இரும்பு குதிரை



அதர்வா தன் கனவாகக் கொண்டிருக்கும் பைக்கிலேயே ஒரு விபத்தில் அப்பாவை இழக்க, திரும்பவும் காதலியால் பைக் மீது காதல் வர, அப்புறமும் வருகிற சோதனைஅடிதடிபைக் ரேஸ்... இதுதான் இரும்பு குதிரை. பெரும்பாலும் புதுச்சேரியிலே சுற்றித் திரிகிறது இந்த ‘இரும்பு குதிரை’!

பைக்கை ‘இரும்பு குதிரை’யாக வர்ணித்த அழகே வசீகரிக்கிறது. நிச்சயமாக வேறு வகையான படம் என நம்பி உள்ளே வர வைத்த அறிமுக இயக்குநர் யுவராஜ் போஸுக்கு பாராட்டுகள். ஆனால், அதை கடைசி வரைக்கும் சாமர்த்தியமாக கொண்டு வந்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்! பைக் ரேஸிங் என முரட்டு பைக்குகளில் அதர்வாவை உட்கார வைத்து விளம்பரங்களில் பயன்படுத்திவிட்டதால், நாம் நினைத்துப் போனது வேறாகிய உணர்வு ஏற்படுகிறது.

‘பரதேசி’க்குப் பிறகு அதர்வாவை எதிர்பார்த்து நிற்கிற தருணமிது. பைக் ரேஸாக அவரை யோசித்து வைத்திருந்தால், மனிதர் காதலில் பின்னுகிறார். வருகிற செய்திகள் உண்மையா இல்லையா தெரியாது. ஆனால், ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதர்வாப்ரியா ஆனந்த் கெமிஸ்ட்ரி அடி பின்னுகிறது. வெறும் நண்பராகவே அதர்வாவை நினைத்திருப்பதாக ப்ரியா ஆனந்த் தரும் ட்விஸ்ட் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் புதுசு. அதற்கடுத்து அதர்வா முரட்டுப் பையன்களோடு டாஸ்மாக் பாட்டு பாடாதது பெரும் ஆறுதல்.

‘பைக்கோடு இத்தாலியில் கோர்ஸ் செய்தார் அதர்வா’ என்ற செய்திக்கு படத்தில் தேடித் தேடிப் பார்த்தும் எந்த ஆதாரமும் கிடைத்தபாடில்லை. அப்பாவாக ரகுவரன் போட்டோவைக் காட்டினாலும், அப்பாவின் இழப்பை நம்மில் உணர வைக்காதது பெரிய குறை. ப்ரியா ஆனந்த், அழகு. பிரமாதமான காஸ்ட்யூமில் ஃபாரின் லொகேஷன்களில் அசத்துகிறார். பாடல் வரிகளையும் இசையையும் கூட மறக்கடித்து கிறங்கடிக்கிறது அவரின் வனப்பு. காதலுக்குரிய மேனரிசங்களை அள்ளித் தருவதிலும் அனாயாசமான நடிப்பு.

காதலும் வலிமை இல்லாமல், பைக் ரேஸ் பின்னணியும் இல்லாமல் நம்மைத் தவிக்க விட்டது தான் மைனஸ். ‘ஏழாம் அறிவி’ல் மிரட்டிய ஜானியை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். அவரின் அழகான ஸ்டைல் சண்டைக்கு ஒரே ஒரு ஃபைட் பத்தாது. புதுச்சேரியின் தெருக்களும், அழகும் கண்ணில் நிற்கிறது.

திடீரென ப்ரியா ஆனந்தை ஜானி கோஷ்டி கடத்துவதில் சூடு பிடிக்கிறது க்ளைமாக்ஸ். ஆனால், ஏன் கடத்த வேண்டும்? எதிர்பார்க்கப்பட்ட கடைசி ரேஸ் காட்சிகள் கிளப்பியிருக்கும் சூட்டை ஆரம்பத்திலிருந்து கொண்டு வந்திருக்கலாம். ஒரு பகுதி வெளிநாட்டிலும் மீதிப்பகுதி இங்கே தொடர்வதிலும் நிறைய குழப்பங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் சுறுசுறுப்பான அடுத்த காட்சிக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இருந்தாலும், படம் முழுக்க கட்டுமஸ்தாக அணிவகுக்கும் விதவித பைக்குகள்... அடேங்கப்பா. ஆளுக்கொரு பகாட்டியோடு வலம் வந்து, ‘இரும்பு குதிரை’ என்ற டைட்டிலுக்கு வலு சேர்க்கிறார்கள்.

எல்லா காட்சிகளுக்கும் ஒருவித ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறது குருதேவின் கேமரா. குறிப்பாக வெளிநாட்டுப் பாடல் காட்சிகளில் கேமரா கொண்டாட்டம் ஸ்பெஷல். மெலடியில் மனம் வருடும். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். அவருமே பின்னணியில் திணறுவது கண்கூடு. ஆரம்பத்திலிருந்தே ஸ்பீட் எடுத்து, டாப் கியரில் பயணித்திருந் தால் நிச்சயமாகக் கவர்ந்திருக்கும் இந்த ‘இரும்பு குதிரை’.

குங்குமம்
விமர்சனக் குழு