என் படத்தை எடுக்குற அறிவு எனக்குத்தான் இருக்கு!



மிஷ்கின்

மிஷ்கின்... தமிழ் சினிமா உலகில் தனிக்குரல். கொஞ்சம் புரியாத புதிர். தீராத பயணங்களில் மிதக்கும் நாடோடி. இப்போது ‘பிசாசு’ இயக்கிக்கொண்டிருக்கிறார். குவிந்து கிடக்கிற புத்தகங்களின் ஊடே இன்னொரு பெரிய புத்தகம் மாதிரி உட்கார்ந்திருக்கிறார். ‘ஒண்ணும் ஒதுக்கி வைக்க முடியாது... உட்காருங்க’ எனக் குரல் அதிரப் பேசியவருடன் நீடித்தது உரையாடல்...

‘‘ஒருமித்த பாராட்டு குவித்த படம், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. ஆனாலும், தியேட்டருக்கு சொன்ன நேரத்தில் கூட வரலை. வருத்தங்கள் இருக்கா?’’

‘‘இந்தச் சோகம் கொடுத்த மனிதர்களுக்கு நன்றி சொல்லணும். திருவிழாவில் யாரோ ஒரு தெரியாத முகத்தைப் பார்த்தால் கூட, அவங்க சிரிக்கிறாங்க. நாமளும் சிரிக்கிறோம். யாரோ விபத்துக்குள்ளானால் நாம் ஓடிப்போய் உதவுறோம். சக மனிதனின் சந்தோஷத்தையும், சோகத்தையும் பகிர்கிற நேரம் இது. ஒரு நல்ல கலைப் படைப்பு அனாதைக் குழந்தை மாதிரி. அதை எல்லாரும் எடுத்துக்கொண்டு போய் சேர்க்கணும். ‘ஓநாயை’ சொந்தக் காசில் எடுத்தேன். சினிமாக்காரங்களால் எனக்கு கை கொடுக்க முடியலை.

குழந்தை பிறந்து, ‘அம்மா’ன்னு சொல்றதுக்கு முன்னாடி, கழுத்தை முறித்துக் கொல்லப் பார்த்தாங்க. படம் தோக்குறது தப்பில்லை. ஆனால், என் படத்தை தியேட்டருக்கு அனுப்பவே முடியலை. என் வாழ்க்கையில் பெரிய சந்தோஷம் எப்படி இருக்கணும்னா நான் எந்த விருதும் வாங்காமல் சாகணும். ஒரு ரூபாய் கையில் இல்லாமல் சாகணும்.

நான் ரொம்ப மதிக்கிறவங்க சினிமாவில் இருக்காங்க. ‘பூ’ சசி, பாலா, பாலாஜி சக்திவேல், ராம், சசிகுமார்... இவங்க தகுதிக்கு அவங்க எப்பவும் விருது வாங்கணும்னு ஆசைப்படுறேன். புத்தர் மாதிரி சொல்லலை. நிஜமா எனக்கு ஆசைகள் இல்லை. நான் உள்நோக்கியே பயணப்படுறேன். வெற்றி, தோல்வி மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள். இரண்டுக்கும் இயற்கையில் இடமே இல்லை!’’‘‘பாலாவின் தயாரிப்பில் எப்படி..?’’

‘‘ ‘ஓநாய்’ பார்த்திட்டு பாலா ஆரத் தழுவிக்கிட்டார். ‘என்ன பண்றே?’ன்னு கேட்டார். ‘ஒண்ணும் பண்ணலை’ன்னேன். ‘அடுத்த படம் என்ன?’ன்னார். ‘கிடைக்கலை’னு சொன்னேன். ‘நான் பண்றேன்’னார். ‘செய்ங்க’ன்னேன். ‘என்னடா பட்ஜெட்?’னு கேட்டார். அதுவும், ‘தெரியாது’ன்னேன். ‘என்னடா, சம்பளம் வேணும்’னு கேட்டார். ‘நீங்க படம் பண்ணுன்னு சொல்லிட்டீங்க... பண்றேன்’னு சொன்னேன்.

 இதுதான் நடந்தது. முன்னாடி பாலாவை ஒரு வருஷத்திற்கு ஒரு தடவைதான் சந்திப்பேன். இப்ப எப்பவும் சந்திக்கிற நண்பர். அவரோட சுகம், துக்கம் இரண்டிலும் இருக்கிறேன். நான் அவரைக் கொஞ்சுவதும், கெஞ்சுவதும், அதட்டுவதும் உண்டு. அவர் எனக்கு அருமையான அப்பா, அண்ணன் மாதிரியிருக்கார். ஆத்மார்த்தமான நட்பின் பிடியில் சந்தோஷமா இருக்கேன்!’’‘‘ ‘பிசாசு’ எப்படியிருக்கும்?’’

‘‘ஒரு லைன் சொன்னேன். ‘ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னார். எழுதிக் கொடுத்தேன். அதுவும் அவருக்குப் பிடிச்சது. ஒரு பையனை கூட்டியாந்து ‘இந்தப் பையனை நடிக்க வைக்கிறியா’ன்னு கேட்டார். ‘நீங்க யாரைக் கொடுத்தாலும் நடிக்க வைக்கிறேன்’னு சொன்னேன். எனக்கும் அமானுஷ்யத்திற்குள்ளே ஒரு படம் பண்ண ஆசை. எல்லா பேய்க் கதையிலும் ஒரு தொடர்ச்சி இருக்கு. ஒரு பெண் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பாள்.

அவள் பேயாகி சுற்றித் திரிந்து பழி வாங்குவாள். ஆனால், பழி வாங்குவது மனிதர்களுக்கு மட்டுமானது. பேய்கள் மீதும் அதைத் திணிச்சிட்டோம். அது எனக்குப் பெரிய கேள்வியா வந்தது. நான் பேயைப் பார்த்ததில்லை. அவை பற்றி சொல்லப்படுபவை நம்புகிற மாதிரி இல்லை. எத்தனையோ மனிதர்கள் ஜெர்மனி ஆஸ்விட்ச் கேம்பில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் பேயாக வந்திருந்தால், இப்போது ஜெர்மனியே இல்லாது போயிருக்கும்.

பேய்கள் வில்லனாகவும், பூதாகரமாகவும் காட்டப்படுது. நான் இதுக்குள்ளே யோசிச்சேன். நிஜமாகவே ஒரு பேயை சந்திச்சா என்ன ஆகும்னு யோசிச்சேன். அதிலிருந்து தோன்றிய கதை ‘பிசாசு’. இதில் பயமும் இருக்கு.

என்னுடைய கற்பனையில் கொஞ்சம் தேன் கலந்து, பூக்கள் சேர்த்து, கொஞ்சம் ரத்தமும் சேர்த்து ஒரு ஓவியம் வரைஞ்சிருக்கேன். அறிவிலிருந்து எழுதாமல் இதயத்திலிருந்து எழுதியிருக்கேன். ஏன்னா, எழுதும்போது நாலைந்து இடங்களில் நான் அழுதேன்!’’‘‘புதுமுகங்கள் போலிருக்கே?’’

‘‘நாகான்னு ஒரு பையன். பிரயாகான்னு ஒரு பொண்ணு. ராதாரவி ஒரு பெரிய கேரக்டரில் வர்றார். நான் ‘ஏ’ன்னு சொன்னால், அவர் ‘இஸட்’ வரைக்கும் புரிஞ்சுக்கிறார். அனுபவத்தின் சாந்தமும், பக்குவமும் தெரியுது!’’‘‘உங்களை மாதிரியானவர்களுக்குக் கூட வாய்ப்புகள் கிடைக்கிறது அபூர்வமா இருக்கே?’’‘‘திமிர் பிடித்தவர், சொல் பேச்சு கேட்க மாட்டார், நினைக்கிறதை மட்டுமே எடுப்பார்னு பரவலா ஒரு எண்ணம் இருக்கு. அது உண்மைதான். இது ஏழாவது படம்.

எல்லாத்தையும் போராட்டம் மாதிரிதான் பண்றேன். நான் டாக்டர், கத்தியை எடுத்து ஆபரேஷன் பண்ணும்போது பக்கத்தில் இருந்துக்கிட்டு, ‘அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே’ன்னு சொல்ல முடியாது. படம் எடுக்கிறது ஒரு குழந்தையைப் பெத்துக்கிறதுதான். நான் ஒரு குழந்தையை காப்பாத்த முயற்சி எடுக்கும்போது குறுக்கிடக் கூடாது. ‘அப்ப, உனக்கு மட்டும்தான் அறிவிருக்கா’ன்னு கேட்டால், ‘என் படம் செய்ய எனக்கு மட்டும்தான் அறிவிருக்கு’ன்னு சொல்வேன்.

என்னுடைய படத்திற்கு இன்னொருத்தர் அறிவு தேவையில்லை. என் படத்தில் காமெடி இல்லைங்கிறாங்க. நான் வாழ்க்கையில் காமெடியை பார்த்ததில்லை. ஹாஸ்யம் தெரியும். காமெடி, வாழ்க்கையில் இல்லவே இல்லை. யாராவது ரோட்டில் போகிறவரை ‘டேய் வழுக்க மண்டை’ன்னு சொன்னால் சினிமாவில் காமெடி. நிஜ வாழ்க்கையில் வந்து அடிப்பான்!’’‘‘உங்களுக்கு தமிழில் யாரையெல்லாம் பிடிக்கும்?’’

‘‘பாலாவின் கூர்மை நல்லாயிருக்கும். பாலாஜி சக்திவேல், வித்தியாசப் படைப்பாளி. ராம் தாயன்பு, குழந்தைகளின் மேலிருக்கிற பிரியம்னு நல்லா செய்கிறார். சசிகுமார் முதல் படம் அருமை. அவன் பெரிய டைரக்டர். இன்னும் பெரிசா அவன் வரணும். நடிக்கலாம். ஆனால், டைரக்ட் பண்ணணும். ‘ஜிகிர்தண்டா’ பண்ணின சுப்புராஜ் இங்கே வருவார்.

ஸ்மார்ட்டா பேசுவார். ஒரு நல்ல படம்னா பார்வையாளன் கண்களில் கொஞ்சம் விளக்கை ஏத்தணும். சினிமா பொய் கிடையாது. இருட்டில் காண்பிச்சாலும் அது உண்மை. ஒரு நல்ல படம்னா ஒரு நல்ல பார்வையாளனும் இருக்கான்னு அர்த்தம். சில கெட்ட படங்களும் ஓடும். அதற்கு பல காரணங்களும் இருக்கு. ஒரு பொண்ணு அவுத்துப் போட்டு ஆடியிருப்பா. ஒரு நாராசமான ஜோக் இருந்திருக்கும். தேவையில்லாத 10 சண்டை இருக்கும்.

அர்த்தம் தருகிற படத்தை தயவுசெய்து பாருங்க. அந்தக் கலைஞன் உங்களுக்கு சொந்தமானவன். அவன் உங்க வீட்டைக் கூட்டுறான். தெரு விளக்கா இருக்கான். நீங்க கெட்ட படம், காமெடிப் படம், துக்கடா படம்... எது வேணா பாருங்க. ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து அவனுக்கு மாலை போட்டு பால் ஊத்துங்க.

 அதையெல்லாம் செய்துட்டு ஒரு பாலாஜி சக்திவேலை, பாலாவை, ராமை, என்னை, சசிகுமாரை உத்துப் பாருங்க. இவங்க உங்க இதயத்தை துணி எடுத்து துடைச்சிருக்காங்க. நீங்க எங்களை கவனிக்காமல் விட்டால், நாங்க எங்கே போவோம்?’’பழி வாங்குவது மனிதர்களுக்கு மட்டுமானது. பேய்கள் மீதும் அதைத் திணிச்சிட்டோம்.

- நா.கதிர்வேலன்