நாலு போலீசும் இமேஜ் பார்க்காத அருள்நிதியும்!



‘‘இவ்வளவு பெரிய தலைப்பான்னு யோசிக்காதீங்க. நிறைய டைட்டில் எழுதி வச்சிருந்தோம். தயாரிப்பாளர் இன்னும் நல்லதா வேணும்னு நினைச்சார். பிறகு வந்ததுதான் `நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’. இந்தத் தலைப்பே கொஞ்சம் கதையை அதுவா சொல்லுமே... யாரையும் துன்புறுத்தாமல், கேலி பண்ணாமல், மலினப்படுத்தாமல், ஒரு காமெடி படம் இருந்தால் எப்படியிருக்கும்?

அப்படி ரசிச்சு, சந்தோஷமா பார்க்க ஒரு படம்தான் இது. இதற்கு முன்னால் இப்படி ஒரு க்ளீன் இமேஜ் கொண்ட காமெடியைப் பார்த்திருக்க முடியாது!’’ - தெளிவாகப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் கிருஷ்ணா. ‘டிமான்டி காலனி’க்குப் பிறகு டிமாண்டாகிப் போன அருள்நிதியோடு அடுத்ததாய் களமிறங்குபவர்.

‘‘இப்போ இருக்கிற சீசனுக்குத் தகுந்த மாதிரி படமா இது ?’’‘‘நமக்கு இருக்கிற வறுமை, ஏழ்மை, சோகம், கஷ்டம், துக்கம் இது எதுவும் நம்மை வாழ்க்கையிலிருந்து ஒரு இன்ச் கூட நகர்த்தாது. ஆனா இந்த சிரிப்பு இருக்கே, வாழ்க்கையில் அவ்வளவு நம்பிக்கையை உண்டாக்கும். `நாலே பேர்’ அந்தக் கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷனில் வேலையில் இருப்பாங்க. அவங்க வெளியூர் கூட இல்ல.

அதே ஊர்தான். எந்தக் குற்றமும், பிரச்னையும் இல்லாத அந்த ஊரில் நாலு பேர் தினமும் ஆக்டிவா ரவுண்ட்ஸ் போய், ரிப்போர்ட் எழுதி வச்சா எப்படி யிருக்கும்? ஸ்டேஷனில் சீட்டாடிக்கிட்டு, கிரிக்கெட் பார்த்துக்கிட்டு, கேம் விளையாடிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா நீங்க..? 25 வருஷமா எந்தக் குற்றமும் நடக்காத காரணத்தால் குடியரசுத் தலைவர் வரைக்கும் போய் பாராட்டுப் பத்திரம் வாங்கிட்டு வந்த கிராமத்தில் அவர்களுக்கு என்னதான் வேலை?

எந்த வேலையும் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக்கிட்டு இருக்கிற வேடிக்கை எப்படியிருக்கும்? இந்தப் படத்தோட குதூகலமே அதுதான். அப்படி இருந்த ஊரில் எல்லோருக்குமா சேர்த்து ஒரு தகவல் வரும். ‘அது என்ன? அதுல உள்ள சிக்கல் என்ன’ங்கிறதுதான் பிரச்னை. இந்த சிச்சுவேஷன் காமெடியை உங்களால் மறக்கவே முடியாது!’’ ‘‘நாலு பேரோடு ஹீரோ அருள்நிதி எப்படி?’’

‘‘அதுதான் அருள்நிதி. அவ்வளவு பெருந்தன்மையான மனசு. கதைக்குத் தேவையானால் இமேஜ், இடம், தான் தான் முழுக்க வரணும்னு எதையும் நினைக்க மாட்டார். ‘கடைசியில் கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டால், நான் நடிச்ச நல்ல படங்களின் வரிசை இருக்கணும்’ என்று நினைக்கிற அழகு. அவருடைய முந்தைய படங்களைப் பார்த்தாலே தெரியுமே. ஆனால், இதில் முக்கிய திருப்பங்கள் அவரால்தான் வருது. ஹீரோ ஒருத்தருக்கு காமெடி வர்றது எல்லாம் கஷ்டம்.

ஆனால், அருள்நிதிக்கு அது சுலபமா வந்து நிக்குது. ‘மௌனகுரு’ பார்த்தீங்கல்ல... அது வேறொரு அருள்நிதி. நாலு போலீஸ்காரங்களா அருள், சிங்கம்புலி, பக்ஸ், ராஜ்குமார் நாலு பேரும் நடிக்கிறாங்க. தியேட்டருக்கு வந்தா இந்தப் பெயர் வச்சதுக்கான நியாயங்கள் நிச்சயமா புரியும். மத்தபடி முழு நீள நகைச்சுவைப் படத்துக்கு இந்தத் தலைப்பு கூட பப்ளிசிட்டிதானே!

குட்டியா, ஒரே ஒரு மெசேஜ் மட்டும் இருக்கு. `எந்தச் செயலையும் நல்லா யோசிச்சிட்டு செய்யுங்க. ஒவ்வொரு செயலுக்கும் உயிர் இருக்கு’. இதுதான் அந்த செய்தி. அதுவும் கூட புத்திமதி மாதிரி சொல்லாமல், பாஸிங்ல சொல்லிட்டுப் பறக்குறோம். கொடுக்கிற காசுக்கு சிரிக்க வைக்கிறதுதான் முதல் வேலைன்னு முடிவு பண்ணிட்டோம். அதற்கு நான் கேரன்ட்டி!’’ ‘‘ஹீரோயின் பத்தியும் பேசலாமே...’’

‘‘ரம்யா நம்பீசன். அப்படியே ஒரு அழகான டீச்சரை கண் முன்னாடி நிறுத்தியிருக்காங்க. அவங்களை ரொம்பவும் மனப்பூர்வமா நேசிக்கிறார் அருள்நிதி. அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் கனவுலகில் புகுந்துடுவார். அவங்க ரெண்டு பேரும் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைச்சிருக்காங்க.

காதலும், காதல் நிமித்தமும்னு சொல்வாங்க... அதுக்கு சரியான உதாரணம் அருள்நிதியும், ரம்யாவும். `களவாணி’ திருமுருகன், யோகி பாபு ரெண்டு பேருக்கும் இதில் கச்சிதமான இடங்கள் இருக்கு.’’ ‘‘இசை எப்படியிருக்கு?’’

‘‘ரஜின்னு ஒரு புது மியூசிக் டைரக்டரை இதில் இறக்கியிருக்கோம். நல்ல பாடல்கள் கொடுத்திருக்கார். `மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே’ன்னு ஒரு பாட்டு வருமே, அதே ஸ்டைலில் `என்ன நடக்குது ஏது நடக்குது ஒண்ணும் புரியலை...

எவெரவர் மனசில் என்னென்ன இருக்குனு உலகம் அறியலை’னு ஒரு பாட்டு வருது. இந்தக் கால சூழலுக்கு மனசை அள்ளுற தத்துவம். கேமரா மகேஷ் முத்துசுவாமிக்கு அறிமுகம் தேவையில்லை. அமைதியா, யதார்த்தமா படத்தை கொண்டு போறதில் அவரை மிஞ்ச முடியாது. ‘வல்லின’த்தில் தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்தான் எடிட்டர். மனம் திறந்த காமெடிதான் இந்தப் படத்தின் ஒன்லைன்... முழுலைன் எல்லாம்!’’

- நா.கதிர்வேலன்