ஆபத்தான ஷூட்டிங்... அப்செட்டான பாரதிராஜா!



தாஜ்மஹால்’ படத்தின் முதல் ஷெட்யூல். ‘குளிருது குளிருது...’ பாடல் காட்சியை குலு மணாலியில் எடுத்தப்போ, குளோசப் ஷாட் ரீயாக்ஷன் பற்றி சொல்லிக்கொடுக்கிறார் அப்பா. லொகேஷன் கூல் ஏரியான்னாலும் கேமரா முன்னாடி நின்ன முதல் பத்து நாட்கள் பயத்தில் வியர்த்தபடி இருந்தேன்’’ என அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் மனோஜ்.

‘‘அப்பாவோட வொர்க்கிங் ஸ்டைல் இப்ப எவ்வளவோ மாறிடுச்சு. ‘அன்னக்கொடி’ ஷூட்டிங்கில் அதைப் பார்த்தேன். ஆனா, ‘தாஜ்மஹால்’ அனுபவமே வேற. அந்தப் படத்தில் நடிச்சப்போ, ரெண்டு முறை செத்துப் பிழைச்சேன். ஹீரோயின் ஊரிலிருந்து தப்பிப்பதற்காக, ஒரு பெரிய குளத்தில் குதித்து நீந்திச் செல்வது போன்ற காட்சி. கர்நாடகாவின் பதாமி என்ற இடத்தில் இருந்த குளத்தில் அந்தக் காட்சியை எடுத்தோம்.

நான் தண்ணீருக்குள் குதித்து நீந்தியபோது, திடீரென இடது காலில் நரம்பு பிடித்து இழுத்துக்கொண்டது. வலது கால் செடிகளில் சிக்கிக்கொண்டது. நீந்த முடியாமல் மூழ்குகிறேன். ஆபத்தை உணர்ந்து உதவி இயக்குனர்கள் குளத்துக்குள் குதித்து என்னை நோக்கி வந்தார்கள்.

அதற்குள் நான் இரண்டு முறை தண்ணீருக்கு வெளியே வந்து வந்து மூழ்கிவிட்டேன். மூன்றாவது முறையாக மூழ்கிய சமயத்தில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஐந்து கோவிலான், என் தலைமுடியைப் பிடித்து இழுத்து காப்பாற்றினார். பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அப்பா அப்செட் ஆகி, ஷூட்டிங்கையே நிறுத்தி விட்டார்.

‘சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மஹால்...’ பாடலில் நான் குதிரையில் வருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். தேனி அருகே எடுத்த அந்தக் காட்சிக்காக கொடைக்கானலிருந்து குதிரை வரவழைக்கப்பட்டது. அந்த குதிரையோடு நன்றாகப் பழகியும் இருந்தேன். குதிரைக்கு தோலில் செய்த லகானுக்கு பதில் துணியால் செய்த லகானை வைத்திருந்தார்கள். முதல் டேக் முடிந்ததும் ‘இன்னும் பெட்டரா’ என இன்னொரு டேக் போகச் சொன்னார் அப்பா.

அந்த டேக்கில் கட்டுப்பாடு இழந்து ஓடியது குதிரை. லகானைப் பிடித்து இழுத்தேன். துணியால் செய்த லகான் அறுந்துவிட்டது. திடீரென ஆவேசமான குதிரை, முன்னங்கால்களைத் தூக்கி என்னைக் கீழே வீசியது. முதுகில் பயங்கர அடி. வலியைப் பொறுத்துக்கொண்டு எழ முயன்றபோது தான், கை உடைந்து சதையெல்லாம் பிய்ந்து தொங்குவதை உணர முடிந்தது. பிறகு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வலியுடனேயே கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து முடித்தேன்.’’

-அமலன்
படம் உதவி: ஞானம்