அவன் அவள் unlimited



மாண்புமிகு கிசுகிசுக்கள்!

கிசுகிசு என்பது பேய்கள் நடத்தும் ரேடியோ!
 ஜார்ஜ் ஹாரிசன்

ரயிலில் நீண்ட தூரப் பயணம். எதிரில் அமர்ந்திருக்கும் அந்நியரிடம் நீங்கள் ஏன் முன்வந்து பேசவேண்டும்? ஈகோ இழுத்துப் பிடிக்க, இறுக்கம் காக்கிறீர்கள். ஒரு ஸ்டேஷனைக் கடக்கும்போது, சரியாக உங்கள் ஜன்னலுக்கு வெளியே, கிராமத்து மனிதன் ஒருவன் தன் மனைவியை அடிப்பதைப் பார்க்கிறீர்கள். ரயில் நகர்ந்து விடுகிறது. ஆனால், அந்தக் காட்சி மனதை விட்டு அகலவில்லை. ‘‘என்ன கேவலமான ஜென்மம் இவன்...’’  ஆரம்பிக்கிறார் எதிர் சீட்டு நபர். நீங்களும் ஆமோதித்துப் பேசத் துவங்குகிறீர்கள். அந்தப் பயணத்தில் உங்களுக்குப் புதிதாக ஒரு நண்பர் கிடைத்து விடுகிறார்.

இந்த நட்புக்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது, பெயரே தெரியாத அந்தக் ‘கேவலமான ஜென்மத்துக்கு’த்தான். அவர் மட்டும் பொது இடத்தில் தன் மனைவியை அடிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் உங்கள் பயணம் முழுவதையுமே தனிமையில் கழித்திருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் அந்த மனிதரைப் பற்றி புறம் பேசியிருக்கிறீர்கள். அவர் முன்னிலையில் நீங்கள் சொல்லியிருக்க முடியாத விமர்சனத்தை, சம்பந்தமே இல்லாத வேறொரு நபரிடம் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்.

இது அந்த நபருக்குத் தெரியப் போவதும் இல்லை; அவர் திருந்தப் போவதும் இல்லை. ஆனாலும் உங்கள் இருவருக்கும் இது பற்றிப் பேசப் பிடித்திருக்கிறது. யாரோ ஒருவரை வில்லனாக்கியதன் மூலம் நீங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டீர்கள்.

சொல்லப் போனால், ‘‘ஹலோ சார்... கிளாட் டு மீட் யூ’’ என சம்பிரதாயமாகத் துவங்கும் நட்பை விட, அடுத்தவரைக் கழுவி ஊற்றுவதற்காகத் துவங்கும் இப்படிப்பட்ட நட்பு உறுதியாக இருக்கும் என்கிறது உளவியல். ‘போக விட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்பது எல்லா இடங்களிலும் பொருந்தாது பாஸ். சில சமயம்... ஏன், பல சமயங்களில் புறம் பேசுதல் நல்லது.

‘‘அடுத்தவரின் கதைகளைக் கேட்பது நம் எல்லோருக்குமே பிடிக்கும். அது நம் இயல்பு. பெண்களிடம் அது கொஞ்சம் அதிகம் இருப்பது உண்மைதான்’’ எனத் துவங்குகிறார் எரிக் மில்லர். குழந்தைகளுக்கு கதை சொல்வதற்காகவே சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியொரு அமைப்பை நிறுவியிருப்பவர் எரிக்.

‘வேர்ல்டு ஸ்டோரி டெல்லிங் இன்ஸ்டிடியூட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, சென்னை முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் நடத்தி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. கதை கேட்பதற்கும் சொல்வதற்கும் ஆண் குழந்தை களை விட பெண் குழந்தைகளே அதிகம் ஆர்வத்தோடு இருப்பதை தன் அனுபவம் மூலம் சுட்டிக் காட்டுகிறார் எரிக்.

‘‘பெண்களுக்கு தங்கள் பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஆபத்தையும் அவர்கள் வரும் முன் காக்க நினைப்பார்கள். தன் சொந்த அனுபவத்திலிருந்துதான் பாடம் கற்றுக்கொள்வேன் என்றால் ஒரு மனிதன் எப்போது புத்திசாலி ஆவது? அடுத்தவர் அனுபவத்திலிருந்தும் பாடம் கற்க உதவுகின்றவைதான் ‘அடுத்த வீட்டுக் கதைகள்’. ‘வம்பு பேசுவது’ என நாம் ஏளனமாகக் குறிப்பிட்டே அதைத் தவறாக்கி விட்டோம்’’ என்கிறார் எரிக் உறுதியாக.

‘வி.ஐ.பி’ படத்தில் மெகா சீரியல் பார்த்தபடி ஹீரோயின் அம்மா சொல்வார்... ‘‘என் பொண்ணுக்கு மட்டும் இப்படியொரு மாமியார் வாய்ச்சா, ‘பேசாம வந்துருடீ’ன்னு சொல்லிடுவேன்!’’

‘‘கரெக்ட்! அடுத்தவர் பிரச்னைகளை அலசும்போதே, இதே பிரச்னை நமக்கும் வந்தால் நாம் என்ன செய்வோம் என்ற கணக்கை மனம் போட்டு விடுகிறது. பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இதனால் வளருகிறது. ஸோ, பக்கத்து வீட்டு கதைகளைப் பேசுவதற்காகவோ மெகா சீரியல் பார்ப்பதற்காகவோ பெண்களைக் குற்றம் சாட்டாதீர்கள்!’’  இந்த கதை சொல்லி குழுவினரின் வாதம் இது.ஆனால், அடுத்த வீட்டுக் கதையில் ‘கிசுகிசு’ என்பதும் உள்ளடக்கம்.

அதாவது, சம்பந்தப்பட்ட நபர் வெளியிட விரும்பாத அவரின் பர்சனல். இதைத் தோண்டித் துருவுவதும் பரப்புவதும் அநாகரிகம் என்பார்கள். ஆனால், மனித இயல்பு ரூல்ஸ் அறியாது. காலம் காலமாக பத்திரிகைகளில் அத்தியாவசிய ‘காலம்’, கிசுகிசுதான்! அதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி! பொதுவாக கிசுகிசுக்களை பெண்களின் ஃபேவரிட் என்பார்கள். கிளீவ்லேண்டைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஜோ ராக், கிசுகிசுக்களைப் பற்றி எக்ஸ்குளூஸிவ் ஆராய்ச்சிகள் செய்தவர். ‘கிசுகிசுக்களைப் பகிர்வது, மனிதர்களிடையே நட்பை உறுதிப்படுத்தும்’ என ஆய்வு செய்து சொன்னவர் இவர்தான்.

‘‘ஒருவர் இல்லாதபோதுதான் அவரைப் பற்றி நாம் சுதந்திரமாகப் பேச முடியும். அவரின் காதல் கசமுசாக்களை அலச முடியும். ‘சரியான மாங்கா மடையன்’ எனப் பட்டம் கொடுக்க முடியும். ‘தைரியம் இருந்தால் நேரில் பேச வேண்டியதுதானே’ என சில ஆண்கள் வீம்பாகப் பேசுவார்கள். இதையெல்லாம் நேரில் பேசினால், சண்டைதான்; அடி, உதைதான்; போர்க்களம்தான். இந்த உலகில் எல்லோரைப் பற்றியுமே பேச கிசுகிசுக்கள் இருக்கின்றன.

அவர்கள் முன்னால்தான் அதைப் பேசுவேன் என்றால், யாருமே யாருக்குமே நண்பர்களாக முடியாது’’ என்கிறார் ஜோ ராக். சரி, பெண்களுக்கு அடுத்த வீட்டு கிசுகிசுக்கள் பிடிக்கும். ஆண்களுக்கு? அவர்களுக்கும் பிடிக்கும். அந்த கிசுகிசு அந்த வீட்டுப் பெண்கள் பற்றியதாக இருக்கும் வரை. கொக்குக்கு குளம் தெரியாது...

அதிலிருக்கும் பாசி தெரியாது... மீன் மட்டுமே தெரியும். அப்படித்தான் ஆண்களும். அப்சரஸே மனைவியாக இருந்தாலும் பக்கத்து வீட்டு பாஸ்பரஸ் உரசினால் பற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அதற்காக ஆர்வத்தோடும் காத்திருக்கிறார்கள்.

‘என்ன இப்படிச் சொல்லிட்டீங்க’ என்று பாயாதீர்கள். இயற்கையான மனிதனுக்கும் செயற்கையாக நாம் உருவாக்கி வைத்திருக்கும் சட்ட திட்டங்களுக்கும் இடையே ஒரு குருக்ஷேத்திரம் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

 ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்செப்ட்டும் அப்படித்தான். இயற்கையிலேயே மனிதன் ஒரே இணையோடு வாழ்வு முழுக்க வாழக் கூடியவனா என்பதில் அறிவியலாளர்கள் எல்லோருக்குமே மாற்றுக் கருத்து உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நாம் ‘தங்கப்பதக்கம்’ எஸ்.பி. சௌத்ரி மாதிரி ஸ்டிரிக்ட்டாக கடைப்பிடித்தால், விதவை மறுமணம் கூட கேள்விக்குரியதாகிவிடும்.

‘‘செக்ஸைப் பொறுத்தவரை ஆண்கள் வெரைட்டி தேடுகிறார்கள். விதவிதமான பெண்களை ரசிக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால், ‘ப்ரேக் த ரூல்ஸ்’ என காம்பவுண்டு தாண்டிக் குதிக்க அவர்கள் ரெடி. ஆனால், மனைவி, குடும்பம் என்ற அமைப்பைக் குலைக்க அவர்கள் விரும்புவதில்லை. இதுவே ஆண்களின் தலையாய குழப்பம்!’’ என்கிறார் அமெரிக்க சமூகவியலாளரான எரிக் ஆண்டர்சன். அப்படியானால் ஆண்களில் ராமன் கிடையாதா? தேடுவோம்...

‘‘புதுசா எதிர் ஃப்ளாட்டுல ஒரு ஃபேமிலி வந்திருக்கு. அவங்க வீட்ல கார் இருக்கு, ப்ளே ஸ்டேஷன் இருக்கு. அந்தம்மாவுக்கு பேங்க்லயும், வீட்டுக்காரருக்கு
இன்சூரன்ஸ்லயும் வேலை. காலேஜ் படிக்கிற அவங்க பொண்ணு தான் சொன்னா. அப்புறம்...’’

பொண்ணு அழகா இருக்குமா?

நீங்கள் யார்?


நம்மூரில் இது குப்புறப் படுப்பது. ஆங்கிலத்தில் ‘ஃப்ரீ ஃபால் ஸ்லீப்பிங்’ என்கிறார்கள். தூக்கவியல் ஆய்வுகளின்படி இப்படித் தூங்குகிறவர்கள் உலகில் 7 சதவீதம் பேர். பொதுவாக இவர்களுக்கு அதீத திறமைகளும் தன்னம்பிக்கையும் உண்டு. அதனாலேயே கடுமையான மனிதர்களாகத் தெரிவார்கள். ஆனால் உள்ளுக்குள் மிக மென்மையான மனதிருக்கும். விமர்சனங்களை விரும்பாத இவர்கள், எதிலுமே உச்சபட்ச நிலைக்குப் போக விரும்ப மாட்டார்கள்.

கோகுலவாச நவநீதன்