பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 23 அருண்

கசியும் ஈரம்

‘‘என் நாவல்கள் எதுவும் பாலு மகேந்திராவால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய, அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளைப் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படிப் படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. இருபது, இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன’’ என எழுத்தாளர் சுஜாதா சொன்னார்.

உலகின் ஆகச் சிறந்த இயக்குனர்களில் பெரும்பாலானவர்கள் திரைப்படங்களின் நேரம் குறித்தோ, அதன் வணிகத் தன்மை குறித்தோ அதிகம் கவலைப்படுவதில்லை. தங்களிடம் இருக்கும் கதையை அல்லது ஒரு அனுபவத்தை பார்வையாளனுக்கும் கடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அந்தக் கதை அல்லது அனுபவம் எத்தனை மணி நேரங்களைக் கோருகிறதோ அந்தக் கால அளவிற்குள் திரைப்படத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (டூயல்), சத்யஜித் ரே (டூ), ரித்விக் கட்டக் (ஃபியர்) என எல்லாரும் குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்த தமிழ் சினிமாவை காட்சி மொழி கொண்டு உணர வைத்தவர் பாலு மகேந்திரா. தமிழில் மட்டுமல்ல, உலகில் அதிகம் குறும்படங்கள் எடுத்த இயக்குனர்களின் பட்டியலிலும் அவரே முதல்வர். பல்வேறு எழுத்தாளர்களின் 52 கதைகளை குறும்படமாக எடுத்துள்ளார். அதில் சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ சிறு
கதையும் ஒன்று!

காவல்துறையில் பணிபுரியும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனது குழந்தைக்கு நாளை பிறந்த நாள். குழந்தைக்கு புதுத்துணி, சின்ன மோதிரம் போன்றவற்றை அவனது மனைவி சீட்டு போட்டு, அதில் வந்த பணத்தில் வாங்கிக் கொடுத்தாயிற்று. ஆனால் சாயங்காலம் கோயிலுக்குச் செல்வது உள்ளிட்ட இதர செலவுகளுக்கு இன்னமும் நூறு ரூபாய் தேவைப்படுகிறது. ‘‘அந்த நூறு ரூபாயை மட்டும் நீங்கள் இன்னைக்கு ராத்திரி வீட்டுக்கு வரும்போது கொண்டுவந்தால் போதும்’’ என்கிற மனைவியின் அன்பை அவனால் நிராகரிக்க முடியவில்லை.

‘‘நூறு ரூபாய்தானே, எப்படியும் இரவு கொண்டு வந்து விடுவேன்’’ என்கிறான். ‘எப்படி’ என்கிற மனைவியின் கேள்விக்கு, ‘பல்வேறு மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிமன்றம், வழக்கு என்று செல்வதைத் தவிர்க்க அவர்கள் கொடுக்கும் சன்மானம்தான்’ என்று பதிலளிக்கிறான். ‘லஞ்சமா’ என்று மனைவி நேரடியாகக் கேட்க, ‘‘அதை ஏன் அப்படி பாவிக்க வேண்டும்?’’ என்கிறான்.

கணவன் லஞ்சம் வாங்கும் யோக்கியதையில் மயங்கும் மனைவி, ‘‘யார் யார்கிட்ட எல்லாம் லஞ்சம் வாங்குவீங்க?’’ என்று ஆவலாகக் கேட்கிறாள். கணவனும் விலாவாரி யாகச் சொல்கிறான். காவல் நிலையத்திற்குச் சென்றதும், ஏட்டையா உள்ளிட்ட சிலரிடம் நூறு ரூபாய் கடன் கேட்கிறான்.

மாதக்கடைசி என்பதால் யாரிடமும் பணமில்லை என்று கை விரிக்கிறார்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள், வாகன ஓட்டிகள் என யாரிடமாவது நூறு ரூபாய் தேற்ற முடியுமா என்று தெருக்களில் அலைகிறான். ஆனால், அன்றைக்குப் பார்த்து எல்லாரும் உத்தமர்களாகவே இருக்கிறார்கள்.

இறுதியாக, கோயில் அர்ச்சகர் ஒருவர் அஞ்சல் பெட்டியில் இருக்கும் கடிதம் ஒன்று கீழே விழுந்துவிடுமோ என்று பயந்து, அதனை கோயில் அருகில் இருக்கும் இன்னொரு அஞ்சல் பெட்டியில் கொண்டு சேர்க்க எடுத்து விடுகிறார். இதனை கவனித்த கான்ஸ்டபிள், உடனே குருக்களைப் பிடித்து அவரிடம் விசாரணை செய்து, மிரட்டும் தொனியில் விரட்டி, இறுதியாக நூறு ரூபாய் கேட்கிறார்.

குருக்கள் ஆரம்பத்தில் பயந்தவராகவும், பின்னர் ‘காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வாளரைப் பார்க்கலாம்... வாருங்கள்’ என்று பேசுமளவிற்கு தைரியம் வந்தவராகவும் மாறுகிறார். குருக்களை வைத்துக்கொண்டே டீக்கடையில் அமர்ந்திருக்கும் தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் கான்ஸ்டபிள்.

தன் தேவையை நண்பரிடம் சொன்னதும், அவர் ‘எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பிச் செல்கிறார். இறுதியாக குருக்களுக்கும், கான்ஸ்டபிளுக்கும் இடையே நடக்கும் அன்பும், அக்கறையும், எள்ளலும், துள்ளலும் நிறைந்த உரையாடல் மனித மனதில் இருக்கும் ஈரத்தைக் கசிய வைக்கிறது.

சிறுகதை என்பது வரி வடிவம் கொண்டது. சினிமா காட்சி மொழி ஊடகம். ஒருவர் நடந்து செல்கிறார் என்பதை பத்து பக்கங்களுக்கு வரி வடிவத்தில் விளக்கிச் சொல்லலாம். ஆனால் சினிமாவில் அதையே பத்து நொடியில் சொல்லியாக வேண்டும்.

சுந்தர ராமசாமி, மௌனி, க.நா.சு. போன்றவர்களின் கதைகள் மிக நுட்பமானவை. அவற்றில் இருக்கும் வரிகளை அப்படியே காட்சி மொழிக்கு மாற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல. சுந்தர ராமசாமியின் சிறுகதை, கான்ஸ்டபிளின் கோணத்தில் நகரும்.

ஆனால் பாலு மகேந்திரா முதலில் கோயிலில் கதையைத் தொடங்குகிறார். அர்ச்சனை முடிந்ததும் ஒரு பக்தர் நூறு ரூபாயை அர்ச்சகரின் தட்டில் போடுகிறார். இறுதியில் அந்த நூறு ரூபாய் இன்னொருவருக்குக் கை மாறுகிறது. தொடங்கும் புள்ளியில் முடிப்பதும், தொடங்கும் புள்ளியிலேயே கதையை விவரிப்பதும், கதையின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதும் மிகச் சவாலான வேலை.

சுந்தர ராமசாமி கதையில், கான்ஸ்டபிள் எப்படியெல்லாம் லஞ்சம் வாங்குவார் என்பதைக் காட்சிகளாக விவரிப்பார். பாலு மகேந்திரா அதையெல்லாம் கான்ஸ்டபிள் தன் மனைவியிடம் பேசும் வசனங்களாக மாற்றியிருப்பார்.

ஆனால், ‘விடியக் கருக்கலில் எழுந்திருக்க வேண்டும். சுடு தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். பட்டுச்சட்டை போட்டு, கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ரோஜா ஒன்றே ஒன்று  அதற்குத் தனி அழகு.

நாம் இருவரும் குழந்தையைக் கோயிலுக்குத் தூக்கிச் செல்கிறபொழுது தெருவில் சாணி தெளிக்கும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கித் தலைதூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலைதூக்கிப் பார்ப்பதை நான் பார்க்க வேண்டும். நான் பார்த்து, உங்களைப் பார்க்க வேண்டும். எல்லோரும் பார்ப்பதை நீங்கள் பார்க்க வேண்டும்; பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும்’ என்கிற கற்பனையை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பார். காரணம், இந்தக் கற்பனைதான்   மனைவியின் இந்த ஆசைதான்  அவனை எப்படியாவது லஞ்சம் வாங்கும் நிலை நோக்கி நகர்த்துகிறது.

இந்த ஆசைப்படும் காட்சிக்கு அடுத்து நேரெதிரான இன்னொரு காட்சியைப் படம் பிடித்திருப்பார் பாலு மகேந்திரா. ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்’ என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்தும், யாரும் வராதது கண்டு சோர்வடைகிறார் கான்ஸ்டபிள்.

கடைசியில் ஒருவன் வருகிறான். நம்பிக்கை தளராது, அவனைப் பிடிக்க ஆயத்தமாகிறார் கான்ஸ்டபிள். ஆனால் அவன் சிட்டாகப் பறந்து விடுகிறான். அவனைப் பிடிக்க நீண்ட நேரமாக ஓடுகிறார். இதனை அப்படியே சில நிமிடக் காட்சியாக பதிவு செய்திருப்பார் பாலு மகேந்திரா. ஆசை படுத்தும் பாடு என்பதை இதைவிட சிறந்ததொரு காட்சி மொழியில் யாரும் சொல்லிவிட முடியாது.

சீட்டு போட்டு குழந்தைக்கு மோதிரம் வாங்கியதை தன் கணவனிடம் விளக்கும்போது அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், சிணுங்கல்கள் எல்லாம், ‘நடுத்தர வர்க்கப் பெண்கள் எல்லாரும் தேவதைகள்தானோ’ என்று மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார் மௌனிகா. குருக்களுக்கும், கான்ஸ்டபிளுக்கும் இடையே நடக்கும் அன்பும், அக்கறை யும், எள்ளலும், துள்ளலும் நிறைந்த உரையாடல் மனித மனதில் இருக்கும் ஈரத்தைக் கசிய வைக்கிறது.

படம்: பிரசாதம்     இயக்கம்: பாலு மகேந்திரா
நேரம்: 20.34 நிமிடங்கள் ஒளிப்பதிவு: ஷங்கி மகேந்திரா
இசை: ஐசக் தாமஸ் கொட்டுக்காப்பள்ளி கதை: சுந்தர ராமசாமி
பார்க்க: www.youtube.com/watch?v=C5xR2nauBxg 

ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. அது இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விஷயங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ, அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும்.

ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் எல்லா படைப்பாளிகளுக்கும் இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது!’’ இதுதான் பாலு மகேந்திரா எப்போதும் புதிதாக வருபவர்களிடம் உதிர்க்கும் வார்த்தைகள். அவரது நுண்ணுணர்வுதான் அவரை உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக மாற்றியிருக்கிறது.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி