சிக்கனில் கலந்திருக்கும் மருந்து!



நம் நோய் எதிர்ப்பு சக்தியை முடமாக்கும் ஆபத்து

சளி, காய்ச்சலில் துவங்கி, ஊர் பேர் தெரியாத ஃபாரின் ஃப்ளூ வரை எந்த நோயும் நம்மை எப்போதும் தாக்கலாம். ‘அதுக்கெல்லாம் ஆன்டி பயாடிக்ஸ் இருக்கு...’ என்ற நிம்மதிதான் நம்மை ‘அப்பாடா’வென அமைதிகொள்ள வைக்கிறது. ஆனால், ‘இனி, உலகின் ஆன்டி பயாடிக் மருந்துகள் எதுவும் உங்கள் உடலில் வேலை செய்யாது’ என்ற நிலை வந்தால்,

எப்படி இருக்கும்? ‘‘நாம் எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்கிறது டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று. மருந்துகள் எதுவும் வேலை செய்யாத நோயுடலாக நம்மை மாற்றிக் கொண்டிருக்கும் அந்த வில்லன்... சிக்கன்!

‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ எனும் அந்த டெல்லி நிறுவனம், இந்தியாவில் விற்கப்படும் பலவித நுகர்வுப் பொருட்களில் ஆபத்துகளை ஆராய்ந்து, அடிக்கடி டேஞ்சர் சிக்னல் கொடுப்பதுண்டு. அதன்படி, அவர்கள் சமீபத்தில் கொடுத்திருக்கும் சிக்னல், ‘சிக்கன் ஜாக்கிரதை!’

இந்தியாவில் விற்கப்படும் பிராய்லர் சிக்கன்களில் ஆன்டி பயாடிக் மருந்துகள் அதிகம் கலந்திருப்பதாகச் சொல்கிறது இவர்களின் ஆராய்ச்சி முடிவு. ‘அப்படியானால் சிக்கனோடு சேர்ந்து மருந்தும் சாப்பிடுவதாகத்தானே அர்த்தம். இதனால் நோய் தீருமா?’ என்றால், ‘நிச்சயம் இல்லை. தொடர்ந்து சிறிய அளவில் தரப்படும் இப்படிப்பட்ட ஆன்டி பயாடிக் மருந்துகளால் நமது நோய் எதிர்ப்பு சக்திதான் காலியாகும்’ என்கிறார்கள் ஆராய்ச்சி செய்தவர்கள். அது எப்படி?

சென்னை லயோலா கல்லூரியின் விலங்கியல் துறை இணைப் பேராசிரியரான ஜான் வில்லியம்ஸிடம் இது பற்றி விளக்கம் கேட்டோம்.‘‘மருந்து என்பது நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தருவதுதான். ஆரோக்கியமான நார்மல் மனிதர்களுக்கு சதா சர்வகாலமும் மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தால் அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

அதில் முக்கியமானது ஆன்டி பயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்! அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் செலுத்தப்படும் மருந்துகளை நம் உடல் ஏற்றுக்கொண்டு வாழப் பழகி விடும். உதாரணத்துக்கு, டாக்ஸிசைக்ளின் மருந்தை உட்கொண்டால், அது உடலோடு வினைபுரிந்து உடலைத் தாக்கியுள்ள தொற்றுக் கிருமிகளைக் கொல்ல வேண்டும்.

ஆனால், தொற்றுக்கிருமிகளே இல்லாமல் தினமும் கொஞ்சம் ஊறுகாய் போல டாக்ஸிசைக்ளின் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்? ஆரம்பத்தில் நம் உடல் குழம்பிப் போகும். அழிப்பதற்கு கிருமிகளே இல்லாமல் டாக்ஸிசைக்ளினை வைத்துக் கொண்டு திணறும். போகப் போக ‘அட, நம்ம அக்மன்டின்பா’ என அந்த மருந்தை ஏற்றுக் கொள்ளும். கிருமிகளை அழிக்கும் வேலையை அதன்பின் அக்மன்டினும் செய்யாது.

நம் உடலும் செய்யாது. அதன் பின் அந்த மனிதருக்கு எந்த கிருமித் தொற்று ஏற்பட்டாலும் டாக்ஸிசைக்ளின் மருந்து கொடுத்தால் மருந்துக்குக் கூட வேலை செய்யாது. டாக்ஸிசைக்ளின் போலவே இன்னும் பல ஆன்டி பயாடிக் மருந்துகள் கோழிக்கறியில் இருப்பதாகத்தான் இந்த ஆய்வு சொல்கிறது. அதைத் தொடர்ந்து உண்பதன் மூலம் எந்த மருந்துமே நம் உடலில் வேலை செய்யாமல் போகும் ஆபத்து நேரும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்!’’ என்றார் அவர்.

சரி, கோழிக்கறியில் ஆன்டி பயாட்டிக் மருந்துகள் எங்கிருந்து வந்தன? இதற்கும் அவரிடமே பதில் கிடைத்தது.‘‘கோழிப் பண்ணைகளில் தொற்று நோயால் கோழிகள் இறந்துவிட்டால், பெருத்த நஷ்டம் அல்லவா? அதனால்தான் பண்ணை முதலாளிகள் தற்காப்புக்காக எல்லா கோழிகளுக்கும் ஆன்டி பயாட்டிக் மருந்துகளைக் கொடுத்து வளர்க்கிறார்கள்.

 இப்படி ஒரு உயிரினத்துக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் உடனடியாக அவற்றின் உடலில் இருந்து வெளியேறி விடாது. சில நாளைக்கு அதன் ரத்தத்தில் கலந்திருக்கும். நம் உடலிலும் கூட போன மாதம் காய்ச்சலுக்காகப் போட்ட பாராசிட்டமால் மாத்திரையின் தாக்கம் இன்று வரை இருக்கும். இப்படி உடலுக்குள் மருந்துப் பொருள் தங்கிவிடுவதை ஆன்ட்டி பயாட்டிக் ரெசிடியூ,  அதாவது ஆன்டிபயாடிக் மருந்துகளின் நச்சு என்பார்கள். இந்த ரெசிடியூதான் சிக்கனில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோழிகளுக்குள் செலுத்தப்படும் மருந்துகள் தங்கள் தாக்கத்தை இழக்கும் வரை காத்திருந்து உண்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இன்றைய கறிக்கோழிகள் பிறந்து ஐந்திலிருந்து ஆறு வாரத்துக்குள்ளேயே சாப்பிட உகந்த எடைக்கு வந்துவிடுகின்றன. போன வாரம் வரை மருந்து கொடுத்து வளர்க்கப்பட்ட கோழி, இன்று நம் தட்டில். இதுதான் பிரச்னைக்குக் காரணம்’’ என்ற ஜான் வில்லியம்ஸ், இதற்காக நாம் பீதிகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்தினார்.

‘‘இன்று மருந்துகள் இல்லாத உணவே இல்லை. காய்கறிகளில் இல்லாத பூச்சி மருந்துகளா? அவற்றோடு ஒப்பிட்டால், சிக்கன் போன்ற மாமிசத்தில் உள்ள மருந்துகள் வேக வைக்கும்போது, வலுவிழக்கக் கூடியவையே. அது மட்டுமின்றி, ஈரல், கிட்னி போன்ற கோழியின் உள்ளுறுப்புகளைத் தவிர்த்து சாப்பிட்டால், இந்த பாதிப்புகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் எல்லாம் கறிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு மருந்துகளில் கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்று ஒன்று உண்டு. விவசாயத்திலும் பூவில் மருந்து தெளிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் உண்டு.

இங்கு இவற்றை யார் கட்டுப்படுத்துகிறார்கள் யார் கடைபிடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆக, கிடைப்பதை முடிந்தவரை வெந்நீரில் கழுவி, நன்றாக வேக வைத்து சாப்பிட நாம் பழகிக் கொள்ள வேண்டியதுதான். இதன் மூலம் பாதிப்புகளை நிறுத்த முடியாது என்றாலும், நிச்சயமாகக் குறைக்கலாம்’’ என்றார் அவர் நிறைவாக!சிக்கன நான்வெஜ் சிக்கனுக்கு இப்படியொரு சிக்கலா?

கறிக்கோழிகள் பிறந்து ஐந்திலிருந்து ஆறு வாரத்துக்குள்ளேயே சாப்பிட உகந்த எடைக்கு வந்துவிடுகின்றன. போன வாரம் வரை மருந்து கொடுத்து வளர்க்கப்பட்ட கோழி, இன்று அந்த மருந்தோடு நம் தட்டில்!

 டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்