தெலங்கானாவில் ஒரு திருப்பதி!



ஆந்திராவையும் தெலங்கானாவையும் இரண்டாகப் பிரித்தபோது திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆந்திராவுக்குப் போய் விட்டது. என்னதான் தலைநகரம் ஐதராபாத் தங்கள் பக்கம் வந்தாலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திருப்பதியை இழந்ததில் ஆதங்கம் தாளவில்லை. உலகிலேயே அதிக செல்வம் கொழிக்கும் தலம், இந்த பூமியிலேயே அதிகம் பேர் வந்து வழிபடும் பிரார்த்தனைத் தலம் என எத்தனை பெருமைகள் திருப்பதிக்கு! அதனால்தான் தெலங்கானாவிலும் ஒரு திருப்பதியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவர்.

ஐதராபாத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் யதாகிரிகுட்டா ஆலயம் உள்ளது. நல்கொண்டா மாவட்டத்தில் இருக்கும் 900 ஆண்டுகள் பழமையான இந்த லட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயமே விரைவில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தப் போகிறது. ஜீயர்களின் ஆலோசனைப்படி இந்தக் கோயிலுக்கு யதாத்ரி எனப் பெயர் சூட்டி, வளர்ச்சிப் பணிகள் வேக வேகமாக நடக்கின்றன.

ஒரு சிறிய குன்றின்மீது இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் இருக்கும் வட்டாரத்திலேயே மேலும் எட்டு குன்றுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து, ஏழுமலையானுக்குப் போட்டியாக ஒன்பது மலைகளோடு ஒரு கோயில் நகரம் அமையப் போகிறது. ஐதராபாத்திலிருந்து இங்கு செல்வதற்கு நான்குவழிச் சாலை, மலையில் ஏறுவதற்கு அகலமான சாலைகள், பக்தர்களுக்கு திருப்பது போலவே வசதிகள், அங்கு இருப்பது போலவே தரிசன முறைகள் என எல்லாவற்றையும் திட்டமிடுகிறார்கள்.

கூடவே இந்த ஆலயமும் புதுப்பொலிவு பெறுகிறது. புகழ்பெற்ற தெலுங்கு திரைப்படக் கலை இயக்குனர் ஆனந்தசாய், அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள சாயிபாபா கோயிலை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் இந்த ஆலயம் புதுப்பொலிவு பெறப் போகிறது.

திருப்பதியைப் போலவே பழமையும் பாரம்பரியமும் உள்ள யதாத்ரி ஆலயத்துக்கும் திருப்பதிக்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. திருப்பதி கோயிலுக்கு வார நாட்களில் தினமும் 60 ஆயிரம் பேர் வழிபட வருகிறார்கள். யதாத்ரிக்கு 5 ஆயிரம் பேர் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் திருப்பதியில் தரிசனம் செய்ய 85 ஆயிரம் பேர் வருகிறார்கள்.

யதாத்ரிக்கு 20 ஆயிரம் பேர் வந்தாலே பெரிய விஷயம். கடந்த ஆண்டில் திருப்பதி ஆலயத்தின் உண்டியல் வருமானம் மட்டுமே 907 கோடி ரூபாய்; யதாத்ரிக்கு 11 கோடி ரூபாய் மட்டுமே!ஆனாலும் ‘தெலங்கானாவின் பெருமை’ எனச் சொல்லி, 1500 கோடி ரூபாய் செலவில் ஆலயம் பொலிவுபெறும்போது திருப்பதிக்கு இணையாக யதாத்ரி ஆகும் என நம்புகிறார் ராவ்.

- லோகேஷ்