குற்றம் கடிதல்



சற்றே கண்டிப்புடனும், நிறைய கோபத்துடனும் ஆசிரியை மாணவனை அறைந்துவிட, கீழே விழுந்த பையனின் உடல்நிலை பிரச்னைக்குள்ளாக... அதை முன்வைத்து முன்பின் நடக்கிற சம்பவங்களே ‘குற்றம் கடிதல்’!

அறிமுக முயற்சியிலேயே வியாபித்து நிற்கும் கமர்ஷியல் அம்சங்களை கருத்தில் வைக்காமல் துணிச்சல் காட்டியிருப்பதில் இயக்குநர் பிரம்மா உயர்ந்து நிற்கிறார். பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை முன்வைத்து, மனிதர்களின் பரிதாப நிலையையும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் அதைக் கையாள்வதையும் துணிச்சலாகச் சொன்ன விதம் நேர்மை.

மனோதர்மங்களையும் மனநிலைகளையும் அச்சு அசலாகப் படம் பிடித்ததிலும், தீர்ப்பு எதுவும் எழுதிவிடாமல் அதைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ்!பள்ளிக் கல்வியின் தாத்பர்யம்... மாணவர்களைக் கண்டிக்க வேண்டியது அவசியம்தானா... அவர்களை விட்டுப் பிடிக்கலாமா... ஆசிரியை, மாணவனை அடித்து கண்டித்தது சரியா... மாணவர்களின் நற்பண்புக்கு யார் பொறுப்பு என தயக்கத்தைக் களைய வைக்கும் உத்வேகக் கருத்துக்கள். பெற்றோர், மாணவர், இன்னும் எல்லாருமே உணர வேண்டிய ப(ா)டம்.

ராதிகா பிரசித்தாவை மறக்கவே முடியாது. பால்ய காலத்தில் நாம் பார்த்திருந்த பள்ளி ஆசிரியையை நினைவுக்குத் தருகிறார். அடி வாங்கி மயங்கி விழுந்த பையனுடன் தானும் மருத்துவமனைக்குப் போக நினைப்பது... மற்றவர்கள் தடுத்து பாதுகாப்பு கருதி அவரை வெளியூர் அனுப்பி வைப்பது... அங்கே இந்தச் சம்பவத்தை நினைத்து மருகித் தவிப்பது என எல்லா இடங்களிலும் ராதிகா முன் நிற்கிறார். இறுதியில் பையனுடைய தாயின் மடியில் கதறி விழும்போது ஏ கிளாஸ் நடிப்பு.

பையனின் தாய் மாமனான ஆட்டோ டிரைவர் பாவெல் நவநீதன் அபாரம்யா! நீதி கேட்டு பள்ளி நிர்வாகத்தில் முறையிடும் வேகம், ‘புரியிற மாதிரி பேசுங்க’ என டாக்டர்களிடமும் கேள்வி கேட்கிற கோபம், பிரார்த்தனை முடியும் வரை காத்திருந்து பெண்ணின் தாயிடம் விசாரிக்கிற விவேகம்... எல்லாமே அவருக்கு நன்றாகக் கை வருகிறது. இன்னும் பிரகாசிக்க வேண்டிய குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு ஒருத்தர் ரெடி!

தொட்டால் ஒடிந்து விடுகிற தோற்றத்தில் மகா இறுக்கமும், தவிப்பும், நடுக்கமும் கொண்ட அந்தப் பையனின் தாயை மறக்க முடியவில்லை. கதறி அழும் ராதிகாவை வாரி அணைத்து ‘பையன் வந்தால் போதும்’ என அவர் பொருமுவதைப் பார்த்து கண்ணீர் துளிர்க்காமல் இருப்பது கல் மனம் கொண்டவர்களுக்கே சாத்தியம்.

சுயநல சூழலையும், மனங்களையும் போகிற போக்கில் துகிலுரித்துக்கொண்டே போகிறது பிரம்மாவின் திரைக்கதை. சுட்டி குட்டிப் பையன் மாஸ்டர் அஜய் அசத்துகிறார். ராதிகாவின் கணவராக ராஜ்குமார்... சாந்தமும், பொறுமையும் கொண்ட அருமையான நடிப்பில் படு இயல்பு.

ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி, பாடல்களில் மனம் கரைகிறது. கவனிக்க வேண்டிய இசையமைப்பாளர்களின் வரிசையில் வந்துவிடுகிறார். மணிகண்டனின் கேமரா தேனிலவுக் காட்சியில் ஆரம்பித்து, கடைசி கட்ட பரபரப்பு வரை நீடித்து உழைக்கிறது.பள்ளிக்கூடங்களில் கலவர நிலவரம், பிரச்னைகளை முற்றுப் பெற விடாமல் நீட்டி முழக்கும் இன்றைய மனித இயல்பு... எல்லாவற்றிலும் அரசியலும், மதமும், அதிகாரமும் மூக்கை நுழைக்கிற நிலை எனக் காட்சிப்படுத்தி இருப்பதில் தமிழ் சினிமாவிற்கு ஒரு தரத்தைக் கொடுத்திருக்கிறது ‘குற்றம் கடிதல்’!

- குங்குமம் விமர்சனக் குழு