சிகிச்சை



‘‘ஏம்ப்பா... அறிவில்ல..? வயசு எண்பது ஆகுது. உடம்பு அடிக்கடி சுகமில்லாம தான் போகும். உடனே... உடனே... டாக்டரப் பார்க்கணும்னு அடம் புடிக்கறியே! இப்ப பாரு... ஆட்டோல இருந்து கூட இறங்க முடியல. பொறுமைய சோதிக்காதப்பா. இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்!’’  அப்பாவை கைத்தாங்கலாக ஆட்டோவிலிருந்து பிரித்தான் சுதாகர்.

‘‘தம்பி... ஏறினதுலருந்தே அப்பாவைத் திட்டிக்கிட்டு வர்றீங்களே... பாவமில்லையா? வயசானா எல்லாருக்கும் இதானே தம்பி...’’  ஆட்டோக்காரர் பரிந்து பேச, ‘நீ மூடிக்கோ’ என்பது மாதிரி செய்கை செய்து அனுப்பினான் சுதாகர்.

டாக்டரின் பெயர்ப் பலகையை பார்த்ததும் மீண்டும் கோபமானான். ‘‘ஏம்ப்பா... இவரு ஒரு சைக்யாட்ரிஸ்ட்..! உனக்கு மூளை கீளை சரியில்லையா...?’’ ‘‘டேய்... இவரும் டாக்டர்தாண்டா. அதுல ஸ்பெஷலிஸ்ட். அவ்வளவுதான்’’ மகனை சமாதானப்படுத்தினார்.

அந்த டாக்டர் சுப்பையாவை சோதித்தபோது சுதாகருக்கு போன் வர, ‘சாரி’ சொல்லி வெளியே போனான். ‘‘டாக்டர்... நான் எனக்காக இங்க வரல! என் மகன் இப்ப எதுக்கெடுத்தாலும் கோபப்படறான். வீட்ல பொருள்களைப் போட்டு உடைக்கறான். அது நார்மலா தெரியல டாக்டர். ப்ளீஸ், கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்களேன்!’’  சுப்பையா சொல்ல... டாக்டர் ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனார்.

கீதா ஸ்ரீனிவாசன்