வீடு



‘‘மாலினி... தரகர் ரெண்டு வீடு காட்டினார். ஒண்ணு நாலாயிரம் ரூபாய் வாடகை... இன்னொண்ணு நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய். கரன்ட் பில், தண்ணி பில் எல்லாம் தனி. அந்த நாலாயிரம் ரூபாய் வீட்டையே பேசி முடிச்சுட லாம்னு இருக்கேன். நம்ம பட்ஜெட்டுக்கு அதுதான் சரியா வரும். எதுக்கும் நீ ஒரு முறை வந்து ரெண்டு வீட்டையும் பார்த்துடு. அப்புறம் பேசி முடிச்சுடலாம்’’ என்றான் சேகர்.

மாலினி இரண்டு வீட்டையும் பார்த்தாள். கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘‘ஏங்க... இந்த நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகையையே பேசி முடிச்சுடுங்க’’ என்றாள்.
‘‘பட்ஜெட்ல ஐந்நூறு கூடுதே... பரவாயில்லையா?’’

‘‘இதை நேரடியா அப்படி பார்க்க முடியாதுங்க! வாடகை குறைவுன்னாலும் அந்த வீட்டுல, ஹால்ல மட்டும்தான் ஜன்னல் இருக்கு. மத்த ரூமெல்லாம் உள்ள அடைஞ்ச மாதிரி இருக்கு. பகல்ல கூட லைட்டும் ஃபேனும் இல்லாம இருக்க முடியாது.

இதனால வழக்கத்தை விட கரன்ட் பில் ரெண்டு மடங்கா வரும். வாடகையையும்  கரன்ட் பில்லையும் கணக்குப் போட்டா ரெண்டு வீட்டுக்கும் சரி சமமாத்தான் வரும். இந்த வீட்டுல இயற்கையான காத்து கிடைக்கிறதால ஆஸ்பத்திரி செலவு குறையும்!’’ என்றாள். குடும்பத்துக்காக மனைவி போட்ட பட்ஜெட்... ஆமோதித்தான் சேகர்.

நா.கோகிலன்