பொலிட்டிகல் பீட்



மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு பெரும் தலைவலியில் சிக்கித் தவிக்கிறார். பதவியிழந்த பலர் வீடுகளைக் காலி செய்யாததால், புதிதாகப் பதவியேற்ற எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்க முடியவில்லை.

சில அமைச்சர்களே கூட வீடு இல்லாமல் விருந்தினர் இல்லங்களில் தங்கியபடி, தினம் தினம் நாயுடுவை நச்சரித்தபடி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குரங்குகள்... நாடாளுமன்ற வளாகத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகள், அரசியல் பிரமுகர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கின்றன. இதுபற்றி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை கிளப்பியதால், இப்போது குரங்குகளை விரட்ட 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லங்கூர் குரங்கு போல முகமூடி அணிந்து, நிஜக் குரங்குகளை விரட்டுவார்களாம்!

வெங்கைய நாயுடு

மைசூரின் மகாராஜாவாக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் கடந்த டிசம்பரில் மறைந்தார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால், இந்த ஆண்டு தசரா விழாவில், மரியாதையை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘யாரையாவது தத்தெடுக்கலாம்’ என பலரும் யோசனை சொல்கிறார்கள். ஆனால் மகாராஜாவின் மைசூர் மற்றும் பெங்களூரு அரண்மனைகளை அரசுடமையாக்க கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. ‘‘ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, அரண்மனை இல்லாத மகாராஜாவாக விட்டுச் செல்ல விருப்பமில்லை’’ என்று கண்ணீரோடு சொல்கிறார் மகாராணி.

ஆனந்தி பென் படேல்

‘‘நாட்டுக்குக் கோயில்களைவிட கழிப்பறைகளே முக்கியத் தேவை’’ என்று சொன்ன நரேந்திர மோடி, தான் பிரதமரானதும் ஆனந்தி பென் படேலை குஜராத்தின் முதல்வர் ஆக்கினார். அவரும் மோடியின் பாதையில்தான் பயணிக்கிறார். குஜராத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறார் ஆனந்தி. இதன்படி இனி குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில், வீட்டில் கழிப்பறை கட்டியிருக்கும் வேட்பாளர்கள் மட்டும்தான் போட்டியிட முடியும்.

பாரதிய ஜனதா சீனியர் தலைவர்கள் பலருக்கும் கவர்னர் பதவி வழங்கப்பட்டு விட, விரக்தியில் இருக்கிறார் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த வி.கே.மல்ஹோத்ரா. ‘‘என்னைவிட வயதிலும் கட்சி சீனியாரிட்டியிலும் குறைந்த பலரும் கவர்னர் ஆகும்போது எனக்கு என்ன குறைச்சல்’’ என்ற அவரது புலம்பல், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காதில் விழுந்துவிட்டது. ‘‘மல்ஹோத்ராவை பஞ்சாப் கவர்னர் ஆக்குங்கள்’’ என அவரே மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

வி.கே.மல்ஹோத்ரா

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு போட்டது காங்கிரஸ் கட்சி. ஆனாலும் அவருக்கு அடிப்படை வசதிகளைக்கூட கட்சி சார்பில் செய்து தரவில்லை என கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் புலம்புகிறார்கள்.

நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுப் பேச வசதியாக, தினசரி செய்தித்தாள்களில் வந்த முக்கிய செய்திகளை அவருக்குத் தொகுத்துத் தர வேண்டும்; தேவைப்படும் புள்ளிவிவரங்களை எடுத்துத் தர வேண்டும். இதற்கான ஆராய்ச்சிக்குழுவை நியமிக்குமாறு கட்சித் தலைமையிடம் கேட்டிருந்தார் அவர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை!

மல்லிகார்ஜுன கார்கே