ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஸ்ரீதேவி, அடுத்து தனது கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். முதல் மனைவியின் டீன் ஏஜ் மகளுக்கும், இரண்டாவது மனைவிக்குமான நெகிழ்ச்சியான உறவைச் சொல்லும் கதை இது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா சர்மா, ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஆர்வமாக சமையல் கற்றுக் கொள்கிறார். ‘‘கோஹ்லி ஏதும் சொல்லியிருப்பாரோ?’’ என கிசுகிசுக்கிறார்கள் தோழிகள்.

நேற்று வரை நேசித்த பாடகர் ஜஸ்டின் பீபரை அதிரடியாகக் கத்தரித்து விட்டார் நடிகை செலீனா கோமஸ். சூப்பர் மாடல் மிராண்டா கெர், தனது கணவரான நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமை பிரிந்து விட்டார். இப்போது ப்ளூமுக்கும் செலீனாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு. இன்னொரு பக்கம் மிராண்டா மீது கிறக்கத்தில் இருக்கிறார் ஜஸ்டின் பீபர். இந்தக் குழப்பமான காதல் கதையில் ஜஸ்டின் பீபரும் ஆர்லாண்டோ ப்ளூமும் அதிரடியாக மோதிக் கொள்வதுதான் லேட்டஸ்ட் க்ளைமாக்ஸ்!

‘‘காதல் பிரிவு தரும் வலியை விட, வாழ்க்கைத்துணையை பிரியும் வலி பெரிது’’ என்கிறார் பாடகி ஹிலாரி டஃப். சமீபத்தில் கணவரைப் பிரிந்தார் அவர். ‘‘ஆனாலும் ஒருவர்மீது மற்றொருவர் மாறாத அன்பு வைத்திருக்கிறோம்’’ என்கிறார். அவரது அடுத்த மியூசிக் ஆல்பத்தில் இந்தப் பிரிவும் அன்பும்தான் பிரதான இடம் பிடித்திருக்கிறதாம்!

நடிகைகள் பலரும் விதம்விதமாக டயட் இருந்து ஜீரோ சைஸுக்கு மாறிக் கொண்டிருக்கும்போது, சற்றே பூசினாற் போல் இருக்கும் தனது உடற்கட்டு பற்றி ஹுமா குரேஷி அவநம்பிக்கை அடையவில்லை. ‘‘ஒரு நடிகையின் வெற்றியைத் தீர்மானிப்பது அவள் நடிக்கும் கேரக்டர்கள்தானே தவிர, அவளது உடல் சைஸ் இல்லை’’ என தீர்மானமாகச் சொல்கிறார். கவனிக்கப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்த ஹுமா இப்போது நடிப்பது, சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில்!