இது பவுடர் பூசாத அசல் கிராமம்!



சமுத்திரக்கனி பெருமிதம்

‘‘ஒவ்வொரு மனுஷனும் ஒரு கதை... அவனோட கனவுகள், ஆசை, நிராசை, கொண்டாட்டம் எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும், அழகுமே எழுதி மாளாது... சினிமாவாக எடுத்தும் தீராது. நிறைய படிச்சிட்டோம் என்பதோ, நிறைய சினிமா எடுத்துட்டோம் என்பதோ விஷயமே இல்லை.

எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள் ஒரு மாற்றம் நிகழ்த்தணும். இந்த உள்மாற்றம்தான் மனவிசாலம். என் ‘கிட்ணா’ அப்படிப்பட்டவன். என்னைச் சீண்டாத எதையும் நான் இப்போது சினிமாவாக எடுப்பதில்லை!’’ - தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. நம்பகமான இயக்குநர் - நடிகராக வலம் வருபவர்.
‘‘ ‘கிட்ணா’ உங்கள் கனவுப் படைப்பாக வளர்கிறது போலிருக்கே...’’.

‘‘மண் சார்ந்த அசல் கதை இது. மனிதாபிமானத்தோட உச்சம்தான் ‘கிட்ணா’. இப்ப எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு. மனுஷங்க ரோட்ல அடிபட்டுக் கிடந்தா ‘ஐயோ’ன்னு சொல்ல ஆள் இல்லாம போயிடுச்சு. வேகமா காலமும் மனுஷங்களும் போய்க்கிட்டு இருக்காங்க. அவ்வளவு வேலைகள், பிரச்னைகள், யோசனைகள்னு மருகிக்கிட்டு இருக்கோம். ஆனா, எல்லோரும் அப்படிக் கிடையாது.

அடிபட்டவங்களை தட்டிக் கொடுத்து, ‘பார்த்து வரக்கூடாதா’ன்னு பதவிசா சொல்லி, தவற விட்டதை எடுத்துக்கொடுத்து அனுப்பியும் வைக்கிறாங்க. கொஞ்சம் ஆபத்து அதிகம்னா ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிட்டுப் போய், போன் பண்ணி சம்பந்தப்பட்டவங்க வர்ற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்கிறவங்க இப்பவும் சிலர் உண்டு. அப்படிப்பட்ட மனசுள்ளவன் கிட்ணா.

‘கிட்ணா’ 1975ல் ஆரம்பித்து 2015 வரைக்கும் போகிற கதை. அதற்கான எனது மெனக்கெடல் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நல்ல படம் பார்க்கிற அனுபவத்தோடு முடிஞ்சுடக் கூடாது. அது பார்த்தவரின் மனதில் தொடர்ந்து வளரணும். மற்றவர்களை நோக்கி ஒரு புன்னகை, ஒரு கையசைப்பு, ஒரு கைப்பற்றுதல் கூட இல்லாமப் போயிடுச்சே என்ற ஏக்கம்தான் இந்தப் படம்!’’‘‘ரொம்பத் தீவிரமா செயல்படுறீங்க போலிருக்கே..!’’

‘‘இந்தப் படத்திற்காக போய் போட்டோ செஷன் எடுக்கும்போதே உணர்ந்தேன். இப்போதும் பவுடர் பூசித்தான் கிராமத்தைக் காட்டுறோம். ஆனா நிஜமான கிராமம் இன்னமும் வெளியே வரலை. இங்கே, வயல்காடுகளுக்கு நடுவிலே வாழக்கூடிய மக்களின் சதவீதம் 40. ஆடு மேய்க்கிறவங்க இதில் அதிகம். அவங்க உலகம் வேறு. இதைத்தான் தமிழ்ச்செல்வி ‘கீதாரி’ன்னு நாவலா எழுதியிருந்தார்.

அது படித்ததிலிருந்தே மனதிற்குள் தங்கிருச்சு. அதை சில மாற்றங்களோடு திரைக்கதையாக மாத்திட்டா அப்படியே பெரும் படைப்பா எழுந்து நிற்கும். நாவலை நாம கையகப்படுத்தணும். சில நாவல்கள் சரியா அப்படிச் செய்யப்படாதபோதுதான் தோல்வியை எட்டுது. ஒரு வண்ணத்துப்பூச்சியை அறிய என்ன வழி? அதை பின்தொடர்ந்து காத்திருக்க வேண்டியதுதான். எனக்கு கலையும் சினிமாவும் அப்படிப்பட்டதுதான்!’’‘கிட்ணாவின் கதைக்களம் எங்கே?’’

‘‘அது பெரிய ஏரியாவில் பரந்து இருக்கு. ராமநாதபுரத்தில் ஆரம்பிச்சு விழுப்புரம் வரைக்கும் வருது. அதில் உயிரைக் குடிக்கிற வெயிலும் இருக்கு. மண்டையில் கொதிச்சு இறங்கியிருக்கிற வெயிலை நீங்கள் என்னோட ஃப்ரேமில் பார்க்க முடியும். அப்புறம் புழுதி பறக்கிற காத்தும் இருக்கு. கண்ணை உறுத்தி, மூக்கில் நுழைஞ்சு அது என்ன பண்ணினாலும் இங்கே உள்ள ஜனங்களுக்கு அதைப் பார்த்தால் எந்தக் கோபமும் வராது. அப்புறம் அடிச்சுப் பெய்கிற மழையும் இருக்கு. எல்லா காலத்திலும் நடக்கிறதால் ‘கிட்ணா’ நிச்சயம் இந்த வருஷம் கிடையாது.

சூழலே கதை சொல்கிற படமாகவும் இருக்கும். ‘கிட்ணா’வில் சிலம்பம் பெரிய பகுதியா வரும். தன்ஷிகா சிலம்பத்தை உயிராகப் பழகி நடிச்சிருக்காங்க. அந்தப் பொண்ணு வேற இடத்திற்குப் போயிருக்கணும். ஆனால், இங்கே கமர்ஷியல் சினிமா யாரையோ தூக்கிக்கொண்டு போய் உயரத்தில் வைக்குது.

எனக்கு படத்தில் மண்ணின் வாசமும், மனிதனின் சாயலும் இருக்கணும். புது மழை பெய்த மாதிரி வாசனையை படம் பார்க்கும்போதே உணரணும். விவசாயியின் பசித்த பெருவயிறு கோவணத்திற்குக் கீழே இறங்கிக் கிடக்கிற உண்மையை நீங்க இதில் பார்க்கலாம்!’’

‘‘அடிக்கடி நடிக்கப் போயிடுறீங்க..?’’‘‘எங்கே விடுறாங்க... இழுத்துட்டுப் போயிடுறாங்க. எல்லோரும் தம்பிகள். ஒரு இடத்திற்கு வர வாழ்க்கையைக் கொடுத்திட்டு ஏங்கி நிக்கிறாங்க. அவங்களுக்கு உதவாம எப்படி? நானும் அப்படி வந்த பயதானே?! பெரிதினும் பெரிதுன்னு சொல்வாங்களே, அப்படி எதையும் செய்யலை. சும்மா நடிக்கிறேன். வெற்றிமாறனின் ‘விசாரணை’யில் நடிக்கிறேன். அப்படி ஒரு படம்.

அதிரடியாய் ஒரு வேஷம். ஆம்பிளைத்தனமா இருக்கும். மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கும். இந்த ஆண்டின் மிகப்பெரிய பதிவு. போலீஸ் சிஸ்டத்தை விலாவாரியாக, அச்சுப் பிசகாமல், உண்மையா மூஞ்சிக்கு நேரே சொல்லும். அப்படி ஒரு அருமையான படத்தில் எனக்கு பங்கு இருக்குறது நல்ல விஷயம்தானே!

‘விசாரணை’யோட க்ளைமேக்ஸ், சும்மா பதறும்... இப்படியும் நடக்குமான்னு மனசும் ரத்தமும் கொதிக்கும். வெளிநாடுகளுக்கு விருதுக்கு போயிருக்கு. நிச்சயமா நான்கைந்து விருதுகளை அள்ளிக்கிட்டு வந்துடும். பிசாசுகளும், காமெடியும் ஆட்சி நடத்துற இந்த சீசனுக்கு ‘விசாரணை’ பெரிய திருப்பம்!’’‘‘என்னங்க, சசிகுமார் கூட்டணி என்னாச்சு?’’

‘‘எங்கே பார்த்தாலும் பேசுவோம். திடீர்னு சந்திப்போம். தவளைகள் சாட்சியாக பேச நினைத்ததை எல்லாம் பேசித் தீர்த்த நாளுண்டா? நான் அவனுக்காக கதைகள் வச்சிருக்கேன். நாளைக்கு அவன் வர்றேன்னு சொன்னால், இன்னிக்கே நான் ஷூட்டிங்குக்கு ரெடி. அவனுக்கும் சில கமிட்மென்ட்ஸ்; எனக்கும் அப்படியே. சேர்ந்தால் நல்லாத்தான் இருக்கும்!’’‘‘சாட்டை 2வும் ஆரம்பிச்சிட்டீங்க..!’’

‘‘ஆமா, ‘கிட்ணா’ இடைவெளியில் என்ன பண்றது..? எங்கே பார்த்தாலும் ‘சாட்டை’யை சுழற்றுங்கள்னு சொல்றாங்க. எங்க பிரச்னையை யார் சொல்றதுன்னு குழந்தைகள் கேட்கறாங்க. பெற்றோர்கள் காவலாளிகளா மாறிப் போயிட்டாங்க. பிள்ளைகள் என்ன அடிமைகளா? நீங்கள் என்ன சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துட்டீங்க... பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்ண? எனக்குத் தெரியாத பல விஷயங்கள் ஸ்கூல் படிக்கிற என் பையனுக்குத் தெரியுது. அவனைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறதுல எனக்கு என்ன ஈகோ? நூறு விஷயம் சொல்றான்.

நெட்டுக்குள்ள புகுந்தா லட்சம் விஷயங்கள் எடுத்துக் கொடுக்குறான். கம்ப்யூட்டர்ல புகுந்து புறப்படுறவனை 40 மார்க் வாங்கியிருக்கான்னு திட்ட முடியுமா? எது வருதோ அதைத்தான் செய்ய விடணும். முடிந்தால் உதவி செய்யுங்கள்... இல்லா விட்டால் வழிவிடுங்கள். இங்கே சராசரியானவர்களே அதிகம் சாதிச்சிருக்காங்க.

டெண்டுல்கர், கலாம், பில் கேட்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான்னு பட்டியல் நீளும். நடுவில் அட்வைஸ் பண்ணிக் குவிப்பது கொடுமையான ஏரியா! ‘சாட்டை 2’ பெற்றோர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பும். குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இதுதான் படம்!’’

- நா.கதிர்வேலன்