கபடியை வச்சி படம் எடுக்குறவங்க ஸ்பான்ஸர் பண்ணலாமே!



குமுறும் தமிழக கபடி சங்கம்

'கிட்டத்தட்ட ஐ.பி.எல் மாதிரியே கலக்கிட்டாங்களேப்பா!’ எனப் பேச வைத்திருக்கிறது நடந்து முடிந்திருக்கும் ‘ப்ரோ கபடி லீக்’ தொடர். அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து உற்சாகப்படுத்தி தங்களது ஜெய்ப்பூர் அணியை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.

 ஜெயித்த வீரர்களைக் கட்டிப் பிடித்துப் பாராட்டி ஐஸ்வர்யா வாழ்த்துச் சொல்ல, ‘‘ஐஸ் அண்ணி’’ என உருகினார்கள் அவர்கள். கிரிக்கெட், ஹாக்கி, பாட்மின்டன், கால்பந்து வரிசையில் கபடிக்கும் நடந்த விளையாட்டுத் திருவிழாவில், கபடியின் தாய்மண்ணான தமிழகத்திலிருந்து டீம் இடம்பெறாததுதான் பெரும் வருத்தம்!

நமது பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு இதுவரை இத்தனை பெரிய திருவிழா நடத்தப்பட்டதும் இல்லை... கமர்ஷியல் ஹிட் அடித்ததும் இல்லை. இது மாதிரி கபடியைக் கொண்டாட வேண்டுமென எத்தனை தமிழ்க் குரல்கள் ஒலித்திருக்கின்றன... அத்தனையும் இன்று பலித்திருக்கின்றன! ஆனால், டெல்லி, மும்பை, பெங்களூரூ, புனே, ஜெய்ப்பூர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், பாட்னா என எட்டு அணிகள் கலந்துகொண்ட இந்த ப்ரோ கபடி லீக்கில், நமது தமிழ்நாடு அணி மட்டும் மிஸ்ஸிங்! என்னாச்சு?

‘‘தமிழ்நாடு டீம் விளையாடலையான்னு கேட்க லட்சம் பேர் இருக்காங்க சார்... ஆனா, ஸ்பான்ஸர் செய்ய ஒருத்தர் கூட முன்வரலையே. இதுதான் யதார்த்தம்’’  வருத்தம் தோய்ந்த குரலில் நம்மை வரவேற்கிறார் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷபியுல்லா.

 ‘‘ப்ரோ கபடி லீக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே டீம் எடுப்பதற்கான ஏலம் நடத்தினாங்க. தமிழ்நாடு அணியை ஒரு நிறுவனமும் ஏலம் எடுக்க முன் வந்துச்சு. என்ன காரணத்தாலோ ஏலத்துக்கு ஒருநாள் முன்னாடி அந்த நிறுவனம் பின்வாங்கிடுச்சு. கடைசி நேரத்துல விலகியதால எங்களாலும் ஒண்ணும் செய்ய முடியல. இதனால, நம்ம பிளேயர்ஸ் மற்ற அணிகள்ல விளையாடினாங்க.

‘யு மும்பா’ அணியில ஜீவ குமார், ஜீவா, சுரேஷ்னு மூணு பேரு. அதேமாதிரி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியில கேப்டன் ராஜகுரு, ரஞ்சித் இருவரும் தமிழ்நாட்டு பிளேயர்ஸ். புனே டீம்ல பாலமகேந்திரன். பெங்களூரூ டீம்ல சேரலாதன்... இப்படி மொத்தம் பத்து பிளேயர்ஸ் வெவ்வேறு டீம்களுக்காக விளையாடினாங்க. தமிழ்நாடு டீமுக்கு ஸ்பான்ஸர் கிடைச்சிருந்தா இவங்க எல்லாம் ஒண்ணா விளையாடி நம்ம அணியை ஜெயிக்க வச்சிருப்பாங்க. எல்லோருமே சூப்பர் பிளேயர்ஸ்’’ என்கிறவர், ஏலத்திற்கான தொகை பற்றியும் விளக்குகிறார்.

‘‘வீரர்கள் ஏலத்தை ஏ, பி, சி என மூணு வகையா பிரிச்சிருந்தாங்க. இதுல சர்வதேசப் போட்டிகள்ல விளையாடி இருந்தா ஏ பிரிவு பிளேயர்ஸ். அவங்களுக்கு 10 லட்சத்துக்கும் மேல ஏலத் தொகை கொடுத்து எடுத்தாங்க. தேசிய அளவு வீரருக்கு 5 லட்சத்துக்கும் மேல், மாநில அளவு வீரருக்கு 2 லட்சத்துக்கும் மேலன்னு வச்சிருந்தாங்க. இதுல வெளிநாட்டு வீரர்களும் கலந்துக்கிட்டு விளையாடினாங்க. மொத்தமே ஏலத்தொகை 3 கோடிக்குள்ளதான் இருந்துச்சு.

ஜெய்ப்பூர் டீமை நடிகர் அபிஷேக் பச்சன் 5 கோடிக்கு எடுத்திருந்தார். இப்ப அந்த டீம்தான் ஜெயிச்சிருக்கு. அதனால, ஏலத்திலெல்லாம் நிறுவனங்களுக்கு எந்த சிரமமும் இருந்திருக்காது. கபடியை மையமா வச்சு சினிமா எடுக்குறாங்க. நடிகர்கள் ஆர்வமா நடிக்கிறாங்க. ஆனா, அபிஷேக் மாதிரி இங்க யாராவது ஒரு நடிகர் நம்ம டீமை ஏலம் எடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தா, நம்ம பாரம்பரிய விளையாட்டுன்னு மார் தட்டிக்கிற நாம, உலக அளவுல நம்ம திறமையை நிரூபிச்சிருக்கலாம்.

தமிழ்நாட்டுல கபடி விளையாட்டு இன்னும் ஒரு படி முன்னேறியிருக்கும். அடுத்த தடவையாவது ஸ்பான்ஸர் நல்லபடியா கிடைக்கணும்!’’  ஆதங்கம் பொங்க முடிக்கிறார் ஷபியுல்லா. கபடியை மையமா வச்சு சினிமா எடுக்குறாங்க. நடிகர்கள் ஆர்வமா நடிக்கிறாங்க. ஆனா, அபிஷேக் மாதிரி இங்க யாராவது ஒரு நடிகர் நம்ம டீமை ஏலம் எடுத்திருக்கலாம்.

பேராச்சி கண்ணன்