இரண்டு கமல்... இரண்டு தனுஷ்...சைமா அவார்ட்ஸ்



‘இது தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஆஸ்கர்’ எனும் அளவுக்கு கடந்த இரு வருடங்களாக களை கட்டியிருக்கிறது சைமா அவார்ட்ஸ். ‘சவுத் இண்டியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்’ என்பதன் சுருக்கமே சைமா.

கடந்த ஆண்டு சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த நடிகையாக ஹன்சிகாவும் விருதை உயர்த்திப் பிடித்தது இன்னும் மறக்கவில்லை. இதோ, இந்த ஆண்டு ‘சைமா’ விருதுகள் யார் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு கவுன்ட் டவுன் நட்சத்திரங்கள், ரசிகர்கள் மத்தியில் இப்போதே தொடங்கிவிட்டது.

* மலேசிய சுற்றுலாத் துறையோடு கை கோர்த்து இந்த முறை கோலாலம்பூரில் செப்டம்பர் 12, 13 என இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது சைமா விருதுகள் விழா. இதற்காக அங்குள்ள நெகரா ஸ்டேடியம், பளபளவென்று இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறது. ‘‘எங்க படம் ஷூட்டிங் எல்லாம் மதுரை, தேனி, கும்பகோணத்துலதான் நடக்குது. அதுவே எங்களுக்கு ஃபாரின் மாதிரி. சைமா புண்ணியத்தில் இப்ப மலேசியா வரப் போறேன்’’ என கலகலப்பாக நன்றி சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

* கடந்த இரண்டு ஆண்டுகளை போல, இந்த வருடமும் சைமா விருது வழங்கும் விழாவில் ரசிகர்களின் விழிகளுக்கும், செவிகளுக்கும் மெகா விருந்து காத்திருக்கிறது. தமன்னா, சிம்பு, ஸ்ரேயா, சிவராஜ்குமார், நிவின் பாலி, தேவிஸ்ரீபிரசாத், ரெஜினா, ப்ரணீதா, நந்திதா, இஷா தல்வார், லட்சுமி மேனன், கீர்த்தி கர்பந்தா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர்.

* ‘‘என் பிறந்த நாள் செப்டம்பர் 11. இந்த வருடம் சைமா விருது வழங்கும் விழாவினால் என் பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட இருக்கிறேன். தெலுங்குத் திரையுலகம் எனக்கு இரண்டாவது தாய் வீடு போன்றது. அதன் சார்பாக சைமா விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெருமை’’ என நெகிழ்ந்திருக்கிறார் நம்ம ஸ்ரேயா.

* இந்த முறையும் விருதுக்கான நாமினேஷனுக்கு ஒவ்வொரு துறையிலும் சிறந்த படைப்பாளிகளை சைமா நடுவர் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. இதன்படி சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் என இரண்டு பிரிவில் கமல்ஹாசன் நாமினேஷன் ஆகியிருக்கிறார். சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் தனுஷ் நாமினேஷன் ஆகியிருக்கிறார். நடிகர் சிம்ஹா ‘சூது கவ்வும்’ படத்துக்காக சிறந்த துணை நடிகராகவும், ‘நேரம்’ படத்துக்காக சிறந்த வில்லன் நடிகராகவும் நாமினேட் ஆகியிருப்பது அழகிய முரண்.

* நடக்கப் போகும் மாபெரும் விருது விழாவுக்கு முன்னோட்டமாக சமீபத்தில் சென்னையில் ஒரு அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தியது சைமா. இதில் சிவகார்த்திகேயன், ராணா, நடிகைகள் குஷ்பு, நந்திதா, ப்ரணீதா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொள்ள, கலாய்ப்பும் கலாட்டாவுமாக நடந்தேறியது நிகழ்ச்சி.

* ‘‘விருது விழான்னா வட இந்தியாவுலதான் பிரமாண்டமா நடக்கும். தென்னிந்தியாவுல அப்படியெல்லாம் நடத்த முடியாதுங்கற நிலைமைதான் இருந்துச்சு. அந்த ஏக்கத்தை சைமா தீர்த்து வச்சிருக்கு. சைமா விருது விழா எப்படி நடக்கும்னு எனக்குத் தெரியும். எல்லா நடிகர், நடிகைகளும் குடும்பம் போல ஒண்ணா சேர்ந்து, செம ஜாலி அனுபவமாக இருக்கும்’’ என அறிவிப்பு விழாவில் ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார் குஷ்பு.

*  சைமா விருதுகளின் சிறப்பம்சமே இது ரசிகர்களால் தேர்ந்தெடுத்துத் தரப்படும் விருது என்பதுதான். இந்த முறையும் தங்கள் நடுவர் குழு தேர்ந்தெடுத்து இறுதி செய்த நாமினேஷன் பட்டியலைத் தன் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது சைமா. பொதுமக்கள் அந்த இணையப்பக்கத்துக்கு சென்று தங்களது கருத்துப்படி வெற்றியாளர் யார் என ஓட்டுப் போடலாம்.

வோட்டுப் போட...

siima.in என்ற இணைய தளத்துக்குச் செல்லவும். அதில், ‘சைமா 2014’ என்ற எழுத்துக்கள் இருக்கும் பக்கம் போனால், கீழே ஒரு பட்டியல் விரியும். அதில் ‘நாமினீஸ்’ என்ற இடத்தில் க்ளிக் செய்தால், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். (இதில் இயல்பாக தமிழ் திரையுலகுக்கான நாமினேஷன் பட்டியலே திறக்கும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை அதே பக்கத்தில் தனித்தனி டேப்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.)

இதில் தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரை மார்க் செய்த பிறகு, vote என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் ஓட்டு பதிவாகிவிடும். ரசிகர்களால் அதிக ஓட்டுக்கள் பெறும் கலைஞர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்படுவார்கள். உங்கள் ஓட்டுக்காக பெரும் நட்சத்திரங்கள் காத்திருக்கிறார்கள். கமான் ரசிகர்களே!

 அமலன்