மரணம் தவிர மாற்று இல்லை!



வெயிட்டேஜ் முறையை எதிர்த்து கதறும் ஆசிரியர்கள்

வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு..., ‘ஆசிரியர் நியமனத்துக்கு நீதிமன்றம் தடை’ என்றெல்லாம் செய்திகள் பரபரக்கின்றன. கண்ணீரும் கதறலுமாக வீதிக்கு இறங்கிப் போராடுகிறார்கள் ஆசிரியர்கள். போராட்டத்தின்போதே நான்கு பேர் விஷம் குடித்தது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றல்ல... இரண்டல்ல... 15 நாட்கள். சரியாகச் சாப்பிடாமலும், தூங்காமலும் போராடி வருபவர்கள், நிஜமாகவே தங்கள் உயிரை துச்சமாய் நினைத்து வெகுநாளாகிறது.

‘‘சென்னையில எங்களுக்கு யாரையும் தெரியாது. ராத்திரி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல படுத்துக் கிடந்துட்டு விடிஞ்சதும் இங்க வந்து போராடுறோம். பிள்ளை, குட்டியெல்லாம் விட்டுட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ப்பக்கம் இருந்து வந்திருக்கோம்’’  சொல்லும்போதே கண்கலங்குகிறது இந்த மென்மையான ‘போராட்ட’க்காரர்களுக்கு.

இவர்கள் அத்தனை பேரும் உச்சரிக்கும் வில்லன் வார்த்தை, வெயிட்டேஜ்! ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டும் சேர்த்து மொத்தம் 150 மார்க். ஆனால், இதை மட்டும் வைத்து பணியிடங்களை நிரப்புவதில்லை. இதை 60க்கு மாற்றிவிட்டு, மீதம் உள்ள 40 மார்க்கை பள்ளி, கல்லூரி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடுகிறார்கள். இதுதான் வெயிட்டேஜ் மார்க். தகுதித் தேர்வில் பாஸாகி, இந்த வெயிட்டேஜில் பின்தங்கியவர்கள்தான் இப்போது இங்கே போராட்டக்களத்தில்!

‘‘நாங்க படிக்கும்போது இன்டர்னல் மார்க் கிடையாது. இப்ப மாதிரி அப்ப மார்க்கை வாரி வழங்கவும் மாட்டாங்க. அதுவும் அரசு கல்வி நிறுவனங்கள்ல படிச்சவங்க, கரஸ்பாண்டன்ஸ்ல, ‘நான்செமஸ்டர்’ முறையில படிச்சவங்களுக்கெல்லாம் மார்க் இருக்காது. ஸ்கூல், காலேஜ் மார்க் சேர்த்து வெயிட்டேஜ் பார்த்து வேலை கொடுத்தா, எந்தக் காலத்துலயும் எங்களுக்கு வேலையே கிடைக்காது சார்’’  வருத்தம் பொங்கப் பேசுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலிங்கம். அவரைத் தொடர்கிறார், கடலூர் பகுதியைச் சேர்ந்த கபிலன்.

‘‘எனக்கு அப்பா கிடையாது. அம்மா கூலி வேலைக்குப் போய் படிக்க வச்சாங்க. எம்.ஏ., பி.எட் படிச்சேன். தகுதித் தேர்வுல 90 மார்க் எடுத்தா பாஸ். நான் 97 மார்க் வச்சிருக்கேன். ஆனா, 88 மார்க் வாங்கினவங்களுக்கு வெயிட்டேஜ் மார்க்கால வேலை கிடைச்சிருக்கு. எல்லாம் இப்ப படிச்சுட்டு வந்த புதுப் பசங்க. இனி, என்ன பண்ணினாலும் எனக்கு வேலை கிடைக்காது. அதான், சாகலாம்னு முடிவெடுத்தேன். காப்பாத்திட்டாங்க’’ என கண் கலங்கியவர், குளறுபடிகளையும் அடுக்குகிறார்.

‘‘கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுல 29 ஆயிரத்து 518 பேர்தான் பாஸாகியிருந்தோம். அப்போ நம்பிக்கை இருந்தது. ஆனா  அரசு, பாஸ் மார்க்கை கொஞ்சம் தளர்த்தி, 72 ஆயிரத்து 700 பேர் பாஸ்னு அறிவிச்சாங்க. இதனால, தகுதித் தேர்வுல குறைவான மார்க் வாங்கினவங்க கூட ஸ்கூல், காலேஜ் மார்க் வெயிட்டேஜை வச்சு உள்ளே போயிட்டாங்க’’ என்கிறார் அவர்.

இவர்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமியின் கதை நெஞ்சை உருக்குகிறது. ‘‘எனக்கு 35 வயசாச்சு சார். டெட்ல 90 மார்க் வாங்கி பாஸானேன். இதனால, எனக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சாங்க. நிச்சயதார்த்தமும் முடிஞ்சிருச்சு. இப்ப, வேலை இல்லன்னதும் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வேலை பார்த்துட்டிருந்த பிரைவேட் ஸ்கூல்ல இருந்தும் நின்னுட்டேன். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியல சார்...’’  சொல்லும்போதே குரல் உடைந்து அழுகிறார் அவர்.

சேலம் அருகேயுள்ள தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதா, பி.ஏ., பி.எட் முடித்தவர். ‘‘எங்க குடும்பத்துல நான் முதல் தலைமுறை பட்டதாரி சார். டெட் எக்ஸாம் எழுதும்போது, நான் வயித்துல ரெட்டைக் குழந்தைகளை சுமந்துட்டிருந்தேன். அரசு வேலை கனவுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன். எல்லாம் போச்சு.

இனி, மறுபடியும் பிளஸ் 2 தேர்வெழுதி மார்க்கை கூட்டவா முடியும்? நாங்க, முதல்வரைச் சந்திக்கணும்னு கோரிக்கை வச்சப்ப, கல்வித்துறையைச் சேர்ந்த ஒருத்தர் எங்களப் பார்த்து, ‘உத்தரப் பிரதேசத்துக்குப் போய் மாடு மேய்ங்க’ன்னு சொல்றாரு. இன்னொருத்தர் அசிங்கமா திட்டுறாரு. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல கூட தங்க விடாம போலீஸ்காரங்க விரட்டுறாங்க. எங்க கண்ணீரை யாருமே புரிஞ்சுக்கல!’’  பேச முடியாமல் கதறுகிறார் அவர்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள தாண்டவபல்லம் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்த சம்பங்கியின் வார்த்தைகள், இன்னும் சோகம். ‘‘பிளஸ் 2வுல நான் மார்க் குறைவுதான். ஆனா, எங்க கிராமத்துலயே நான்தான் சார் முதல் மார்க். ஊர்ல முதல் தலைமுறையா படிச்சவ நான்.

 அப்படிப் படிச்சு நான் வாங்கின பி.ஏ., பி.எட் இப்ப டியூஷன் வச்சிப் படிச்சி மார்க் எடுக்கறதுக்கு நிகராகுமா சார்? நாங்க ‘டெட்’ல ஃபெயிலாகிட்டு போராடல. பாஸாகியும் வேலை இல்லைங்கறதாலதான் போராட வேண்டி யிருக்கு. வேலை இல்லைன்னா இந்த இடத்துலயே சாகறதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்ல. இதப் புரிஞ்சிக்கிட்டு அரசு எங்க குறையை கேக்கணும். எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை தரணும்’’ என்கிறார் அவர் கண்ணீர் ததும்பிய படி! 

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்