
*உன்னையும் 
என்னையும் 
தூக்கிச் சுமக்கிற 
பூமிக்கு  
கொஞ்சமும் 
சளைத்ததில்லை 
நம் மௌனத்தின் 
கனம் 
*என்னை எனக்கு 
பிடிக்காது 
உன்னை உனக்கு 
பிடிக்காது 
நம்மை ஊருக்குப் 
பிடிக்காது 
நம்மைப் 
பிடித்திருக்கிறது 
எப்போதுமே நமக்கு 
*நமக்கான 
இடைவெளிகளில் 
நுழைந்து பார்க்கின்றனர்
பல பேர் 
அவர்களுக்கு 
எப்படித் தெரியும் 
நாம் 
தனித்தனியே நிற்கும் 
ஒருவரென்று...
*உன்னிடம் சொல்லவே 
சேர்த்து வைத்திருக்கிறேன் 
ஆயிரம் கனவுகளை 
உன்னிடம் சொல்லவே 
கோர்த்து வைத்திருக்கிறேன் 
ஆயிரம் கவிதைகளை 
நீ கேட்கவே 
மாட்டாய் என்று தெரிந்தும் 
இன்னும் சொன்னால் 
கேட்டாலும் கேட்காதது மாதிரி 
போவாய் 
போ... போ...
கவிதைக்கும் கனவுக்கும் 
காத்திருக்க 
கால் வலிக்கவா போகிறது?
ஆதி.சரவணன்