செல்போன்



‘டியூஷன் போகிறாளே’ என்று செல்போன் வாங்கிக் கொடுத்ததும் வர்ஷினியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது அம்மா வசந்தாவுக்கு! அவள் பேசிக்கொண்டிருப்பது ஒரு பையனுடன் என்று தெரிந்ததும், திடுக்கிட்டுப் போனாள். ‘‘என்னங்க...

 வர்ஷினி யாரோ ஒரு பையன் கூட பேசிக்கிட்டே இருக்கா!’’  கணவனிடம் முறையிட்டாள். ‘‘நானும் கொஞ்ச நாளா கவனிச்சுட்டுதான் வர்றேன். இன்னைக்கு என்னன்னு கேட்போம்!’’ என்று வர்ஷினியை அழைத்துக் கேட்டான் செல்வா. ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே..!’’ என திடுக்கிட்டு தலைகுனிந்தபடி தயக்கமாக சொன்னாள் வர்ஷினி. ‘பளார்...’ அவள் கன்னம் பழுத்தது!

‘‘ஆமாம்ப்பா! நான் ஒரு பையன் கூடதான் பேசிக்கிட்டிருக்கேன். அது வேற யாரும் இல்ல. என் பெரியப்பா... அதான், உங்க அண்ணனோட பையன் அஸ்வின். என்னோட அண்ணன். எங்க சின்ன வயசுல நீங்க ஒண்ணா இருந்தீங்க, நாங்களும் ஒண்ணா இருந்தோம். தாத்தா இறந்த பிறகு, சொத்து, பணம்னு எல்லோரும் சண்டை போட்டு பிரிஞ்சுட்டீங்க.

 எங்களைப் பத்தி யோசிச்சீங்களா..? நாங்க எப்பவும் போல பழகிக்கிட்டுதான் இருக்கோம்! இப்போ செல்போன் இருக்குறதால அண்ணன் எனக்கு படிக்குறதுக்கு அப்பப்ப ஐடியா கொடுப்பான்!’’
அவள் சொல்லிக்கொண்டே போக, பெற்றோர் தலை குனிந்தனர்!