வெளிப்படை



நிவேதாவுக்கு 24 வயதில் ஒருமுறை திருமண ஏற்பாடுகள் எல்லாம் பிரமாண்டமாக நடந்தபின் கல்யாணம் நின்றுபோனது. அதனாலேயே 30 வயது

வரையிலும் வரன் அமையவில்லை. ‘‘அடியே, இந்த மாப்பிள்ளையாவது கல்யாணம் நின்னு போனது தெரியாம சம்மதம் சொல்லட்டும். நீயா பழசைப் பத்தி மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட உளறி வைக்காதே!’’ என்று மகளை எச்சரித்து வைத்தாள் நிவேதாவின் அம்மா.நினைத்தது போலவே நிவேதாவை மாப்பிள்ளை வீட்டாருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ‘‘நிச்சயதார்த்தத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம்?’’ என்றார்கள்.

‘‘ஒரு நிமிஷம்!’’ என்ற நிவேதா, நின்றுபோன தனது கல்யாணத்தைப் பற்றி ஒரு வார்த்தை விடாமல் சொல்லி முடிக்க, தலையில் அடித்துக்கொண்டாள் அம்மா.
‘‘அப்படின்னா நீதாம்மா எங்க வீட்டு மருமக!’’ என்றாள் மாப்பிள்ளையின் அம்மா. அனைவரும் புரியாமல் விழிக்க,

‘‘எங்க பையனுக்கும் 27 வயசுல கல்யாண ஏற்பாடு பண்ணி நின்னுபோச்சு. அதனால எல்லாரும் பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்களேன்னு, நாங்க அந்த உண்மையை மறைக்கலாம்னு நினைச்சோம். ஆனா நீ எதையும் மறைக்காம உன்னைப் பத்திச் சொல்லி எங்களை வெட்கப்பட வச்சிட்டே. இந்த உண்மைதான் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!’’ என்றாள் நிவேதாவின் வருங்கால மாமியார்!                                
 விகடபாரதி