கவிதைக்காரர்கள் வீதி




இருப்பு


இரவல் நகை
இருப்புக் கொள்ளவில்லை
விசேஷ வீட்டில்!
மன்னை முத்துக்குமார், சென்னை-17.

தவிப்பு

எந்தக் குழந்தை
அம்மாவென்றாலும்
சட்டென திரும்புகிறாள்,
திருவிழாவொன்றில்
குழந்தையைத் தொலைத்தவள்.
- கி.சார்லஸ்,
காரப்பிடாகை.

கண்ணீர்
 
விடியற்காலை
விடைபெறும் நிலவு
விடும் கண்ணீர்
பனித்துளியாகச் சொட்டுகிறது.
- ப.மதியழகன்,
மன்னார்குடி.

விதி

பகல் கனவுதான்
காண வேண்டியிருக்கிறது
எப்போதும்
இரவுக் காவலருக்கு!
கீர்த்தி, சென்னை-99.

நிராசை

நதியில்
கால் நனைக்க வந்தவனின்
பாதத்தை அச்செடுத்துவிட்டு
அனுப்பியது நதி,
அவன் ஏமாற்றம் தவிர்க்க...
மகிவனி, கோவை.

வாசம்

சிங்கப்பூர் நண்பன்
ஒவ்வொரு முறையும்
கொண்டுவந்து தரும்
சென்ட்டில் மணக்கிறது
அவன் வியர்வைத்துளியின்
வாசம்!
 பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.