44 மாதம் ...நாராய்ப் போன தேகம்...



கடற்கொள்ளையர்களிடம் வதைபடும் தமிழக மாலுமி

டனிஸ்டனை நினைவிருக்கிறதா..?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் பிணைக்கைதியாக சிக்கிய தமிழக கப்பல் மாலுமி. தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலைச் சேர்ந்தவர். இவரை மீட்கக் கோரி உறவினர்கள், சமூக அமைப்புகள், மாலுமிகள் சங்கத்தினர் என பலரும் அப்போது போராடினார்கள்.

 பத்திரிகைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனால், 44 மாதங்கள் கடந்துவிட்டன. அவரோடு ஆறு இந்திய மாலுமிகள் இன்றுவரை கொள்ளையர்கள் பிடியில் ! சமீபத்தில் ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடிலிருந்து இந்திய நர்ஸ்கள் மீட்கப்பட்ட செய்தி மீடியாக்களில் மின்னியபோது, டனிஸ்டன் உட்பட ஆறு மாலுமிகள் வீட்டிலும் ஆதங்கக் கண்ணீர்!

‘‘அமைச்சர்கள், அதிகாரிகள்னு நிறைய பேருக்கு மனு மேல் மனு கொடுத்து ஓய்ந்து போயிட்டேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ல. எங்க வேதனையை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அதான் முதல்வருக்கு மனு கொடுத்திட்டு வந்திருக்கோம்’’ எனக் கண்ணீரால் பேசுகிறார் டனிஸ்டன் தந்தை லிட்டன் அந்தோணி.

‘‘எங்களுக்கு மீன்பிடித் தொழில். அது இல்லாத நேரம் கூலி வேலை செய்வோம். ரெண்டு பையன், மூணு பொண்ணுங்க. இதுல டனிஸ்டன் இளையவன். எங்க ஊர்ல நிறைய பேர் கப்பல்ல வேலை பார்க்கறாங்க. இப்படிப்பட்ட ‘சீ மேன்ஸ்’ நிறைஞ்ச ஊரு புன்னைக்காயல். டனிஸ்டனும் +2 முடிச்சதும் கப்பல் வேலைக்குப் போறேன்னு சொன்னான்.

அதுக்காக சென்னையில இரண்டு லட்சம் ரூபாய் செலவு பண்ணி, ஆறு மாசம் படிச்சான். அப்புறம் மும்பையில வேலை கிடைச்சுப் போனான். அவன் வருமானத்துலதான் எங்க குடும்பமே நடந்துச்சு. இப்ப...’’ எனும்போதே அவரது குரல் உடைகிறது. அவரைத் தொடர்கிறார் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஹெல்டின்.

‘‘ரெண்டு, மூணு கம்பெனிகள்ல வேலை பார்த்த பிறகு, 2010ல் ஓ.எம்.சி.ஐன்னு ஒரு கப்பல் கம்பெனியில அவனுக்கு வேலை கிடைச்சது. இந்தக் கம்பெனிக்கு சொந்தமான ‘எம்வி ஆஸ்பால்ட் வென்சர்’ சரக்குக் கப்பல்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்தான்.

அந்தக் கப்பல் ஆப்ரிக்கா கண்டத்துல இருக்க மொம்பாசா துறைமுகத்திலிருந்து டர்பன் துறைமுகத்திற்கு போகும்போது சோமாலியக் கொள்ளைக்காரங்க பிடிச்சிட்டாங்க. அதுல இருந்த 15 பேரை பிணைக் கைதிகளாக்கி பேரம் பேசுனாங்க. முதல்கட்ட பேரத்துல 8 பேரையும் கப்பலையும் விடுவிச்சுட்டாங்க. மீதியிருந்த ஏழு பேரை இன்னும் விடுவிக்கல. அதுல டனிஸ்டன்னும் இருக்கான்.

கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆகிருச்சு. அப்பப்ப போன்ல பேசுவான். ஏதோ ஒரு பெயர் தெரியாத இடத்துல... கடற்கரை பக்கத்துல... ஒரு டென்ட்ல அடைச்சு வச்சிருக்காங்கன்னு சொல்வான். சரியான சாப்பாடு கொடுக்க மாட்டாங்களாம். அரை வயிறு கூட நிரம்பாதாம். மழை நீரை பிடிச்சி வச்சுத்தான் குடிப்பாங்களாம். அது அழுக்கு படிஞ்சு இருக்குமாம். அவங்க கொடுக்கிற பத்து நிமிஷத்துல அவன் பேசுறதை மட்டும் தான் நாங்க கேட்போம். பக்கத்துலயே ஒருத்தன் துப்பாக்கியோடு நிற்கிறதா சொல்லுவான்.

 ஜனவரிக்குப் பிறகு, போன வாரம் தான் வீட்டுக்குப் பேசினான். ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்கான். சோமாலிய பைரேட்ஸ் வெப்சைட்ல போட்டு இருக்கிற படத்தை ‘நெட்’ல இருந்து எடுத்தோம். அந்தப் படத்துல, ‘சேவ் 7 இந்தியன் ஹோஸ்டேஜ்’னு ஒரு பதாகை தாங்கியபடி இவங்க நிற்கிறாங்க. எல்லோருமே தாடியோட மோசமான நிலையில இருக்கிறத பார்க்க முடியுது’’ என்கிறார் அவர் வருத்தமாக.

டனிஸ்டன் கடத்தப்பட்டதிலிருந்து அவரது தாய் சுகுணா மன அழுத்தத்தில் புலம்பியபடி இருக்கிறார். ‘‘என் பிள்ளையப் பார்க்கணும்... என் பிள்ளையப் பார்க்கணும்!’’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் உடைந்து அழுதபடி. ‘‘இப்ப 9 கோடி ரூபாய் கொடுத்தா ஏழு பேரையும் விட்டுடறதா சொல்றாங்களாம். அதான் நாங்க முதல்வரோட தனிப்பிரிவுக்கு கோரிக்கை வச்சிருக்கோம். மற்ற ஆறு பேரின் குடும்பங்களும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜைப் பார்க்க போறதா சொல்லியிருக்காங்க.

 அப்ப, அவங்களோடு நாங்களும் போகலாம்னு இருக்கோம். இப்படி கடத்தப்படறவங்களை மீட்கற தார்மீகப் பொறுப்பு கப்பல் கம்பெனிக்கு இருக்கு. அந்தக் கப்பல் கம்பெனி, ஆரம்பத்துல ஆறுதல் சொல்லி மாதச் சம்பளம் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. ‘நடவடிக்கை எடுத்திட்டு இருக்கோம்’னு மாசம் ஒரு லெட்டரும் அனுப்புவாங்க. திடீர்னு, ‘இனி எல்லாமே அரசுதான் செய்யணும்’னு சொல்லி கை விரிச்சுட்டாங்க. ஏழு மாசமா சம்பளம் உள்பட எல்லாத்தையுமே நிறுத்திட்டாங்க. எங்களுக்கு அரசுதான் உதவணும்’’ - வேதனையோடு முடிக்கிறார் லிட்டன் அந்தோணி.

 பேராச்சி கண்ணன்
படங்கள்: ராஜா சிதம்பரம்