பேசாத கலைஞர்கள்... பேசும் புகைப்படங்கள்...



‘காங்கேயம்...’ என்று ஆரம்பித்தாலே ‘காளை’ என்றுதான் முடிப்போம். ஆனால், அந்த அடையாளத்தைத் தாண்டிய காங்கேயம் நகரத்தைக் கண்முன் நிறுத்தியது அந்தப் புகைப்படக் கண்காட்சி. அங்கு வாழும் சாதாரண மனிதர்களின் அசாதாரண வாழ்நிலை குறித்த அந்தப் படங்கள், காளையினும் மூர்க்கமாய் நம் மனதை முட்டிச் சாய்த்தன.

இத்தனை நேர்த்தியான இந்தப் படங்கள் அனைத்தும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் பயிலும், காது கேளாத, வாய் பேச இயலாத மாணவ-மாணவியரால் எடுக்கப்பட்டது எனும் தகவல் நம்மையும் மௌனமாக்கியது...

‘‘போன வருஷம் எங்க திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில இருந்து ‘தியோ இன்ஸ்டிடியூட் ஆஃப் போட்டோகிராபி’னு புதுசா ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சோம் சார்... கோவாவுல இருக்கிற ‘கோவா புகைப்பட ஆராய்ச்சி மைய’த்தோட இணைஞ்சு மாணவர்களுக்கு போட்டோகிராபி சொல்லித் தர்றோம். அதுல ஐந்து மாணவ-மாணவிகள் படிக்கிறாங்க.

அவங்க வச்ச கண்காட்சிதான் இது’’ - காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த சித்ரா அறிமுகம் கொடுக்க, ‘காங்கேயம் - உறங்கும் ஒரு கிராமத்தின் மௌனக் கதை’ எனத் தலைப்பிட்டிருந்த அந்தக் கண்காட்சியின் நாயக நாயகிகள் நம்முன் வந்து நின்றார்கள்.

சீனிவாசன், சந்தோஷ், செல்வக்கனி, மோகனப்பிரியா, விஜயலட்சுமி... இவர்கள் ஐந்து பேரும் தங்கள் மொழியிலேயே புகைப்பட அனுபவங்களை நம்மிடம் பகிர, சித்ரா அதை விளக்கினார். ‘‘முதல்ல கேமராவைப் பிடிக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. இப்ப சந்தோஷமா இருக்கு. ஊர் மக்கள் எங்களை மறந்து, தாங்கள் புகைப்படம் பிடிக்கப்படுகிறோம் என்பதையும் மறந்து, அவங்கங்க வேலையைப் பார்க்குற வரைக்கும் காத்திருந்து இதையெல்லாம் எடுத்தோம்.

அவங்களோட வேலை, அதுல படுற கஷ்டம் எல்லாம் கேமரா மூலமா உணர முடிஞ்சது. போட்டோ எடுத்த பிறகு, அவங்க முகத்துல அவ்வளவு சந்தோஷத்தைப் பார்த்தோம். எங்களுக்கும் அதே சந்தோஷம் தொற்றிக்கிச்சு’’ என்றனர் அவர்கள் புன்னகையோடு. இவர்களில் செல்வக்கனிக்கு ‘லேண்ட்ஸ்கேப்’ போட்டோகிராபியிலும், விஜயலட்சுமிக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபியிலும் கொள்ளை ஆர்வம். தடகளத்தில்  தேசிய வீராங்கனையாகவும் ஜொலிக்கும் மோகனப்பிரியா, வைல்டுலைஃப் போட்டோகிராபர் ஆகத் துடிக்கிறார்.

‘‘அடிப்படையாவே இப்படி இருக்கிற பசங்க காட்சிப்படுத்துறதுல ரொம்ப ஸ்டிராங்கா இருப்பாங்க. அதனாலதான், இவங்களுக்கு இந்தக் கோர்ஸைத் தேர்ந்தெடுத்தோம்’’ என்றார் கோவா புகைப்பட ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் மாதவன். இவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர் குமரனிடமும் பேசினோம்...

‘‘இவங்க வாழ்க்கைக்கும் ஏற்ற படிப்பு இது. எதிர்காலத்துல இந்த அஞ்சு பேரை இணைச்சு ஒரு நிறுவனம் உருவாக்கலாம்னு இருக்கோம். அதன்வழியா, வெட்டிங் போட்டோகிராபி, அட்வர்டைசிங்னு போறது எங்க திட்டம். நீங்க வேணா பாருங்க... நிச்சயம் இவங்க கலக்குவாங்க’’ என்றார் அவர் உறுதியாக!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்