பெத்த மனம்



‘‘ஏன்யா சுடலை! இன்னைக்காவது என் மகன்கிட்ட இருந்து மணியார்டர் பணம் வந்திருக்கா?’’- போஸ்ட்மேன் சுடலையிடம் ஆர்வமாகக் கேட்டாள் வேலம்மாள்.வேலம்மாளின் மகன் முருகேசன், சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறான். மாதம் பிறந்தால், பத்தாம் தேதிக்குள் தவறாமல் அவன் மணியார்டர் அனுப்பி விடுவான்.

மூன்று மாதமாக அவன் பணம் அனுப்பவில்லை. தினமும் வேலம்மாள் போஸ்ட்மேன் சுடலையிடம் இந்தக் கேள்வியை கேட்கத் தவறுவதும் இல்லை.சுடலை, வேலம்மாளை இரக்கத்துடன் பார்த்தான்.‘‘அம்மா, உன் கவலை எனக்குப் புரியுது. ஆனா உன் மகனுக்குப் புரியலையே. மூணு மாசமா பணமில்லாம நீயும் எப்படி சமாளிப்பே. ஆனா, உன் பிள்ளை மனசு கல்லா இருக்கே!’’ என்றான் சுடலை.

‘‘அட, எனக்கு என்னைப் பத்தி கவலை இல்லைப்பா. மூணு மாசமா பணம் அனுப்பலைன்னா அவனுக்கு அங்கே என்ன பணக் கஷ்டமோ! அதுதான் என் கவலை. நான் வீட்ல சேத்து வச்சிருந்த பணம் மூவாயிரத்தைக் கொண்டு வந்திருக்கேன். இந்தப் பணத்தை என் மகனுக்கு அனுப்பணும்!’’ என்றாள் அவள் பாசத்தோடு.சுயநலம் அற்ற தாய்மையின் அன்பு கண்டு வெட்கித் தலை குனிந்தான் சுடலை.