனையே சுற்றிச் சுற்றி வர, இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அணுவாய் வெடிக்க, விசும்பி அழுதார். சிந்திய கண்ணீர்த் துளிகளின் ஊடே வார்த்தைகள் வரிசை கட்டத் தொடங்கின.

‘பிமர மீட்டம் செய் காஞ்சியில் நான் சிலநாள்
பெரிய கோயில்கள் கண்டு புறப்படு ஞான்று
அமல மூர்த்தங்கொள் ஆசுடை வீங்கிய செவ்
அழகனாய் என்முன் வந்தநும் காரியம் என்?
குமர கோட்டம் கண்ணுற்றதின் றிங்கெனவே
குயின்று காட்டி மறைந்த தயாநிதியே
தமசில் வேற்செங்கையா நினையே கருதித்
தடவுகின்றது என் நெஞ்சை வலக்கரமே’

- என மனம் கசிந்தார். இன்னொரு நாள் இப்படி வாய்க்குமா என ஏங்கினார். செங்கல்பட்டில் இறங்கினார். திருக்கழுக்குன்றம் முருகனோடு பேசினார். நெஞ்சு முழுக்க செந்தீயில் பிறந்தவனைச் சுமந்தபடி, சொந்த ஊர் திரும்பினார். குகனின் நினைவுகள் குமரகுருதாசரோடு சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது. அது சுகமாய்த்தான் இருந்தது. ஒருநாள் சுவாமிகளின் அன்பர்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘குமரகுருதாச சுவாமிகள் குறித்து நாடி போன்ற நூல்களில் ஏதேனும் குறிப்புகள் இருக்குமா’ என்கிற பேச்சு எழுந்தது. அப்போது கமலமா முனிவர் எழுதிய ஒரு நூல் பற்றி பேச்சு வந்தது. அந்த நூலின்படி, ‘கை ரேகைகளைப் பார்த்து ஒருவரின் வாழ்க்கை, எதிர்காலம் லாப நஷ்டங்கள், நன்மை தீமைகள் என அனைத்தையும் சொல்லிவிட முடியும்’ என்கிற தகவல் பரிமாறப்பட்டது.

அந்த நூலில் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரை அழைத்து வந்தார்கள். அவர் குமரகுருதாச சுவாமிகளைப் பார்த்தவுடனேயே, ‘‘ ‘கபாலி முக்கோண கைலாச ரேகை’ இவரது கையில் இருக்கிறது’’ என்று சொன்னார். அந்த ரேகைகள் குறித்து சொல்லும் ஏடுகளைத் தேடி எடுத்தார். அதில், ‘தமிழால் முருகனைப் பாடுவார்.

ஞான நூல்களைப் படைப்பார். மிகப்பெரிய குருவாக மலர்வார். ஏராளமான சீடர்கள் இவரது பாதையில் பயணித்து கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சித்து காரியங்களில் ஈடுபடாதவர் என்று சொன்னதோடு, குமரகுருதாசர் ஆழ்மனதில் யோசித்து மறைத்து வைத்திருந்த ஒன்றைப் பற்றியும் அந்த ஏடு உணர்த்தியது. அதைக் கண்டவுடன் சுவாமிகள் ஆச்சரியம் அடைந்தார். அப்படி அவர் ஆழ்மனதில் யோசித்து வைத்திருந்தது இதுதான் என்று கடைசிவரை சுவாமிகள் யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை ஸ்ரீமத் குமார சுவாமியம் - திருவருட் செயல் ஞாபகம் எனும் பதிகத்தில், ‘இயல்பினே மறைவாகி என் மாட்டேஇருந்ததூஉம் அப்பனுவலில் கண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையில் இருந்து, தொழிலின் வரவு - செலவுகளை கவனித்து வந்தாலும் குமரகுருதாசரின் மனசு மீண்டும் தனிமைத் தவத்திற்கு ஏங்கியது.

 என்ன செய்யலாம் என யோசித்தபோது, பத்மநாபபுரத்தில் இருக்கும் நண்பர் சுப்பிரமண்ய பிள்ளையின் நினைவு வந்தது. முருகனின் மாமனான பள்ளி கொண்டிருக்கும் பத்மநாபசுவாமி மனதில் சிரித்தார். உடனே, குமரகுருதாசர் கேரளம் நோக்கி நகர ஆரம்பித்தார். தமிழ் அன்னை, தனக்கு அழகாய் ஒரு இலக்கண நூல் மலரப் போவதை எண்ணி மகிழ்ந்தாள்.

இந்த வாழ்க்கை சுவாமி தந்தது!

‘‘எனக்கு 2002ல் திருமணம் நடந்தது. கடவுள் பக்தி உண்டென்றாலும் நான் அதில் தீவிரம் காட்டியதில்லை. ஆனால், என் மனைவிக்கு முருகப் பெருமான் மீது தீவிர பக்தி. 2006ல் பாம்பன் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்டோம். அன்று முதல் தினமும் வீட்டில் பாம்பன் சுவாமிகளை கும்பிடும் வழக்கம் உருவானது.

ஒரு மகான் என்பதைத் தாண்டி தாத்தா என்கிற உறவு மலர்ந்தது. பாம்பன் சுவாமிகளின் அருளால் 2007ல் லண்டனில் வேலை கிடைத்தது. இந்த வாய்ப்பு நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.

கடந்த ஏப்ரல் மாதம். என் மனைவியின் மூன்றாவது பிரசவத்தில் சிக்கல். ‘கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது. 10 நாட்களில் ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷனே சிக்கல்தான்’ என்றார் டாக்டர். ‘நீயே துணை’ என பாம்பன் சுவாமிகளின் பாதங்களை மானசீகமாகப் பற்றிக்கொண்டோம்.

ஆபரேஷன் நடந்தபோது, நான் கூடவே இருந்தேன். சுவாமிகள் அருளிய, ‘குமாரஸ்தவ’த்தையும் ‘துக்கரகித பிரார்த்தனை’ பதிகத்தையும் சொன்னேன். பாம்பன் சுவாமிகளின் கருணையால் என் மூன்றாவது மகனையும், மனைவியையும் நலமாய்ப் பெற்றேன். இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது.

எனக்கு எல்லாம் அவர்தான்!’’ என்று சொல்லும் கார்த்திக்கின் சொந்த ஊர், திருச்சி. தற்போது லண்டன்வாசியான இவர், அங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து, பாம்பன் சுவாமிகள் அருள்நெறிச் சபையையும் நடத்தி வருகிறார்.

வெளிநாட்டு வேலை தரும் மந்திரம்


கண்ணாயிர முடையான்முளை கனவிற்சர ணார்கண்
எண்ணாயிர முடையூர்தியி ருந்தேசிறை மீட்பேன்
உண்ணாய்துய ரென்றோதிய வுடையாயொளிர் பூவல்
வண்ணாவயின் மன்னாவெனை மறவேலெனை மறவேல்.

- பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த  ‘பெரு வேண்டுகோள்’ பாடலை தினமும் பூஜையறையில் முருகன் திருவுருவப் படத்திற்குப் பூப்போட்டு, விளக்கேற்றி வைத்துவிட்டு மனமுருகச் சொல்ல, எண்ணிய காரியம் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகிறவர்களின் ஆசை நிறைவேறும்.

(ஒளி பரவும்)
படங்கள் : எம்.பாஸ்கரன்

எஸ்.ஆர்.செந்தில்குமார்