மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

வேண்டும் என்பதற்கும், வேண்டாம் என்பதற்கும், ஒற்றை எழுத்துதான் வித்தியாசம். ஆனால், வாழ்க்கையின் வேரையே அசைக்கும் வித்தியாசம் அந்த ஒற்றை எழுத்திற்கு இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே நின்றார் குமரகுருதாசர். அந்த அதிகாலை அவருள் தாங்க முடியாத தவிப்பை ஏற்படுத்தி இருந்தது. மெல்ல நடந்து கடற்கரைக்கு வந்தார். எதையோ விடாது துரத்திக் கொண்டிருக்கும் அலையை இமை கொட்டாமல் பார்த்த படி நின்றார். மனதின் தவிப்பு அவரது நெற்றியில் வியர்வையாய் பூத்து நின்றது.

குமரகுருதாசரின் மனசும் ஆன்மாவும் வேண்டும்... வேண்டாம்... இந்த இரண்டுக்கும் நடுவே நின்று பேசத் தொடங்கின. ‘இந்த ஊர் வேண்டாம்... இந்த உறவு வேண்டாம்... காடு வேண்டாம்... கழனி வேண்டாம்... இவை எல்லாம் என் இலக்குக்குத் தடையாக இருக்கின்றன. மனதில் திமிறிக்கொண்டு நிற்கும் துறவு யானையை எத்தனை நாளைக்கு பந்த பாசப் பொரியைப் போட்டு கட்டி வைக்க முடியும். அது ஆன்மிகக் காட்டில் ஞானக் கரும்பு வேட்டைக்குத் தவிக்கும்போது சோளப் பொரிக்கு மயங்கி சும்மா நிற்குமா?’

பெற்றவளின் புடவை வாசனை மனதில் எட்டிப் பார்த்தது... அப்பா, முதுகில் தூக்கிக் கொண்டு வேடிக்கை காட்டியது தள்ளி நின்று சிரித்தது. கை கோர்த்து விளையாடிய நட்புகள் விழியோரக் கண்ணீரானது. சகலமும் நீதான் என நம்பிக்கையோடு வந்தவளின் நினைவு, ‘இது சரியா?’ எனக் கேள்வி கேட்டது. பிள்ளைகள் என்ன ஆவார்கள் எனப் பாசம் இறுக்கியது. மெல்ல வருடிய ஊர்க் காற்று, ‘எங்களை விட்டுட்டுப் போறியா..?’ எனத் தேம்பியது.

‘இதையெல்லாம் விட்டுவிட்டுப் போகணுமா?’ என்கிற கேவல் உள்ளே எட்டிப் பார்த்த வேளையில் வேலவன் சிரித்தான். ஆன்மா பேசத் தொடங்கியது...‘இவை எல்லாம் உன்னோடு எது வரை வரும்? கடைசி வரை வருமா? இவை எல்லாவற்றையும் மரணம் ஒருநாள் ஏதோ ஒரு கணத்தில் உன்னிடமிருந்து பிரித்து விடுமே...

அதை எப்படித் தாங்கிக் கொள்வாய்... நாற்று நடுவது போலத்தான் வாழ்க்கை. நெல் மணி வேண்டுமென்றால் நாற்றைப் பிடுங்கி வேறிடத்தில் நட வேண்டும். நீ நாற்று; விதைத்தது முருகன். அவன் பிடுங்கி நட விரும்புகிறான். சும்மா கிடப்பதுதான் உனக்கு அழகு.

மனசுக்குப் போதவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்வது எளிதல்ல. ஆற்றில் ஒரு கால். சேற்றில் ஒரு கால் அவஸ்தை. வீடு உனக்கு நிம்மதி தருமா? ஞானம் வேண்டுமெனில் உறவை உதறி விடு. விட்டு விடுதலையாகு!’ கட்டளையாய் வந்தன வார்த்தைகள். பூவுக்கும் காம்புக்கும் நடுவே ஒரு வளையம் இருக்கும். அந்த வளையத்தில் சரியாகத் தட்டும்போது பூ உதிரும். பூவுக்கும் வலிக்காது; செடியும் தவிக்காது. அந்த வளையத்தை நேரம் பார்த்துத் தட்டினான் முருகன். அதற்கு 45 ஆண்டுகள் தேவைப்பட்டது.

‘எனக்கு இனி எல்லாம் முருகன்தான். அவனே சகலமும்’ என்கிற முடிவுக்கு வந்த குமரகுருதாசர், ஊரை ஒருமுறை திரும்பிப் பார்த்தார். ‘இதுவரை நீங்கள் தந்த சகலத்திற்கும் நன்றி’ என்றார். ‘நான் தெரிந்தோ, தெரியாமலோ இங்கு எந்த உயிரைத் துடிக்க வைத்திருந்தாலும் மன்னியுங்கள்’ என மானசீகமாக மன்னிப்புக் கேட்டார்; திரும்பினார்; கடலைப் பார்த்தார். காற்றை ஆழ இழுத்தார். மெல்ல வெளி விட்டார். காற்றோடு சேர்ந்து பற்றெல்லாம் வெளியானது போல உணர்ந்தார்.

இனி...அந்தக் கடற்கரையையே கடவுளின் சந்நதியாகக் கொண்டு, துறவு மேற்கொள்ளும் ஒருவர் சந்நியாச தர்மப்படி மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

‘இந்த நொடியிலிருந்து முருகனைத் தவிர, அவனது தாமரைப் பாதங்களைத் தவிர, எனக்கென எதுவும் இல்லை. என் உறவுகள், உடைமைகள், நிலம் முதலான அத்தனை புறச்சேர்க்கைகளையும் விட்டு விடுகிறேன்.

நான், எனது என்னும் அபிமானம் அற்று என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.என்னால் எந்த ஜீவராசிக்கும் அச்சம் ஏற்படாமல் கவனமாக இருப்பேன். அனைத்து ஜீவராசி களையும் எனது ஆத்ம சொரூபமாகவே காண்பேன். எந்த ஜீவனையும் கொல்ல மாட்டேன். என் கண் எதிரே எந்த ஜீவனாவது அச்சத்தால் நடுங்கினால் நான் விரைந்து அந்த ஜீவனை அச்சத்திலிருந்து விடுவிப்பேன். எனது நிலை கருதி யாராவது வலிய வந்து எனக்கு உணவு தந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். என் பசிக்காக யாரிடமும் உணவை யாசிக்க மாட்டேன்.

என் முன்னால் யாராவது பசியோடு இருப்பதைக் கண்டால், எனது ஆற்றலால் அந்தப் பசியைத் தீர்த்து வைப்பேன். எந்த ஜீவனும் பசியோடு இருப்பதைக் கண்டு பாராமுகமாக இருக்கமாட்டேன்.

காணாததைக் கண்டது போலவும், கேளாததைக் கேட்டது போலவும் நடித்து, உலக மக்களை ஏய்த்துப் பிழைக்கும் போலி சந்நியாசியாக நான் நடந்துகொள்ள மாட்டேன்.
விளக்குச் சுடர் கீழ் நோக்கி எரிந்தாலும் சூரியன் மேற்கில் உதித்தாலும் நான் ஆச்சரியப்பட்டு நிற்க மாட்டேன்.

சத்தியத்தை மட்டுமே பேசுவேன். சாத்திரங்களுக்கு சத்தியமான விளக்கத்தை மட்டுமே தருவேன். என் முருகனைத் தவிர, அத்தனையையும் இந்த நொடியிலிருந்து துறக்கிறேன்...’
 இதை மூன்று முறை கடலைப் பார்த்துச் சொன்னார். வானம் பார்த்து கண் மூடினார். கை குவித்தார். ‘‘முருகா, நீயே என் துருவ நட்சத்திரம். இந்தப் பிறவிக் கடலைக் கடக்க உன்னைப் பார்த்தே பயணிக்கிறேன். கரம் பிடித்து அழைத்துக் கொள்’’ என்றார். கண்ணீர் கன்னம் தொட்டு துளியாய் மணலில் விழுந்தது.

முருகனின் அருள் கரம் குளிர் காற்றாய் குமரகுருதாசரின் தலை வருட, தெளிந்தார்.படகில் ஏறினார். காலில், துணிகளில் ஒட்டியிருந்த பாம்பன் கடற்கரை மண்ணை உதறி விட்டு அமர்ந்தார். குமரகுருதாசர் கிளம்புவதைப் பார்த்த சின்னசாமிப்பிள்ளை, குமரகுருதாசரின் மகன் முருகையாப்பிள்ளையோடு ஓடோடி வந்தார். ‘‘நீ கிளம்பிவிட்டால் இவனை யார் பார்த்துக் கொள்வார்கள். குடும்பம் என்னவாவது?’’ எனக் கேட்டார்.

உறுதியான குரலில் குமரகுருதாசர் சொன்னார்... ‘‘முருகன் பார்த்துக் கொள்வான். கவலை வேண்டாம்’’ படகு நகர்ந்தது. நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தபோது குமரகுருதாசருக்குள் ஒரு எண்ணம் உதித்தது. ‘‘இனி நான் பாம்பன் மண்ணை மிதியேன்’’ என புதிதாய் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

மனசு நிர்மலமாகி இருந்தது. புத்தம் புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தார். பிரப்பன்வலசை வந்தார். தவபூமியை வணங்கினார். பெற்றவள் அங்கே சோகமே வடிவாய் அவரை எதிர்கொண்டாள்.
 ‘‘நீ பாட்டுக்கு சாமியாராக் கிளம்பிட்டா எனக்கென்னப்பா வழி? தள்ளாதவ நான்?’’ எனக் கேட்டு கண்ணீர் சிந்தினாள்.‘‘தாயே... என்னைத் தடுக்காதீர்கள். செவ்வேள் முருகனை நம்பி இருங்கள். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்’’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார் குமரகுருதாசர்.

சின்னசாமிப் பிள்ளை முதலானவர்கள் குமரகுருதாசரை வணங்கி வழியனுப்பி வைத்தார்கள். ராமநாதபுரம் வந்தார். அங்கு குதிரை பூட்டப்பட்ட தபால் வண்டியில் ஏறிப் பயணித்தார். மானாமதுரை அருகே போனபோது வண்டி குலுங்கியது.

குமரகுருதாசரின் பாதம் தரையில் மோதி வீங்கியது. வலியைப் பொறுத்துக்கொண்டு, அறம்வளர்த்தநாதப்பிள்ளை வீட்டை அடைந்தார். அப்போது பிள்ளை வீட்டில் இல்லை; சிவகங்கை சென்றிருந்தார். வீட்டார் குமரகுருதாசரை திண்ணையில் அமர வைத்து உணவு கொடுத்து கவனித்துக்கொண்டார்கள்.

அன்று இரவு அறம்வளர்த்தநாதப்பிள்ளை கனவில் தோன்றிய முருகன், ‘‘உன் வீட்டிற்கு என் பக்தன் வந்துள்ளான். காலில் காயத்தோடு அவதிப்படும் அவருக்கு வேண்டியதைச் செய். சீக்கிரம் வீடு செல்’’ என்று கட்டளை இட்டார்.

அதன்படி வீடு திரும்பிய பிள்ளை, மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை தந்தார். ஒரு வாரத்தில் குணமாகி, மழவராயன் ஏந்தல் என்ற ஊருக்கு வந்து நல்லபுலி சேர்வைக்காரர் வீட்டில் தங்கினார். அவரோடு சேர்ந்து மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருவாதவூர் வந்தார்.

மதுரை நகர்ந்து அன்னை மீனாட்சியை தரிசித்தார். திருப்பரங்குன்றம் முருகனை குளிரக் குளிர வணங்கினார். ஒருநாள் அவர் மனதில், ‘மதுரை போதும்... சென்னை செல்’ என முருகன் சொன்னான். ‘சென்னை எனக்குப் புதிய பிரதேசம் ஆயிற்றே... அங்கே எனக்கு யாரையும் தெரியாதே.... என்ன செய்வேன்?’ உள்ளே கேள்வி அம்புகள் சரம் சரமாய் புறப்பட்டன. சென்னை சென்றாரா குமரகுருதாசர்?

பாம்பன் சுவாமி தரிசனம் பிரப்பன்வலசை கோயில்

பாம்பன் சுவாமிகளின் தவபூமியான பிரப்பன்வலசையில் பாம்பன் சுவாமிகளுக்கு ஆலயம் அமைந்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து பிரப்பன்வலசைக்கு பேருந்து வசதி இருக்கிறது. பிரப்பன்வலசையில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் ஆலயத்தை அடையலாம். பூஜைக்கு வேண்டிய பொருட்களை ராமநாதபுரத்திலிருந்தே வாங்கிச் செல்வது நல்லது. காலை 7 மணி முதல் 11 மணிவரை நடை திறந்திருக்கும். மாலை 5 முதல் 7 மணிவரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

முகவரி: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில். பிரப்பன்வலசை, இருமேனி அஞ்சல்,
ராமநாதபுரம் மாவட்டம்.
பூபதி, ஆலய நிர்வாகி 94431 09564
நாகரத்தினம் ஆலய அர்ச்சகர் 94864 83339.

பாம்பன் சுவாமிகள் அருளிய வாழ்க்கை!

‘‘பத்து வருஷத்துக்கு முன்னால் கோவையில் ஒரு தனியார் வங்கியில் எக்ஸிகியூட்டிவாக வேலை செய்தேன். ஒரு நாள் எந்தவித காரணமும் சொல்லாமல் வேலையில் இருந்து நீக்கினார்கள். சொந்த ஊரான திருச்சி வந்து பிசினஸ் செய்தேன். நஷ்டம். மனம் வெறுத்த நிலையில் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு வந்து, ‘நல்ல வழி காட்டுங்கள்’ எனக் கண்ணீர் சிந்தினேன். ஊர்திரும்பிய எனக்கு மகிழ்ச்சி காத்திருந்தது.

எந்த வங்கியில் என்னை வேலையில் இருந்து நீக்கினார்களோ, அதே வங்கியின் திருச்சி கிளை என்னை வேலைக்கு அழைத்தது. இப்போது கோவையில் ஹெச்.டி.எஃப்.சி, வங்கியின் கிளை மேலாளராக இருக்கிறேன். என் குடும்பம் நிம்மதியாக வாழ்கிறது இது பாம்பன் சுவாமியின் கருணை’’ என நன்றியோடு சொல்கிறார்,டி.எஸ்.வாசன்.

மரண பயம் நீக்கும் மந்திரம்

நின்மலச்செஞ் சோதிவடி வுடையவுனை
யனவரத நினைப்போர்க் கென்றும்
பொன்மயச்செம் மேனியுடம் புண்டாகு
நரைதிரைகள் பொருந்தா புன்கண்
தன்னுரத்தி னாலுயிர்கொள் கூற்றுமணு
காதெதினுஞ் சத்தாய் நிற்குஞ்
சின்மயத்தின் றெருட்பிழம்பே யான்றொழுமோர்
வேற்சமர்த்தா சிவச்சீர்க் குன்றே.

பூஜையறையில் முருகன் திருவுருவப் படத்திற்கு முல்லைச் சரம் சார்த்தி, நெய் விளக்கேற்றி வைத்து, பாம்பன் சுவாமிகள் அருளிய இந்தத் திருத்தொடையல் பாடலை தினமும் பாராயணம் செய்து வந்தால், தீராத நோய் தீரும். மரண பயம் நீங்கும். பாதிக்கப்பட்டவர் மாத்திரமன்றி இந்தப் பாடலை நமக்குத் தெரிந்த பிறருக்காகவும் பாடலாம்.

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்