மன மருந்து



‘‘என் வீட்டுக்காரருக்குத் தாங்க முடியாத நெஞ்சு வலி! டாக்டர் யாராச்சும் இருக்கீங்களா? காப்பாத்துங்க சார்!’’ ரயிலின் ஏ.சி கோச்சில் அப்பர் பர்த்தில் படுத்திருந்த டாக்டர் விஸ்வநாத், இந்தக் குரல் கேட்டு எழுந்தார்.

‘‘நாக்குக்கு அடியில வைக்கிற மாத்திரை இருக்காம்மா?’’‘‘புறப்படுற அவசரத்துல, அதை மறந்துட்டோம் டாக்டர்!’’ ‘‘என்கிட்ட ஒரே ஒரு மாத்திரை இருக்கு... இதோ எடுக்கறேன்..!’’ - அவர் பெட்டியைக் கவிழ்த்துப் புரட்டிப் போட்டுத் தேடியும் அந்த மாத்திரை மட்டும் கையில் சிக்கவில்லை.

நெஞ்சு வலி வந்த நபர், மயங்கிச் சரிந்த நேரத்தில், ‘‘இதோ இருக்கு சார் அந்த மாத்திரை!’’ - எதிர் சீட்டு இளைஞன் கத்தினான். அவர் நாக்குக்கு அடியில் அதை அவனே வைத்தான்.
சற்று நேரத்தில் அவர் கண் விழித்தார். கலகலப்பாகவும் பேச ஆரம்பித்து விட்டார்! அவர் மனைவி நன்றியோடு டாக்டரைப் பார்த்துக் கும்பிட்டார்.

டாக்டர் எதேச்சையாகப் பார்த்தபோது, காணாமல் போன அந்த மாத்திரை, ஜன்னல் விளிம்பில் கிடந்தது. மாத்திரை என்று மிட்டாயைக் கொடுத்த இளைஞனைப் பார்த்துச் சிரித்தபடி, அவன் சட்டையில் மாட்டியிருந்த ஐ.டி கார்டைப் பார்த்தார்...‘எஸ்.நம்பிராஜன் எம்.எஸ்சி சைக்காலஜி’           

தேனப்பன்