டாஸ்மாக் கடைகளை மூடுவது சாத்தியமா?



மதுக்கடைகளுக்கு எதிரான குரல்கள் வீதிகள்தோறும் வீரியம் பெற்று வருகின்றன. பல்வேறு அமைப்பினர் தினந்தோறும் சாலையை மறித்தும், ஆர்ப்பாட்டம் செய்தும் கைதாகிறார்கள். தனி மனிதர்களின் சத்தியாக்கிரகங்களும் தொடர்கின்றன.

காந்தியவாதி சசிபெருமாள் டெல்லிக்குப் போய் ஒரு மாதத்திற்கு மேல் உண்ணாவிரதம் இருந்து திரும்பியிருக்கிறார். மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி முதல்வர் வீட்டில் மண் வாரித் தூற்றும் போராட்டம் செய்து கைதாகியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் சகல அரசியல் கட்சிகளும் மது ஒழிப்பு பற்றி பேசுகின்றன. போராடுகின்றன. ‘‘அண்டை மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழகமும் மதுவிலக்கு கொண்டு வரும்’’ என்று சட்டமன்றத்தில் சொன்னார் ‘மதுவிலக்கு’ மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இப்போது கேரளா பூரண மதுவிலக்குக்கான முகாந்திரங்களைத் தொடங்கி விட்டது. இங்கே டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

கேரளாவில் கடந்த 25 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான ‘பீவரேஜஸ் கார்ப்பரேஷன்’ (Beverages Corporation)   நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருகிறது. மாநிலமெங்கும் 378 மதுக்கடைகள் உள்ளன.

தனியார்கள் 700க்கும் மேற்பட்ட பார்களை நடத்துகிறார்கள். இச்சூழலில் ‘பெரும்பாலான பார்கள் சுகாதாரமாக இல்லை, விதிமுறைகளுக்கு எதிராக இயங்குகின்றன’ என சமூக ஆர்வலர்கள்  கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 418 பார்களை உடனடியாக மூட உத்தரவிட்டது.

இதையடுத்து மாநிலமெங்கும் மதுவிலக்கு கோரிக்கை வலுவடைந்தது. கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் காந்தியவாதியுமான வி.எம்.சுதீரன் உள்ளிட் டோர் அரசுக்கு நெருக்கடி கொடுக்க, ‘‘2024க்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் உம்மன்சாண்டி.

முதற்கட்டமாக, வரும் செப்டம்பர் 12ம் தேதிக்குள் பார்கள் அனைத்தும் மூடப்படும். வருடத்துக்கு 10% கடைகள் வீதம் மூடப்பட்டு, 10 ஆண்டுக்குள் முழுமையாக மது விலக்கப்படும். அதுவரை ஞாயிற்றுக்கிழமை தோறும் கடைகள் அடைக்கப்படும்.

இங்கு தமிழகத்தையே தள்ளாடச் செய்து கொண்டிருக்கிறது அரசாங்க மது. கடந்த 10 ஆண்டுகளில் 600% கூடுதல் வருமானம். எல்லாம் அன்றாடங்காய்ச்சிகளின் ரத்தத்திலும் வியர்வையிலும் விளைந்தது. விற்பனை இலக்கு அதிகமாகிக் கொண்டே போகிறது. புதிது புதிதாக குடிமகன்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். மதுவிலக்குத் துறைதான் இங்கே மது விற்பனையை அதிகப்படுத்தும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. அத்துறையின் அமைச்சர் ‘‘மதுவிலக்கு கொண்டு வருவதற்கான சாத்தியங்களே இல்லை’’ என்கிறார்.

கேரளாவுக்கு சாத்தியமானது ஏன் தமிழகத்துக்கு சாத்தியமாகாது? மதுவிலக்கு கோரி தொடர்ச்சியாகப் போராடி வரும் ‘2016 மதுவிலக்கு ஆண்டு இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகத்திடம் கேட்டோம்.

‘‘மது விற்பனை சமூக விரோதிகளின் கைகளுக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் மதுவிற்பனை செய்கிறோம் என்கிறது அரசு. முதலில் இந்த மனோபாவம் மாறவேண்டும். ‘மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும்’ என்ற விதண்டாவாதத்தையும் கைவிட வேண்டும்.

மதுக்கடைகளை மூடுவதால் 100% மதுவை ஒழிக்க முடியும் என்று நாங்கள் சொல்லவில்லை. கஞ்சாவுக்கு தடை இருக்கிறது. ஆனால் கஞ்சா புழங்கத்தான் செய்கிறது. ஆனால் நேரடியாக கடைகளில் வைத்து விற்கப்படுவதில்லை. அதற்கு அடிமையானவர்கள் ஒளிந்து ஒளிந்து வாங்குகிறார்கள்.

இப்போதுள்ள குடிகாரர்களில் 50% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 50% புதிதாக பழகிய இளவயதுக் குடிகாரர்கள். கடைகளை மூடுவதன் மூலம் இந்த இளவயதுக் குடிகாரர்களை மீட்கமுடியும். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மது குடிப்போரின் சராசரி வயது 13. 13 வயதில் குடி பழகும் ஒருவன், 21 வயதில் தீவிர குடிகாரனாகி விடுகிறான். எதிர்காலமே பாழாகி விடுகிறது.
 
அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ், கிளிண்டன் ஆகியோரின் பிள்ளைகள் குறிப்பிட்ட வயது வரும்முன்பே பீர் குடித்த குற்றத்துக்காக சாலையைக் கூட்டச்செய்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழகத்தில் 5 வயது சிறுவன் போய் மது கேட்டாலும் கொடுத்து விடுகிறார்கள்.  

குடிகாரர்களின் நலன் கருதியே மது விற்பனை செய்வதாக அரசு சொல்கிறது. ஆனால் தயாரிப்புச் செலவைவிட ஏழெட்டு மடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். இதில் எங்கே நலன் இருக்கிறது? மது விற்பனையில் இவ்வளவு லாபம் பார்க்கும் அரசு, மதுவிலக்குப் பிரசாரத்துக்குச் செய்யும் செலவு வெறும் 10 கோடி ரூபாய். அதுவும் ‘கள்ளச்சாராயம் குடிக்காதீர்கள்’ என்றுதான் பிரசாரம் செய்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனத்தைப் போல லாபத்தைப் பார்க்காமல் அரசு படிப்படியாக மது விலக்குக்கான நடைமுறைகளைத் தொடங்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய காந்தியவாதி சசிபெருமாள், ‘‘மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானமும், அதனால் ஏற்படும் தீமைகளுக்குச் செய்யும் செலவுகளும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான். நாட்டில் குற்றங்கள் பெருக மதுவே காரணம். பாதுகாப்பு தொடர்பான பணிகளே காவல்துறைக்குச் சுமையாக இருப்பதால் பெரும்பாலான புலனாய்வுப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. சட்டம்  ஒழுங்கு கெட்டுப்போகிறது. மருத்துவத்துக்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டியிருக்கிறது.

99% மக்கள் மதுவிலக்கை எதிர்பார்க்கிறார்கள். மதுவை விலக்குவதால் ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்ய வரிகளை அதிகரித்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மக்களின் மனதறிந்து முதல்வர் மதுவிலக்கை அமல்படுத்த முன் வரவேண்டும்’’ என்கிறார். அமைச்சர் எதிர்பார்த்தபடி அண்டை மாநிலம் மதுவிலக்குக்கான முன்னடியை எடுத்து வைத்திருக்கிறது. தமிழக அரசு பின்னடியை எடுத்து வைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!

என்ன செய்ய வேண்டும்?

மதுவிலக்கை படிப்படியாகவே கொண்டு வர முடியும். அதற்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

* இரு கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட வேண்டும்.

* புதிதாக மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது. பிரச்னைக்குரிய கடைகளை இடம் மாற்றக்கூடாது. மூடவேண்டும்.

* விற்பனை அதிகமாக நடக்கும் சனி, ஞாயிறுகள், அரசு விடுமுறை நாட்கள், மாதத்தின் தொடக்க நாட்களில் கடைகளை மூடவேண்டும்.

* 6 மணி நேரம் மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்க வேண்டும்.

* 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை கடுமையாக்க வேண்டும். மீறி விற்போர், மது அருந்துவோருக்கு தண்டனை விதிக்கவேண்டும்.

* கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகளில் இருந்து 1 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அத்தனை கடைகளையும் உடனடியாக மூடவேண்டும்.

* ஒவ்வொரு மதுக்கடைக்கு அருகிலும் மது அடிமைகள் மறுவாழ்வு மையம்

அல்லது மருத்துவமனைகளை, கவுன்சிலிங் மையங்களைத் தொடங்க வேண்டும்.

* ஐந்து அல்லது பத்தாண்டுகளை இலக்காக வைத்து முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* மதுவிலக்கின் மூலம் ஏற்படும் நிதியிழப்பை சமாளிக்க, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அரசின் வருவாயைப் பெருக்க வழி காண வேண்டும்.

* தமிழக மக்கள் படிக்க நூலகங்கள் 4028. குடிக்க டாஸ்மாக் மதுக்கடைகள் 6,800.

* 20032004ல் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 3639 கோடி. 20132014ல் கிடைத்த வரி வருவாய் 21,641 கோடி.

* தமிழகத்தில் உள்ள பார்களின் எண்ணிக்கை 4271. தமிழகத்தில் கழிவறை வசதி இல்லாமல் தவிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 5720.

* இந்திய அளவில் அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலம் தமிழகம். சராசரியாக ஆண்டுக்கு 15,000 பேர் உயிரிழக்கிறார்கள். 50% விபத்துகளுக்குக் காரணம் மது.

 வெ.நீலகண்டன்